Published:Updated:

கறுப்புச் சட்டத்தை அடித்து நொறுக்குவோம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

பிரீமியம் ஸ்டோரி

திக பாலுக்கு ஆசைப்பட்டு ‘வெண்மைப் புரட்சி’ என்கிற பெயரில், கடந்தகாலங்களில் இந்தியாவில் பால் உற்பத்தித் திட்டம் அறிமுகமானது. இதற்காக வெளிநாட்டு மாடுகள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றின் மூலம் கலப்பின மாடுகளும் உருவாக்கப்பட்டன. இதனால், உலகிலேயே உன்னத இனங்களாகப் போற்றப்படும் இந்திய மாட்டினங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஆபத்து உருவானது. காங்கேயம், உம்பளாச்சேரி, சாகிவால், தார்பார்க்கர், ஓங்கோல் உள்ளிட்ட நம் பாரம்பர்ய கால்நடை இனங்கள் அபாய கட்டத்துக்குத் தள்ளப்பட்டன. ‘கலப்பின மாடுகளின் பால், நீரிழிவு, மூட்டுவலி உள்படப் பல்வேறு நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது’ என்கிற குற்றச்சாட்டுகள் ஓங்கி ஒலிப்பது தனிக்கதை!

இத்தகைய சூழலில், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார், ‘ஜீரோ பட்ஜெட் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர் போன்றோரின் பரப்புரைகளால் பாரம்பர்ய மாடுகளின் எண்ணிக்கை, இந்திய அளவில் சமீப ஆண்டுகளாகத்தான் கொஞ்சம்போல அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ‘பாரம்பர்ய கால்நடைகளை ஒரேயடியாக ஒழித்துக்கட்டிவிட்டு, முழுவதுமாக வெளிநாட்டு மாடுகள் மற்றும் கலப்பின மாடுகள் மட்டுமே இனி இந்தியாவில் இருக்கும்’ என்கிற சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன மத்திய மற்றும் மாநில அரசுகள். இதற்காகவே கடந்த ஜூலை மாதம் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் சத்தமில்லாமல் ‘தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்கச் சட்டம்-2019’ (Tamil Nadu Bovine Breeding Act-2019) என்பதை நிறைவேற்றியிருக்கிறது தமிழக அரசு.

கறுப்புச் சட்டத்தை அடித்து நொறுக்குவோம்!

பாரம்பர்ய பசுக்களின் இனச்சேர்க்கைக்காகப் ‘பொலிகாளை’கள் கிராமப்புறங்களில் காலங்காலமாக வளர்க்கப்படுகின்றன. இதற்கும் வேட்டு வைக்கும் வகையில் உருவாகியுள்ளது இச்சட்டம். ‘இனி வலிமையுடன் உடல் தகுதியுடன் பொலிகாளைகள் இருந்தால்தான் இனச்சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும். அரசின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பொலிகாளைகளை வளர்க்க முடியும்’ என்கிற சூழலை இச்சட்டம் உருவாக்கியுள்ளது. மேம்போக்காகப் பார்த்தால், நல்லதுதானே என்று நினைக்கத் தோன்றும். உற்றுப்பார்த்தால்தான், இச்சட்டத்திலிருக்கும் ஆபத்துகள் அதிர வைக்கும்.

‘‘பல்வேறு மாநிலங்களிலும் இத்தகைய சட்டம் ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. மற்ற மாநிலங்களிலும் இச்சட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுத் தரப்பிலிருந்து மறைமுகமாக வலியுறுத்தப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம், பன்னாட்டு, உள்நாட்டு சினைஊசி தயாரிப்பு நிறுவனங்கள் தரும் அழுத்தம்தான்’’ என்று குமுறுகிறார்கள் மாடுகளை வளர்த்துவரும் விவசாயிகள்.

கறுப்புச் சட்டத்தை அடித்து நொறுக்குவோம்!

‘‘நம் மாநிலத்தில் மாடுகளுக்குத் தேவையான கலப்பின மற்றும் பாரம்பர்ய சினைஊசிகளை அரசாங்கமே மலிவு விலையில் 10 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சினைஊசித் தயாரிப்பானது முழுமையாகத் தனியார் நிறுவனங்களின் வசம் சென்றுவிடும். ஒரு சினைஊசி 2,000 ரூபாய் வரையிலும்கூட விற்பனையாகும். ஒரு கட்டத்தில் பாரம்பர்ய கால்நடை இனங்களுக்கான சினைஊசியின் விலையை இஷ்டம்போல உயர்த்துவார்கள். பசு இனங்கள் மட்டுமே பிறக்கும் வகையிலும் சினைஊசித் தயாரிப்பைச் செய்வார்கள். காளைகள் இல்லாமல் போனால், ஊசிகளை மட்டுமேதான் நம்பியிருக்கவேண்டும் என்கிற கட்டாயத்தையும் உருவாக்குவார்கள். இதன்மூலமாகப் பாரம்பர்ய இன மாடுகளை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிடுவார்கள். வீரிய ஒட்டுரகம், பி.டி ரகம் என்று விதைகளை உருவாக்கி பாரம்பர்ய பயிர் விதைகளை ஒழித்ததுபோல, இதுவும் நடந்தேறும்’’ எனக் கால்நடை ஆர்வலர்கள் கதறுகின்றனர்.

விவசாயிகளே... நாம் விழித்துக்கொண்டால், நிச்சயமாக இச்சட்டத்தை அடித்து நொறுக்கமுடியும் என்பதுதான் கடந்தகால வரலாறு.

தி.மு.க ஆட்சிக் காலத்தில் ‘வேளாண் மன்றச் சட்டம்-2009’ என்ற பெயரில் இயற்கை விவசாயத்தை அழிக்கும் வகையிலான கறுப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாயிகள், இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து பசுமை விகடனும் தொடர்ந்து போர்க்குரல் எழுப்பியதால், அந்தச் சட்டத்தை அப்போதைக்கு நிறுத்திவைத்தார் முதல்வராக இருந்த கருணாநிதி. ‘நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும்’ என்று தொடர்ந்து குரல் கொடுத்தோம். அடுத்து, அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் அந்தச் சட்டத்திலிருக்கும் ஆபத்துகளை உணர்ந்து திரும்பப்பெற்றார் முதல்வராக இருந்த ஜெயலலிதா.

பருவமழை கைவிட்டாலும் விவசாயிகளைக் கைவிடாமல் காப்பாற்றி வருவது கால்நடைகள்தான். அத்தகைய கால்நடைகளை ஒழித்துக்கட்டும் வகையிலான சட்டத்தை, ஜெயலலிதாவின் பெயரால் இயங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் இந்த அ.தி.மு.க அரசு கொண்டுவந்திருப்பது கொடுமை. மேடைதோறும் ‘நான் விவசாயி’ என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்குத் துணைநிற்பது கொடுமையிலும் கொடுமை.

இந்தக் கறுப்புச் சட்டத்தை, இந்த அரசே முன்வந்து உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். இல்லையேல், தமிழக விவசாயிகள் கிளர்ந்தெழுந்து திரும்பப் பெற வைக்கவேண்டும்.

-ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு