Published:Updated:

இறுக்கமான முகம்... திருவாசகம் புத்தகம்... கணபதியின் தற்போதைய நிலவரம்!

குருபிரசாத்
இறுக்கமான முகம்... திருவாசகம் புத்தகம்... கணபதியின் தற்போதைய நிலவரம்!
இறுக்கமான முகம்... திருவாசகம் புத்தகம்... கணபதியின் தற்போதைய நிலவரம்!

உதவிப் பேராசியர் பணிக்கு லஞ்சம் பெற்றதற்காக, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதற்கு இடைத்தரகராக செயல்பட்ட வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், தொலைதூர கல்வி இயக்குநராக இருந்த மதிவாணன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, துணைவேந்தர் பொறுப்பில் இருந்து கணபதியை,  கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பணியிடை நீக்கம் செய்தார். இதனிடையே, கணபதியை கஸ்டடியில் வைத்து விசாரிப்பதற்காக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தாக்கல் செய்த மனு, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தன்னை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க கணபதி எதிர்ப்பு தெரிவித்தார். குறிப்பாக, "நான் ஏற்கெனவே இதுகுறித்து போலீஸாரிடம் விளக்கம் அளித்துள்ளேன்" என்றார். இதைத்தொடர்ந்து, போலீஸார் மற்றும் கணபதி தரப்பிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டது. பின்னர், இந்த மனு மீதான தீர்ப்பு மதியம் 3.30 மணிக்கு வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கணபதி தனது கையில் திருவாசகம் புத்தகத்துடன் நீதிமன்றம் வந்திருந்தார். அவ்வபோது அந்த புத்தகத்தை படித்துவிட்டு, நடப்பதை இறுக்கமான முகத்துடன், கூர்ந்து கவனித்தபடி இருந்தார் கணபதி. கணபதிக்கு, எப்போதுமே திருவாசகம் படிக்கும் பழக்கம் உள்ளது. பல்கலைக்கழகத்தில் தனது டேபிளில் எப்போதும் திருவாசகம் புத்தகத்தை வைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.