Published:Updated:

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% உள் ஒதுக்கீடு பயனளிக்குமா?

நீட்
நீட்

`நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுபற்றி ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

மருத்துவப் படிப்பென்பது தமிழக மாணவர்களுக்கு பெருங்கனவு. கிராமப்புறத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த பல மாணவர்களும் இன்று தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள். தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு வலுவாக இருப்பதற்கு இந்த மருத்துவர்களின் பங்களிப்பு அளப்பரியது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகம். மருத்துவம் என்பது பணி என்பதைக் கடந்து பலதரப்பட்ட மக்களுக்கு செய்யப்படும் சேவையாகவே பார்க்கப்படுகிறது. ஏழை, பணக்காரர், கிராமப்புற மாணவர்கள் என எல்லா மாணவர்களும் மருத்துவம் படிக்கும் சூழல் தமிழகத்தில் நிலவியது.

நீட் (NEET) கட்டாயம்

நீட்
நீட்
ஓவியம்: சந்தோஷ் நாராயணன்

இந்த நிலையில் மருத்துவம் படிக்க வேண்டுமெனில், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆரம்பத்தில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அது எதுவும் பலனளிக்கவில்லை. தமிழகத்தில் 2016-17-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

நீட் தேர்வு ஆரம்பம் முதலே சர்ச்சைகளையும் குழப்பங்களையும் மாணவர்கள் மத்தியிலும் கல்வியாளர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி வருகிறது. நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி அனிதாவின் மரணம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கின. பல தரப்பட்ட போராட்டங்கள் நடந்தன. பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. மறுபுறம் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் பல இடங்களில் தொடங்கப்பட்டன. லட்சங்களில் கட்டணம் வசூலக்கப்படும் அந்தப் பயிற்சி மையங்கள் எளிய மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தன.

2018-ம் ஆண்டில் நீட் தேர்வின்போது தமிழகத்தில் போதுமான தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் ஒரு குறிப்பிட்ட அளவிலான மாணவர்கள் ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டு அங்கு சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது. 'தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டண கொள்ளை நடக்காது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பயனளிக்கும்' எனப் பல உத்தரவாதங்களோடு முன்வைக்கப்பட்ட நீட் தேர்வு, அதை சாத்தியப்படுத்தத் தவறியதாகக் கல்வியாளர்கள் குற்றம்சாட்டினார்கள். நீட் தேர்வின் குளறுபடிகளை அலசி ஆராய்ந்து ஜூனியர் விகடனில் எழுதப்பட்ட 'நீட் வைரஸ்' தொடர் அதன் உள்ளீடுகளை அம்பலப்படுத்தியது. தமிழக கிராமங்களின் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துமனைகள் எனத் தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பைக் கட்டிக்காத்த பலரும் நீட் தேர்வு எழுதாத, அரசுப் பள்ளிகளில் படித்த எளிய குடும்பத்து பிள்ளைகள். அந்தச் சமூக கட்டமைப்பை சீர் குலைக்கும் பாதையை நீட் தேர்வு உருவாக்குகிறது எனக் காத்திரமான விவாதங்கள் அந்தத் தொடரில் முன்வைக்கப்பட்டன.

கொரோனா அழுத்தம், பயிற்சியில்லை... நீட் தேர்வை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் மாணவர்கள்? #KnowNeetNoNeet

இதன் தொடர்ச்சியாக, `நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுபற்றி ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் தமது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வழங்கினர். இதன்படி தமிழக அரசு தற்பொது அவசர சட்டம் இயற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சமமற்ற சூழலை உருவாகி சமூகநீதியைக் கேள்விக்குள்ளாக்கும் நீட் தேர்வை எழுதுவதற்கான வாய்ப்பும் சூழலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இல்லை. அதற்கு எதிராக 'நீட் விலக்கு' நிலைப்பாடு வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கும் குரல்களுக்கும் மாறாக இப்படியான ஒரு தீர்மானம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது குறித்து கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள் எனக் கேட்டறிந்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஒரு அரசுப் பள்ளியில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருக்கக்கூடிய மாணவர்கள் நீட் தேர்வு எழுத வருவது என்பது, தனியார் பள்ளியில் படித்து வரும் ஒரு மாணவன் நீட் தேர்வு எழுதவதற்கு சமமாகாது. அரசுப் பள்ளியில் இருந்து வரும் மாணவர்களுக்கு நிச்சயம் சலுகைகள் தேவை...” என்கிறார் பேராசிரியர் டாக்டர் ரவிக்குமார். நீட் தேர்வில் உள்ள பிரச்னைகள் குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர் இவர்.

``சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்தங்கி உள்ளவர்கள் நீட் தேர்வு எழுத வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு சலுகைகள் கொடுக்க வேண்டியது அவசியம். இட ஒதுக்கீட்டை பார்ப்பதுபோலதான் இதையும் நாம் பார்க்க வேண்டும். மாணவர்கள் அனைவரும் சமம் என்றாலும் அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் வெவ்வேறானவை. இதன் மூலம் குறைந்தது 100 மாணவர்களாவது பயனடைவர்.

பேராசிரியர் டாக்டர் ரவிக்குமார்
பேராசிரியர் டாக்டர் ரவிக்குமார்

தனியார் பள்ளி மாணவர்களுக்கு, தனியாகப் பணம் பெற்றுக்கொண்டு பள்ளிகளிலேயே நீட் தேர்வுக்கான பயிற்சி தரப்படுகிறது. இந்தப் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் பொதுத் தேர்வு பற்றிக் கவலைப்படுவதில்லை. இத்தகைய வசதிகள் இல்லாததால் குறைந்தபட்ச மாணவர்களே அரசுப் பள்ளியிலிருந்து நீட் தேர்வு எழுதுகிறார்கள். அரசு தனியார் அமைப்புடன் கைகோத்து அவ்வாறு செய்ய முடியாது. ஆனால், தனியார் பள்ளிகள் தனியார் நீட் பயிற்சிகளுடன் இணைந்து இதைச் செய்கின்றன. தமிழக அரசாங்கத்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது. இவர்களால் மத்திய அரசை எதிர்த்து நிற்க முடியவில்லை.

அதனால்தான் அரசாங்கம் இந்த இட ஒதுக்கீடு முறையைக் கொண்டு வந்துள்ளது. இது ஒரு தற்காலிகமான தீர்வு மட்டும்தான்” என்கிறார் அவர்.

"தற்போது நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற அரசு மாணவர்களுக்கு முன்னுரிமை தருவதற்கான மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறது தமிழக அரசு. ஆனால், நீட் தேர்வெழுதி அதில் வெற்றி பெற கடுமையான பயிற்சி‌ தேவைப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவதேயில்லை. மீறி, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் கல்லூரியில் சேர இயலாத நிலை உள்ளதை நாம் காணமுடிகிறது. எனவே, இந்த மசோதா மூலம் அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறோம் எனும் எண்ணத்தில் அரசு இந்த மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது...” என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

``ஆனாலும் கூட நீட் தேர்வு மருத்துவத்தில் ஆர்வம் இருக்கிற, திறமை இருக்கிற பல மாணவர்களை வெளியேற்றுகிறது. அவர்களைக் கழித்துக்கட்டுகிறது என்பதே உண்மை.

இந்த மசோதா தேவையானது என்றாலும், தமிழக அரசு செய்ய வேண்டியது நீட் தேர்விலிருந்து முழுமையான விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாக்களைக் கொண்டு வருவதுதான். அதை விட்டுவிட்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு மாணவர்களுக்கு முன்னுரிமை, வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது பிரச்னையைத் திசைமாற்றச் செய்யும் செயல்.
பிரின்ஸ் கஜேந்திரபாபு

முழு நீட் விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாவை நிறைவேற்றும் வாய்ப்புகளை அரசியலமைப்புச் சட்டம் மாநில அரசுகளுக்கு தந்துள்ளது. நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையில்கூட மாநில அரசால் முழு நீட் விலக்கு பெறுவதற்கான வாய்ப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில், நீட் விலக்கு குறித்து மாநில அரசின் தலையீடு பற்றிய முழுமையான எந்தத் தீர்ப்பும் இதுவரை வரவில்லை. இதற்குமுன் வந்துள்ள தீர்ப்புகளில் மாநில அரசின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே, இவற்றையெல்லாம் பயன்படுத்தி முழு நீட் விலக்கிற்கான சட்ட மசோதாவைக் கொண்டுவந்து, குடியரசு தலைவரிடம் ஒப்புதல் வாங்கலாம். அதைவிட்டுவிட்டு புதுப்புது மசோதாக்களைக் கொண்டு வருவது பிரச்னையைத் திசை திருப்புவதற்கான வழிகளே தவிர வேறொன்றுமில்லை" என்றார்.

நீட் வைரஸ் - 20: வரலாற்றில் இடம் பெறுவாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

மருத்துவப் படிப்பு என்பது எளிய குடும்பத்து மாணவர்களுக்கு வாழ்நாள் கனவு. அந்தக் கனவு அவர்களுக்கானது மட்டுமல்ல. இந்தச் சமூகத்துக்குமானது. அந்தக் கனவின் வழியேதான் நம் சமூகத்தின் சுகாதார கட்டமைப்பும் சமூக நீதியும் நிலைபெற்றிருக்கிறது. அந்தக் கனவை சிதைக்காமல் வளர்த்தெடுக்க வேண்டியது அரசின் கடமை. அந்தக் கனவுதான் எதிர்கால தமிழகத்துக்குக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று.

அடுத்த கட்டுரைக்கு