Published:Updated:

சென்னைப் பல்கலை அகராதியில் குளறுபடிகளா?

சென்னைப் பல்கலை அகராதியில் குளறுபடிகளா?

பிரீமியம் ஸ்டோரி

சென்னைப் பல்கலைக்கழகம் தன்னுடைய ஆங்கிலம்  தமிழ்ச் சொற்களஞ்சியத்தின் ஐந்தாம் மறு அச்சுப் பதிப்பை வெளியிட்டுள்ளது.

தொன்மை இலக்கியங்கள் வகையில், பழைமை போற்றுதலும் அவற்றை மறு அச்சுப் பதிப்புகளாகக் கொணர்தலும் அறிவின்பால்பட்ட செயலே. ஆனால், அகராதிகள் முற்றிலும் மாறுபட்ட வகையினதாகும். மொழியின் மாற்றங்களையும் வளர்ச்சி நிலைகளையும் படம்பிடித்துக் காட்டும் இவை, அவ்வப்போது புத்தாக்கம் செய்யப்பட வேண்டியன. இதுவே உலகெங்கும் காணும் நடைமுறையாகும். ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம் ஏறத்தாழ 50 ஆண்டுகளாகத் தனது அகராதி ஒன்றினை மேம்படுத்துதல் ஏதுமின்றி மறு அச்சுப் பதிப்புகளுக்கு உட்படுத்தி வருவது தவறானச் செயலாகும்.

சென்னைப் பல்கலை அகராதியில் குளறுபடிகளா?

மேலும், நமது பல்கலைக்கழக அகராதி ஒரு தனி வகையான பின்னணியை உடையது. இதன் சொல் -பொருள் மூலநூல், Concise Oxford English Dictionary (COD) நான்காம் பதிப்பாகும். (இது 1958 Edition எனப் பல்கலைக்கழகம் கூறுவது தவறான தகவலாகும்). இந்தப் பதிப்பு 1911-ல் வெளிவந்த ஆக்ஸ்ஃபோர்டு வரலாற்று முறை அகராதியை அடியொற்றியது. 1911-க்குப் பின் நிகழ்ந்த மொழி வழக்காறுகளும் அறிவுத் துறைகளின் வளர்ச்சிப் போக்குகளும் ஓரளவே இதில் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறாக, சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் சொல் தொகுதியும் பொருள் வரையறைகளும் அகராதிக் கட்டமைப்பும் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுப் பழைமை வாய்ந்தவை. இந்தப் பழைமை, பலதரப்பட்ட குறைபாடுகளை நமது பல்கலைக்கழக அகராதி மீது  திணித்துள்ளது. அவற்றுள் ஒன்றிரண்டு இங்குக் கோடிட்டுக் காட்டப்படுகின்றன.

ஏறத்தாழ 30 ஆண்டுகளாகத் தமிழில் வழங்கும் ணை, லை, னை, ளை ஆகிய வரிவடிவ மாற்றங்கள் இந்த அகராதியில் இல்லை. மொழியின் வரிவடிவத்தைப் பதிவு செய்வது அகராதியின் முதன்மையான பணிகளுள் ஒன்று என்பது உலகறிந்த உண்மை. நவீன அறிவியல் மற்றும் பிற அறிவுத் துறைகளின் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் ஆயிரக்கணக்கான சொற்களும்   (acid rain, aerobics, bullock-cart, cash card, cheque card, cholestral, credit card, AIDS, antivirus, app, ATM, mainstream, multimedia, blog, jinx, keyword, mainline, tsunami, bird flu, browser, camcorder, chat room etc) பொருள்களும் இதில் இடம்பெறாதது இதன் பயன்பாட்டு எல்லையை மிகவும் சுருக்கிவிடக் கூடும். குறைபட்ட, பிழையுற்ற பொருள் வரையறைகள் நூற்றுக்கணக்கில் இந்த அகராதி முழுவதும் பரவிக் காணப்படுகின்றன (accomplished ... பலவகைப்பண்புகள் நிறைந்த; arrest...பிடி; backfire... கால இடந்தவறித் தீப்பற்றுதல்; backlash...செவியீர்க்கும் அரவம்; bleep... வானொலி அடையாள ஒலி; blusher... நாணும் நங்கை; catwalk... ஒடுங்கு நடைபாதை; chairman தூக்கு நாற்காலியைச் சுமந்து செல்பவர்; deadline... கோடு;   disillusioned...அறிவுத் தெளிவுடைய;  handicap ... கூடுதலான சுமை; headhunter...காட்டுமிராண்டி; hectic...காய்ச்சல் உள்ள, முகம் சிவந்த; jargon...பிதற்றெலி, காட்டுமிராண்டிப் பேச்சு; kidney...குண்டிக்காய்; linguist..அயல்மொழி வல்லார்; பன்மொழி அறிஞர்).

சென்னைப் பல்கலை அகராதியில் குளறுபடிகளா?

இவற்றைவிட மிகவும் கவலைக்கு உரியவை, அகராதி ஆக்கக் கோட்பாடுகளுக்கு எதிரான, ஊக அடிப்படையிலான பொருள் விளக்கங்களாகும். Bluebeard என்ற சொல்லுக்கு COD தரும் பொருள், ‘a man who murders his wives’ என்பது. நமது அகராதி தரும் பொருள், ‘பல மனைவியர்களை உடைய கணவன்’ என்பதாகும். Living room என்பதன் COD பொருள், ‘a room in a house for general everyday use’ என்பது. நமது அகராதி தரும் பொருள், ‘பகல்நேர அறை’ என்பதாகும். இத்தகைய குறைபாடுகள் பல நூறாக விரிகின்றன. இவையே அன்றி, ஆங்கிலத்தின் மொழி வளத்துக்கும் பயன்பாட்டுப் புதுமை நலத்துக்கும் பெரிதும் துணையாக அமையும் மரபுத்தொடர்களும், துணை வினைகளும், முன்னுருபுகளும் முன்னொட்டு/பின்னொட்டுகளும் சென்னைப் பல்கலை அகராதியில் போதுமான புரிதலும் ஆளுமையும் இன்றிக் கையாளப்பட்டிருக்கக் காண்கிறோம்.

மேற்கண்டவற்றினும் கடுமையான பிழைகளும் இந்த அகராதியில் ஆங்காங்கு நிகழ்ந்துள்ளன. Africander, Africaner என்னும் இரண்டு சொற்களும் ஒரே பொருளுடைய மாற்று வடிவங்களாகக் கருதப்பட்டு ஒரே பதிவில் ‘வெள்ளையருக்குப் பிறந்த தென்னாப்பிரிக்கக் குடியினர்’ எனப் பொருள் தரப்பட்டுள்ளன. உண்மையில் இவை முற்றிலும் வேறுவேறான பொருளுடைய சொற்கள் என்பது மட்டுமன்று; இங்கு முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டிய ஒரு வரலாற்றுப் பிழையும் செய்யப்பட்டுள்ளது. Africander என்பது ‘தென்னாப்பிரிக்க இன செம்மறியாட்டை அல்லது நீண்ட கொம்புடைய கால்நடை வகை’யைக் குறிக்கும் (an animal of a South African breed of sheep or longhom cattle - COD). Afrikaner என்பது பெரும்பாலும் டச்சுக் கால்வழி வந்த, ஆப்பிரிக்கான்ஸ் மொழி பேசும் தென்னாப்பிரிக்கரைக் குறிக்கும் (a person from south Africa, usually of Dutch origin, whose first language is Afrikaans - Oxford Advanced Learner’s Dictionary).

சென்னைப் பல்கலை அகராதியை ஒரு நோக்குநூலாகப் பயன்படுத்தித் தமிழ்நாடு அரசின் கலைச்சொல்லாக்கக் குழு 14 தொகுதிகளைக் கொண்ட 'கலைச்சொல் பேரகராதி’ என்னும் நூலை உருவாக்கியுள்ளது. இறுதியாக இன்றைய இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் 150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அறிவாய்வு அனுபவம் உடையதாகவும் உள்ள இந்தப் பல்கலைக்கழகத்துக்கு அறிவுநூல் பதிப்பிப்பு நெறிமுறைகள்கூடத் தெரியாமல் இருப்பது தமிழகத்தின் அவப்பேறு என்றே கூறலாம். மேற்கூறிய அகராதிப் பக்க வைப்புமுறை அட்டையில் உள்ள தலைப்பு 'ஆங்கிலம் - தமிழ் சொற்களஞ்சியம்’ என்பதாகும். தலைப்புப் பக்கத்தில் இந்தத் தலைப்பே இல்லை. இன்னும் பலப்பல குளறுபடிகள்.

சென்னைப் பல்கலை அகராதியில் குளறுபடிகளா?

இந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை வெளியானது (22-06-2014). அதற்குப் பல்கலைக்கழகம் அளித்த பதிலில், 'இது மாதிரிப் பதிப்பு. 500 பிரதிகள்தான் அச்சடித்து உள்ளோம். விரைவில் தவறுகள் திருத்தப்படும்’ என்று விளக்கம் தந்தது. ஆனால், 25,000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. அவை அத்தனையுமே மாதிரிப் பதிப்புகள்தானா?

இந்த அவலத்துக்கு அவலம் சேர்க்கும் மற்றோர் உண்மையும் உண்டு. பல்கலைக்கழக மானியக் குழுவினர் முதுமுனைவர் நல்கையின் கீழ் இந்த அகராதியும் Tamil Lexicon-னும் மூன்று ஆண்டுகள் (2002-2005) முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு, ஆய்வறிக்கை பல்கலைக்கழகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் கட்டுரையாளருக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் D.Litt பட்டமும் வழங்கியுள்ளது.

எங்குச் சென்றுகொண்டிருக்கிறது சென்னைப் பல்கலைக்கழகம்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு