Published:Updated:

நீட் தேர்வுக்கு எதிராக ராமநாதபுரத்தில் அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக ராமநாதபுரத்தில் அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வுக்கு எதிராக ராமநாதபுரத்தில் அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் சார்பில், ராமநாதபுரத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாணவர்கள், பொது நல அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க தலைமையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, பலகட்டப் போராட்டங்களை அறிவித்துள்ளன. முதல் கட்டமாக, திருச்சியில் தடையை மீறி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடந்தது.

அடுத்த கட்டமாக, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக இன்று மாவட்டத் தலைநகரங்களில் அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதையொட்டி, ராமநாதபுரம் அரண்மனை முன்பு கண்ட ன ஆர்ப்பாட்டம் நடந்தது.  முன்னாள் அமைச்சர்கள் தங்கவேலன், சத்தியமூர்த்தி, மாவட்டச் செயலாளர் திவாகரன், முன்னாள் எம்.பி., பவானி ராஜேந்திரன், காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் காசிநாததுரை, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் என்.கே.ராஜன் மற்றும் விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னதாக, இமானுவேல் குருபூஜை, தேவர் குருபூஜை ஆகிய நிகழ்ச்சிகளுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து, தி.மு.க மாவட்டச் செயலாளர் திவாகரன் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு அளித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது ஆஜரான போலீஸார், ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, இன்று நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ராமநாதபுரத்திலும் நடந்தது.