Published:Updated:

கேரளாவுக்கு நீட் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களுக்குக் கூடுதல் பஸ் வசதி! கலெக்டர் அறிவிப்பு

கேரளாவுக்கு நீட் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களுக்குக் கூடுதல் பஸ் வசதி! கலெக்டர் அறிவிப்பு
கேரளாவுக்கு நீட் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களுக்குக் கூடுதல் பஸ் வசதி! கலெக்டர் அறிவிப்பு

கேரளாவுக்கு நீட் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களுக்குக் கூடுதல் பஸ் வசதி! கலெக்டர் அறிவிப்பு

நீட் தேர்வு எழுதுவதற்காக நெல்லை மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் மாணவர்களுக்குக் கூடுதல் பேருந்து வசதி செய்து தரப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்காக நெல்லை மாவட்டத்தில் ஏராளமான மாணவர்கள் தங்களைத் தயார் செய்து வந்த நிலையில், தேர்வு மையத்தை கேரள மாநிலத்தில் ஒதுக்கியதால் அதிர்ச்சிக்குள்ளாகினர். நெல்லையிலிருந்து கேரளாவுக்குச் செல்வதற்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே உள்ளது. அந்த ரயிலில் டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கெனவே முடிவடைந்து விட்டன. இந்த நிலையில், பேருந்திலாவது டிக்கெட் கிடைக்கும் என மாணவர்கள் நம்பியிருந்தார்கள். ஆனால், எர்ணாகுளத்துக்குக் காலையில் ஒரு பேருந்தும் மாலையில் ஒரு பேருந்தும் மட்டுமே இருப்பதால் அதிலும் இடம் கிடைக்கவில்லை. அதனால் மாணவர்களின் பெற்றோர், தங்களது குழந்தைகள் நீட் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் இருந்தார்கள். ஒரு சிலர் தாங்களாகவே இணைந்து வேன் பிடித்துச் சென்றார்கள். சிலர் இன்றைய தினமே கிடைத்த பேருந்து அல்லது ரயில் மூலமாகப் புறப்பட்டுச் சென்றார்கள். மற்றவர்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், நீட் தேர்வுக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய பெற்றோர் படும் சிரமம் குறித்த செய்திகள் வெளியானதும், நெல்லை மாவட்ட நிர்வாகம் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளைத் தொடர்புகொண்டு எத்தனை மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் போடப்பட்டுள்ளது என்கிற பட்டியலைச் சேகரித்தது. அதன்படி, அதிகப்பட்சமாக ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் 105 மாணவர்களும் ஜெயேந்திரா பள்ளியில் 35 மாணவர்கள் என மாவட்டம் முழுவதும் 950 மாணவர்கள் வெளி மாநிலங்களில் தேர்வினை எழுதச் செல்வது தெரியவந்தது. அவர்களுக்கு உரிய பேருந்து வசதி செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வந்துள்ளது.

இது தொடர்பாகப் பேசிய நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ``நெல்லை மாவட்டத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதி செய்து தரப்படும்" என்றார்.

அதன்படி, நீட் தேர்வு எழுத நெல்லையிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்குக் காலையில் ஒரு பேருந்தும் மாலையில் கூடுதலாக இரண்டு பேருந்தும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு நடைபெறும் நாளான 6-ம் தேதி வரை இந்தக் கூடுதல் பேருந்து சேவை தொடரும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு