Published:Updated:

பொம்மலாட்டம் மூலம் டெங்கு விழிப்பு உணர்வு! - அசத்தும் கரூர் அரசுப் பள்ளி #CelebrateGovtSchools

பொம்மலாட்டம் மூலம்  டெங்கு விழிப்பு உணர்வு! - அசத்தும் கரூர் அரசுப் பள்ளி #CelebrateGovtSchools
பொம்மலாட்டம் மூலம் டெங்கு விழிப்பு உணர்வு! - அசத்தும் கரூர் அரசுப் பள்ளி #CelebrateGovtSchools

மிழகத்தில் அடித்துத் துவைத்துக்கொண்டிருக்கும் அடைமழை, பிரேக்கிங் நியூஸ்களாக மாறி, டெங்குவை கடைசிப் பக்க செய்தியாகிவிட்டது. அரசும் தனியார் அமைப்புகளும் டெங்கு தடுப்புப் பணிகளை தள்ளிவைத்துவிட்டு, மழை பாதிப்புப் பணிகளுக்கு 'ஜம்ப்' ஆகிவிட்டார்கள். ஆனால், டெங்கு தொடர்ந்தபடிதான் இருக்கிறது. அடைமழையால் பல இடங்களில் தண்ணீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. அதில் எவ்வளவு கொசுக்கள் வளரும் என்று கணக்குப் பண்ணிக்கொள்ளுங்கள். இந்நிலையில், ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைந்து, பொம்மலாட்டம் வாயிலாகக் கிராம மக்களுக்கு டெங்கு பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். 

ரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணையில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிதான் இந்தப் பணியில் இறங்கியிருக்கிறது. நாம் சென்றபோதும், பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஜோதி என்ற பெண்ணின் திருமணமே நிற்பது போலவும், ஜோக்கரும் அவரது பாட்டியும் சேர்ந்து டெங்கு கொசு உருவாகக் காரணமான குப்பைகள், சாக்கடை போன்றவற்றை சுத்தம் செய்வதுபோலவும் நாடகம் தொடர்ந்தது. ஊர்மக்களுக்கு அரசு கழிப்பறை கட்ட 12,000 ரூபாய் மானியம் தருவதை விளக்கி, அவற்றைக் கட்ட ஏற்பாடு செய்வதோடு, நின்றுபோன திருமணத்தை நடத்திமுடிப்பதாக கதை முடிந்தது. 

பொம்மலாட்டத்தின் கேரக்டர்களுக்கு இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் முரளி (ஜோக்கர்), அருள்குமார் (மாப்பிள்ளை), சுகன்யா (பாட்டி) உள்பட மாணவ, மாணவிகளே பின்னணி குரல் கொடுத்தனர். இறுதியில், திருமணத்துக்கு வந்த உறவினர்களுக்கு மலைவேம்பு குடிநீரை விருந்தாகக் கொடுப்பதுபோல, பார்வையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பள்ளியின் ஆசிரியர் மனோகர், "இந்த வெள்ளியணை ஊர் மிகவும் பின்தங்கிய பகுதி. கிராமத்தில் வசிக்கும் மக்கள் படிப்பறிவு அற்றவர்கள். எந்த நோய் என்றாலும் கசாயம் குடிச்சுட்டுப் படுத்துவிடுபவர்கள். அதனால், டெங்கு பற்றி போதிய விழிப்புஉணர்வு இல்லாமல் அல்லல்பட்டு வந்தனர். மாவட்ட நிர்வாகம் இந்தக் கிராமத்திம் மருத்துவ முகாம் நடத்தியதால், மக்களிடம் கொஞ்சம் விழிப்புஉணர்வு வந்துள்ளது. அதை இன்னும் தெளிவாகப் புரியவைக்கும் நோக்கத்துடன் பல விஷாய்ங்களைச் செய்துவருகிறோம். ஏற்கெனவே, மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு வீட்டுக்கு வீடு கழிப்பிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தோம். இங்கே முன்பு ஊரைச் சுற்றி சீமை கருவேல மரங்கள் இருந்துச்சு. பொதுமக்கள் அங்கேதான் இயற்கை உபாதைகளைக் கழிப்பார்கள். மாணவர்கள் மற்றும் ஊர் இளைஞர்கள் உதவியோடு சுகாதாரத்தின் அவசியத்தைப் புரியவைத்தோம். 

கரூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் இருந்துச்சுங்கிறதை மக்களுக்கு எந்த வடிவத்தில் சொல்வது என யோசித்தோம். மாணவர்கள் மூலமாகச் சொல்வதால், பொம்மலாட்டத்தைக் கையில் எடுத்தோம். அதோடு, அழியும் நிலையில் உள்ள பொம்மலாட்டம் கலை பற்றியும் மாணவர்களுக்குத் தெரியப்படுத்தியதாக இருக்கும் என நினைத்தோம். அதற்குச் சரியான பலன் கிடைச்சிருக்கு. இதற்கான பொம்மை, உடை, அமைப்புகளை எங்க வழிகாட்டுதலில் மாணவர்களே தயாரிச்சாங்க. கதையை மட்டும் நாங்க ரெடி பண்ணினோம். எல்லோரிடமும் இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கு. இந்த ஒன்றியத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கும் போய் டெங்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை நடத்தலாம்னு இருக்கோம்'' என்றார். 

இனி, கடினமான பாடங்களையும் இந்தப் பொம்மலாட்ட முறையில் நடத்தவும் முடிவுசெய்திருக்கிறார்கள். ''கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மதிப்பீடு செய்ய இந்தப் பொம்மலாட்ட முறையைப் பயன்படுத்த போறோம். கவனச்சிதறல் இல்லாமல் மாணவர்கள் பாடங்களைப் புரிஞ்சுப்பாங்க. மெல்லக் கற்கும் மாணவர்களும் அதிக மதிப்பெண் எடுப்பாங்க என்ற நம்பிகை வந்திருக்கு. பள்ளியின் தலைமை ஆசிரியர் தர்மலிங்கம், சக ஆசிரியர் வெங்கடேசன் ஒத்துழைப்போடு இதைத் தொடர்வோம்" என்றார் மனோகர் சந்தோஷமாக.