Published:Updated:

''குருப்-4, வி.ஏ.ஓ தேர்வுகள் ஒன்றிணைப்பு..!'' பாடத்திட்டத்திலும் அதிரடி மாற்றம்

''குருப்-4, வி.ஏ.ஓ தேர்வுகள் ஒன்றிணைப்பு..!'' பாடத்திட்டத்திலும் அதிரடி மாற்றம்
''குருப்-4, வி.ஏ.ஓ தேர்வுகள் ஒன்றிணைப்பு..!'' பாடத்திட்டத்திலும் அதிரடி மாற்றம்

வி.ஏ.ஓ மற்றும் குருப் -4 தேர்வுகளை ஒன்றிணைத்து ஒரே தேர்வினை நடத்திடவும் தேர்வுக்கான பாடத்திட்டங்களை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையச் செயலாளர் எம்.விஜயகுமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குருப் 4 - தேர்வில் அடங்கிய பதவிகளுக்கும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். குருப் 4 மற்றும் வி.ஏ.ஓ தேர்வுகளைத் தனித்தனியே நடத்தும் போது குருப் 4 தேர்வுக்கு 15 லட்சம் பேரும் வி.ஏ.ஓ தேர்வுக்கு 12 லட்சம் பேரும் விண்ணப்பிக்கிறார்கள். அந்த விபரங்களை காணும் போது வி.ஏ.ஓ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் 60 சதவிகித அதே விண்ணப்பதாரர்களும் குருப் 4 தேர்வுக்கும் விண்ணப்பிக்கிறார்கள். 

இரண்டு தேர்வுகளையும் தனித்தனியே நடத்தும் போது ஒவ்வொரு தேர்வுக்கும் சுமார் 15 கோடி ரூபாய் வரை செலவாகிறது. மேலும், தேர்வாணைய பணியாளர்களுடன் இணைந்து 32 மாவட்டங்களில் வருவாய்த்துறை, கருவூலத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் காவல் துறை பணியாளர்களும் சேர்ந்து பணியாற்ற வேண்டியது உள்ளது. இதனால் பணம், மனித வளம், கால விரையமும் கூடுதலாக ஏற்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இரண்டுமுறை விண்ணப்பக் கட்டணம் செலுத்தி தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டியது உள்ளது. தனித்தனியே தேர்வுக்கு தயார் செய்யவும் வேண்டியது உ ள்ளது.

நடந்து முடிந்த தேர்வுகளை கூர்நோக்கும் போது 20 சதவிகிதம் பேர் ஒர் தெரிவிலிருந்து மற்றொரு தெரிவினை தேர்வு செய்வது தெரிய வருகிறது. இதனால் 20 சதவிகித காலிப்பணி இடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டி இருக்கிறது. இவ்விரண்டு தேர்வுகளையும் ஒரே அறிவிக்கையில் வெளியிட்டு ஒரே தேர்வாக நடத்துவதன் மூலம் விண்ணப்பதாரர்கள் இரண்டு முறை தேர்வு  எழுதுவது இருமுறை சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருவது இருமுறை கலந்தாய்வுக்கு வருவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. மேலும், 6 மாத கால அளவு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமின்றி தேர்வாணையத்திற்கும் காலதாமதம் மற்றும் பண விரையம் தவிர்க்கப்படுகிறது.

மற்ற பதவிகளில் அந்தந்த பதவிக்கான பணிப்பயிற்சி அளிப்பது போல வி.ஏ.ஓ பணிப்பயிற்சி தனியே அளிக்கப்படுகிறது. இதனால், இதுகுறித்த பகுதி, போட்டித்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கருதப்படுகிறது. இந்த காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த இரண்டு தேர்வுகளையும் பொதுவான ஒரே தேர்வாக (CCSE 4) நடத்துவதன் மூலம், தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட்டு விண்ணப்பதாரர்கள் விரும்பும் பதவியினை கலந்தாய்வு மூலம் தேர்ந்தெடுக்க வழிவகை செய்யலாம் என முடிவு செய்து அறிவிக்கை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்று கூறியுள்ளார்.