Published:Updated:

5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் 'டீன்'னுக்கு எதிரான புகார்! கொந்தளிக்கும் பெரியார் பல்கலை பேராசிரியர்கள்

வீ கே.ரமேஷ்
VIJAYAKUMAR M
5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் 'டீன்'னுக்கு எதிரான புகார்! கொந்தளிக்கும் பெரியார் பல்கலை பேராசிரியர்கள்
5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் 'டீன்'னுக்கு எதிரான புகார்! கொந்தளிக்கும் பெரியார் பல்கலை பேராசிரியர்கள்

``சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்  'டீன்'னாக பணியாற்றி வரும் மூத்த பேராசிரியர் கிருஷ்ணகுமார் மீது ஊழல் குற்றச்சாட்டை பல்கலைக்கழக நிர்வாகம் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் கொடுத்து 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஊழலை ஊக்கப்படுத்துவதுபோல இருக்கிறது'' என்கிறார்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள்.

இதுபற்றி பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் விசாரித்தபோது, ''சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2004 முதல் இயற்பியல் துறை தலைவராக பேராசிரியர் கிருஷ்ணகுமார் இருந்து வருகிறார். இவர் தன் துறையின் அறிவியல் ஆராய்ச்சிக்காக சி.எஸ்.ஐ.ஆர்., டி.எஸ்.டி., பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) போன்றவற்றில் இருந்து நிதி உதவி பெற்றுள்ளார். அவர் அந்த நிதியைப் பயன்படுத்துவதற்காக போலியான ரசீதுகளை தயார் செய்து பல்கலைக்கழகத்திடம் சமர்ப்பித்து பல லட்சம் மோசடி செய்ததாக அப்போதைய பதிவாளர் அங்கமுத்து கண்டுபிடித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் செய்தார். அந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வுசெய்து போலி ரசீது என உறுதியானதை அடுத்து அவர் மீது முதல் தகவல் அறிக்கையை 2013-ம் ஆண்டு தாக்கல் செய்தனர்.

கைது நடவடிக்கைக்குப் பயந்து கிருஷ்ணகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். அவர் செய்த குற்றத்துக்காக பல்கலைக்கழகம் அவரை பணியிடை நீக்கம் செய்தது. பிறகு அவர் மீது எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் இரண்டே நாளில் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியில் அமர்த்தியது. இச்சம்பவம் பெரியார் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இன்று வரை அவர் மீது எந்தவித விசாரணைக் கமிஷனும் அமைக்கவில்லை. மாறாக அவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்தின் மிக முக்கியப் பொறுப்புகளான டீன் பதவி கொடுத்து அழகு பார்த்து வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையும்

இவர் மீதான குற்றச்சாட்டுக்கு இன்று வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருக்கிறது. இதைப் பார்க்கும்போது பல்கலைக்கழக நிர்வாகமும், லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக அரசும் ஊழலை ஊக்கப்படுத்தி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது'' என்கிறார்கள்.

இதுபற்றி மூத்த பேராசிரியரும், 'டீன்'னுமான கிருஷ்ணகுமார், ''என்னைப் பலி வாங்கும் நோக்கத்துக்காக அந்தப் புகார் கூறப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. விசாரித்து அரசுக்கு தாக்கல் செய்துள்ளார். என்னைப் பற்றி பல்கலைக்கழகத்திலும் மாணவர்களிடமும் விசாரித்தால் தெரியும். நான் எந்தவிதமான தவறுகளையும் செய்யவில்லை. நிதி பெறப்பட்டதற்கான ஆவணங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து இருக்கிறேன்'' என்றார்.