Published:Updated:

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நியூயார்க்கில் நிதி திரட்டும் விழா!

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நியூயார்க்கில் நிதி திரட்டும் விழா!
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நியூயார்க்கில் நிதி திரட்டும் விழா!

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக தமிழ் அமைப்புகள் சார்பில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிதி திரட்டும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. 
 

 
அமெரிக்காவில் இருக்கும் உலகின் மிக முக்கியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று, ஹார்வர்டு பல்கலைக்கழகம். அங்கு தமிழ் இருக்கை அமைப்பது உலகத் தமிழர்களின் நீண்டகால கனவாகும். பல்கலைக்கழகம் ஒன்றில், மொழிக்கான இருக்கை ஏற்படுத்தப்படுவது, அந்த மொழிபற்றி ஆய்வு மேற்கொள்வதற்கும் அதன் சிறப்புகளை உலக அரங்கில் எடுத்துச்செல்வதற்கும் உதவும். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.40 கோடி தேவைப்படுகிறது. அதில், ரூ.10 கோடியை தமிழக அரசு அளித்துவிட்டது. கமல்ஹாசன், விஷால் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் நிதியளித்தனர். இந்நிலையில், தமிழ் இருக்கைக்காக அமெரிக்க வாழ் தமிழர்கள் நியூயார்க் நகரில் நிதி திரட்டும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.

நியூயார்க் கார்டன் சிட்டி பகுதியில் உள்ள அக்பர் உணவகத்தில் கடந்த 7-ம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியில் நியூயார்க் நகர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் வாழும் தமிழ் மக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிதி திரட்டும் நிகழ்வினை நியூயார்க் தமிழ்ச் சங்கம், நியூயார்க் தமிழ் அகாடமி, தமிழ்நாடு அறக்கட்டளையின் நியூயார்க் கிளை, முத்தமிழ் முன்னேற்ற மன்றம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இணைந்து நடத்தினர். விழாவில் ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய தலா 5 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி அளித்த மருத்துவர் ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம் ஆகியோர் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஜானதன் ரிப்ளி, நியூயார்க் சிடோனிபுருக் கல்லூரியைச் சேர்ந்த டெக்ஸ்டர் பெயிலி மற்றும் யுனிவர்சிட்டி ஆப் பென்சில்வேனியாவின் முனைவர். வாசு ரங்கனாதன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். 

ஹார்வர்டு தமிழ் இருக்கைகுறித்த புரிதலை மக்களுக்கு அதிகரிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் நியூயார்க் தமிழ் அகாடமியின் முனைவர் பாலா சுவாமிநாதன், வாசு ரங்கநாதனுடன் கலந்துரையாடல் நிகழ்வொன்றை நடத்தினார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் இதனால் தமிழ் மொழிக்கு ஏற்படும் பயன்கள் என்னென்ன போன்ற கேள்விகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. 

மதுரையில் வாழ்ந்த நாள்களில் கிடைத்த அனுபவங்களை உற்சாகமாக தமிழ் மொழியில் பகிர்ந்துகொண்ட ஜானதன் ரிப்ளி, "ஓரம்போ, கண்ணே கலைமானே" போன்ற சில தமிழ்ப் பாடல்களைப் பாடி பார்வையாளர்களைக் கவர்ந்தார். டெக்ஸ்டர் பெயிலி, தனது உரையில் தமிழ்ச் சமூகம் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி சிலாகித்தார். பாலா சுவாமிநாதன் பேசுகையில், நியூயார்க் சிடோனிபுருக் கல்லூரியில் தங்கள் பெற்றோர் பெயரில் அமைத்திருக்கும் தமிழ் இருக்கைக்கு நன்றி பாராட்டினார். சிறுவர்களின் பறை இசை நிகழ்ச்சி மற்றும் ’’ஆளப்போறான் தமிழன்’’ பாடலுக்கான நடனம் ஆகியவை விழாவில் கவனம் ஈர்த்தன. இந்த நிகழ்வில் சுமார் 1,25,000 அமெரிக்க டாலர்கள் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதியாகத் திரட்டப்பட்டது.