Published:Updated:

150 ஆசிரியர்கள் மயக்கம்... ஐந்து வயது மகளுக்கு ஜூரம்... தீவிரமாகும் ஆசிரியர் போராட்டம்!

150 ஆசிரியர்கள் மயக்கம்... ஐந்து வயது மகளுக்கு ஜூரம்... தீவிரமாகும் ஆசிரியர் போராட்டம்!
150 ஆசிரியர்கள் மயக்கம்... ஐந்து வயது மகளுக்கு ஜூரம்... தீவிரமாகும் ஆசிரியர் போராட்டம்!

150 ஆசிரியர்கள் மயக்கம்... ஐந்து வயது மகளுக்கு ஜூரம்... தீவிரமாகும் ஆசிரியர் போராட்டம்!

நுழைவு வாசலில் நின்ற ஒரு ஆம்புலன்ஸில், மயங்கிய நிலையில் உள்ள ஒருவரை ஸ்டெச்சரில் கொண்டு வந்து ஏற்றுகிறார்கள். சைரன் ஒலிக்க, அது புறப்பட்டதும், சற்று தூரத்தில் நின்ற அடுத்த ஆம்புலன்ஸ் தயாராக வந்து நிற்கிறது. இந்தக் காட்சியை நாம் பார்த்தது ஏதோ மருத்துவமனை வாசலில் அல்ல. ஆசிரியர்கள் போராடிக்கொண்டிருக்கும் பள்ளிக்கூடத்தில்தான். உள்ளே நுழைந்தால், இருபுறமும் மர நிழலில் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். நடுவே இருக்கும் சிறிய மேடையில் ஒருங்கிணைப்பாளர்கள் அவ்வப்போது செய்திகள், தகவல்களை அறிவிக்கின்றனர். இயக்க, கட்சித் தலைவர்கள் வந்து போராட்டத்திற்கு வாழ்த்துகளைக் கூறியபடி இருக்கின்றனர். 

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் இருந்தது, ஆறாவது ஊதியக் குழுவுக்குப் பிறகு மாற்றம் அடைந்தது. 2009 ஆண்டிலிருந்து பணிக்குச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை ஊதியம், அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்களை விடவும் குறைவாகிவிட்டது. இதனை எதிர்த்து, 2009 - Tet இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக, சம வேலை சம ஊதியம் எனும் ஒற்றைக் கோரிக்கையோடு,  கடந்த 23-ம் தேதி பள்ளிக்கல்வித் துறை வளாகத்தின் முன், போராடத் தொடங்கினர். அவர்களைக் கைதுசெய்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்தது போலீஸ். ஆனால், அந்த இடத்தையே தங்களின் போராட்டக் களமாக மாற்றிக்கொண்டனர் ஆசிரியர்கள். அங்கிருந்து அவர்களை வெளியேற்ற எடுத்த போலிஸாரின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அதனால், அடுத்த நாள் நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களைக் கொண்டுவந்துவிட்டனர். அங்கும் தங்களது போராட்டத்தை வீரியத்துடன் தொடர்ந்துவருகின்றனர் ஆசிரியர்கள். அங்கே நாம் ஆசிரியர்களிடம் பேசியதிலிருந்து.... 

"ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து மாவட்ட வாரியாகப் பஸ்ஸில் ஏறச் சொல்லும்போதே, மற்றவர்களின் மொபைல் எண்களை வாங்கி வைத்துக்கொண்டோம் . எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் , மீண்டும் ஒன்றுகூடி போராட்டம் செய்வது என்பதில் உறுதியாக இருந்தோம். அதைத் தெரிந்துகொண்ட பின்னரே போலீஸார் இங்கே அழைத்துவந்தார்கள். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஆனால், ஏழாயிரத்துக்கும் மேலுள்ள ஆசிரியர்கள் பாத்ரூம் போகக்கூடச் சரியான வசதி இல்லை. பாத்ரூமில் எப்போது தண்ணீர் வருமென்றே தெரியாது.  பசியில் மயக்கமாகக்கூட வருது. ஆனாலும் மயங்கிடக்கூடாதுன்னு உறுதியாக இருக்கிறேன்." என்கிறார் ஆசிரியை பிரீத்தி.

மகளைத் தூக்கியவாறே சென்றுகொண்டிருந்த ஆசிரியை, " குழந்தைகளுக்குத் தேவையான பால், சாப்பாடு எல்லாம் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்துகொடுக்கிறாங்க. நாங்க சமாளிச்சுப்போம்" என்கிறார் புன்சிரிப்போடு. ஆனாலும், அவரின் முகத்தில் அவ்வளவு அசதி. ஆயிரக்கணக்கில் திரண்டிருப்பவர்களில் பெரும்பகுதியினர் பெண்கள். அதனால், பல குழந்தைகளை போராட்டக் களத்தில் பார்க்க முடிந்தது. ஒரே இடத்தில் அமர்ந்திருக்க முடியாமல், ஓடியாடும் குழந்தைகளைச் சமாளித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர் பெண்கள். போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தல், வெயிலை முழுமையாக மறைக்க முடியவில்லை.

"யாராவது அவங்கக்கூடப் போங்க'னு சத்தம் கேட்டு, திரும்பினால், ஒருவர் கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க  முழு மயக்கத்துக்கு உள்ளாகிவிட்டார். அவரைத் தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர் . பள்ளியின் வகுப்பறைகளில் ஆசிரியர்களே நிறைந்திருந்தனர். மேடையின் பின்பக்கம் இருக்கும் பள்ளி அலுவக அறைகளில் மயக்கமடைந்து சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். மருத்துவர்களும் சக ஆசிரியர்களும் அவர்களுக்கு உதவியாக இருக்கின்றனர். மயக்கமடைந்தவர்களின் எண்ணிக்கை 150-ஐ கடந்துவிட்டது. அவர்களில் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். 

மிகவும் சோர்வாகிப்போன ஓர் ஆசிரியை கையில் டிரிப்ஸ் ஏற்றப்பட்டு, படுத்திருக்க, அவரின் ஐந்து வயது மகள், அம்மாவை இறுக்கியணைத்தவாறே தூங்கிக்கொண்டிருந்தாள். "என் பேரு மகேஸ்வரி, நாமக்கல் குமாரபாளையம் பகுதியில டீச்சராக இருக்கேன். இது எம் பொண்ணு. காலையிலிருந்தே  ஜூரம். ஹாஸ்பெட்டலுக்கு அழைச்சிட்டு போனப்ப, சாதாரண காய்ச்சல்தான். மாத்திரை கொடுங்கன்னு சொல்லிக் கொடுத்தாங்க. இப்ப காய்ச்சல் அதிகமாயிட்டுனு நினைக்கிறேன்" எனச் சொல்லி, மகளின் நெற்றியில் கை வைத்துப்பார்க்கிறார். மகள் முனகிக்கொண்டே  இன்னும் இறுக்கமாக அம்மாவைக் கட்டிக்கொள்கிறாள். 

 'சம வேலைக்கு சம ஊதியம்' என்று எழுதியிருந்த அட்டையைத் தாங்கியிருந்த ஆசிரியை சொர்ணதீபம், "நாங்க எங்களுக்கான உரிமையைத்தானே கேட்கத்தான் போராடிட்டு இருக்கோம். இருபத்தி மூணாம் தேதி டிபிஐ ஆபிஸில் உண்ணாவிரதத்தை ஆரம்பிச்ச எங்களை, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைச்சி வெச்சாங்க. அடுத்த நாள் நைட் எங்களை எல்லாம் வெளியே போகச் சொன்னாங்க. நிறைய பேர் குழந்தைகளோடு வந்திருக்கோம். அதனால, விடியற வரைக்கும் இருந்துட்டு, அதுக்கப்பறம் வெளியே அனுப்புங்கனு சொன்னோம். அதையும் கேட்கல, பிறகு, இங்கே அழைச்சுட்டு வந்துட்டாங்க. எங்களோட கோரிக்கை நிறைவேற வரைக்கும் போராடிட்டே இருப்போம்" என உறுதியுடன் கூறுகிறார் ஆசிரியை சொர்ணதீபம். 

2009 - Tet இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் மிகுந்த சோர்வாகி, மேடையின் ஓரத்தில் படுக்கவைக்கப்பட்டிருந்தார். "இந்தப் போராட்டம் இன்றைக்கு ஆரம்பித்தது இல்லை. 2009 லேருந்தே பல்வேறு கட்டங்களில் எங்கள் உரிமையை வேண்டி, பலவித போராட்டங்களில் ஈடுபட்டே வருகிறோம். ஆனாலும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டே வருகிறோம். ஏதேதோ காரணங்கள் சொல்லிவருகிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதிப்படுத்தும்வரை போராட்டம் தொடரும்" என்றார். 

போராட்டத்தில் அமர்ந்திருக்கும் எல்லோரின் முகத்திலும் களைப்பை மீறி, உறுதி தெரிந்தது. கோரிக்கையை வலியுறுத்தும் கோஷம் ஒலிக்கத் தொடங்கியது. மயக்கமுற்ற ஒரு பெண் ஆசிரியரை ஸ்டெச்சரில் வைத்து, கொண்டுசெல்ல, ஆம்புலன்ஸ் கதவைத் திறந்து தயாராய் நிற்கிறார் அதன் டிரைவர். 

தற்போது, போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு