Published:Updated:

`105 மாணவர்கள், ஒரு ஆசிரியர் கூட இல்லை!'- பழங்குடியின மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி?

கொங்காடைய்யில் உள்ள பள்ளி
கொங்காடைய்யில் உள்ள பள்ளி

கடந்த ஆறு மாத காலமாக, ஆசிரியர் இல்லாமலேயே 105 மாணவர்கள் படித்துவருவதாகச் சொல்லப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையில் உள்ள கொங்காடை என்னும் மலைக்கிராமத்தில், ‘அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி’ செயல்பட்டுவருகிறது. 1993-ல் தொடக்கப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, 2017ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 250 மாணவர்கள் இப்பள்ளியில் படித்துவருகின்றனர். 1 முதல் 5-ம் வகுப்பு வரை மட்டும் 105 மாணவர்கள் படித்துவருகிறார்கள்.

இந்த 105 மாணவர்களுக்கும் ஒரே ஒரு பெண் ஆசிரியர் மட்டும்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரும், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மகப்பேறு விடுப்பில் சென்றிருக்கிறார். அதையடுத்து, கடந்த ஆறுமாத காலமாக ஆசிரியர் இல்லாமலேயே இந்த 105 மாணவர்களும் படித்துவந்திருக்கின்றனர். உயர்நிலைப் பள்ளிக்கு பாடமெடுக்கும் ஆசிரியர்கள், அவ்வப்போது வந்து குழந்தைகளுக்கு பாடமெடுத்துச் சென்றிருக்கின்றனர். இந்த விவகாரம் சமூக மற்றும் கல்வியியல் ஆர்வலர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது.

பள்ளியில் மாணவர்கள்
பள்ளியில் மாணவர்கள்

இதுகுறித்து, பழங்குடிகளுக்கான செயல்பாடுகளை முன்னெடுத்துவரும் சுடர் அமைப்பின் இயக்குநர் நடராஜ் அவர்களிடம் பேசினோம். ``பள்ளியில் ஆசிரியர்கள் இருக்கிறார்களா, வகுப்பறையில் பாடங்கள் நடத்தப்படுகின்றனவா, குழந்தைகள் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றனவா என எதையும் அரசு கண்டு கொள்ளாது.

ஆனால், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் என்கிறார்கள். பழங்குடியினக் குழந்தைகளுக்கு கல்வியில் தனித்த முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென்றே, பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இப்பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்திற்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டுமென கல்வி உரிமைச் சட்டம் சொல்கிறது. ஆனால் இங்கு, ஆசிரியரே இல்லாமல் 6 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுவருகின்றனர். இது ஒரு மிகப்பெரிய சமூக அநீதி” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``சமவெளிப் பகுதிகளில் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் பொருட்டு, மாலை நேர சிறப்பு வகுப்புகளை நடத்துகிறார்கள். ஆனால், இந்தப் பழங்குடியின மாணவர்களுக்குப் பள்ளி நேரத்திலேயே சரியான கல்வி கிடைப்பதில்லை. அப்படியிருக்க, இந்த மாணவர்கள் எப்படி மற்ற மாணவர்களைப்போல தேர்வெழுதி வெற்றிபெற முடியும்.

கொங்காடை அரசு பழக்குடியின உண்டு உறைவிடப்பள்ளி
கொங்காடை அரசு பழக்குடியின உண்டு உறைவிடப்பள்ளி

இப்படியான ஆசிரியர் பற்றாக்குறை குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கடந்த காலங்களில் பலமுறை புகார்களை வைத்திருக்கிறோம். ‘இந்தப் பள்ளிகள் எல்லாம் பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை’ என நழுவினார். அப்புறம் ஏன் இவர்களுக்கு பரீட்சை வைத்தே ஆவோம்னு வர்றீங்க? ஆசிரியர்கள் இல்லாமல் அந்த மாணவர்கள் எப்படித் தேர்வெழுதுவார்கள். தமிழகத்தில் உள்ள பல உண்டு உறைவிடப் பள்ளிகளிலும் இம்மாதிரியான நிலை இருக்கிறது. முதலமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு, உடனடியாக போர்க்கால அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் வாணிலட்சுமியிடம் பேசினோம். ``சமீபத்தில்கூட நான் அங்கு ஆய்வுக்குச் சென்றிருந்தேன். ஒரு ஆசிரியர் மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் இரண்டு ஆசிரியர்களை நியமித்திருக்கிறோம். ஆசிரியர் இல்லை என்று சொல்வதெல்லாம் பொய்" என்றார்.

பின் செல்ல