Published:Updated:

நீட் தேர்வு: வெளி மாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு குவியும் உதவிகள்!

நீட் தேர்வு: வெளி மாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு குவியும் உதவிகள்!
நீட் தேர்வு: வெளி மாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு குவியும் உதவிகள்!

நீட் தேர்வு: வெளி மாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு குவியும் உதவிகள்!

மிழகத்தில் 2015-ஆம் ஆண்டு பெய்த கனமழையை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. அந்த மழை, பெருநகரச் சென்னையையே வெள்ளக்காடாக்கியது. அப்படி வெள்ளத்தால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துக்கொண்டிருந்த நிலையில், எங்கோ இருந்த ஓர் இளைஞன் போட்ட முதல் பதிவுதான் லட்சக்கணக்கான மக்களை ஒன்றிணையவைத்தது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகளும் குவிந்தன. அது, வரலாற்றின் மிகப்பெரிய அறப்புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியான சமூக வலைதள அறப்புரட்சி, தற்போது நீட் தேர்வுக்கும் தொடங்கியிருக்கிறது. 

நீட் தேர்வே சமூக நீதிக்கு எதிரானது என்று போராடிக் கொண்டிருக்கிற இந்தவேளையில்தான், மத்திய அரசு நீட் தேர்வைக் கட்டாயம் எழுதியே தீரவேண்டும் என்ற நிலைக்குக் கொண்டுவந்து விட்டது. இதையடுத்து, வேறு வழியே இல்லாமல் தேர்வுக்குத் தயாராகிவரும் மாணவர்களுக்கு ஏராளமான சவால்கள் கச்சைக்கட்டிக் கொண்டு காத்திருக்கின்றன. குறிப்பாக, இந்தத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் பிற மாநிலங்களில் அமைத்திருப்பதுதான் மாணவர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.எஸ்.இ.யின் இந்த முரண்பாடான நடவடிக்கையால் தேர்வு எழுதும் மாணவர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

மாணவர்களின் இந்தப் பிரச்னை பொதுவெளியில் பகிரப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காகத் தன்னார்வலர்கள் பலரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான பயண வசதி மற்றும் தங்கும் விடுதி, உணவு போன்றவற்றுக்கான ஏற்பாடுகளைத் தாங்கள் செய்வதாகச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பால் சுசில்குமார் என்பவர் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். அவர் தன்னுடைய முகநூலில் இதற்கான தகவலைப் பதவிட்டுள்ளார். அதில், "திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்குத் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் என்னுடைய இரண்டு கார்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பால் சுசில்குமாரை தொடர்புகொண்டு பேசினோம். "நான், மாணவர்களுக்கு ஆளுமைத் திறனை மேம்படுத்தும் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறேன். அதனால் மாணவர்களின் பிரச்னை பற்றி எனக்கு நன்கு தெரியும். அந்த வகையில், சமூக அக்கறையோடு இந்த உதவியைச் செய்கிறேன். இதற்காக இரண்டு கார்களைக் கொடுத்துள்ளேன். அதில், 8 பேர் பயணிக்கலாம். மேலும், இங்கிருந்து கேரளாவுக்குச் செல்லும் மாணவர்கள், பின்பு தேர்வு மையங்களைச் சென்றடையவும் ஏற்பாடுகள் செய்துள்ளேன். அங்கு அவர்களுக்கான உணவு மற்றும் தங்கும் விடுதி தேவை என்றாலும் அதனைச் செய்யவும் எங்களுடைய பயிற்சி அகாடமி மையத்தில் இருப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனிதநேய அடிப்படையிலும் சமூகத்தின் மீதான அக்கறையிலுமே இந்த உதவியைச் செய்கிறேன். அரசாங்கமும் கார்ப்பரேட் கம்பெனிகளும் செய்யாததை நான் செய்திருப்பதை எண்ணி பெருமைகொள்கிறேன்" என்றார், மகிழ்ச்சியுடன்.

இதேபோன்று மோகன் என்பவர்,  "தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கான பயணச்செலவை ஏற்பதாகவும், நீட் தேர்வுக்காக இனி எந்த வகையிலும் ஓர் உயிர்கூடப் போகக்கூடாது'' எனவும் வாட்ஸ்அப்  குருப்பில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக அவரிடம் பேசினோம்.  "நீட் தேர்வுக்கான மையங்களை வெளிமாநிலங்களில் அமைத்து மாணவர்களை வஞ்சித்துவிட்டது, இந்த அரசாங்கம். அனிதா இறந்ததைப் போன்று மற்றோர் உயிர் இனியும் போகக்கூடாது என்ற உணர்வுதான் இதனைச் செய்யத் தூண்டியது. தேர்வுக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்குப் பயணச்செலவை ஏற்பதாக வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றில் பதிவிட்டிருந்தேன். அந்தப் பதிவுக்குப் பிறகு இதுவரை குறைந்தது சுமார் ஆயிரம் அழைப்புகள் வந்திருக்கும்..

தமிழகத்தில் உள்ள திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகர்கோயில், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அதில், திருச்சியில் இரண்டு மாணவர்கள்

செலவுக்குப் பணம் இல்லாமல் போக முடியாத நிலையில் இருந்தனர். அந்தப் பிரச்னையை எங்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு பயணச் செலவுக்கானப் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்துள்ளோம். மேலும், புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் உள்ள மூன்று பேருக்கு பணம் இல்லாததால், தேர்வுக்குச் செல்லவில்லை எனத் தகவல் கிடைத்தது. அப்படியே பணம் கொடுத்தாலும் இன்று கிளம்பினால் அவர்களால் குறித்த நேரத்துக்குத் தேர்வுக்குச் செல்ல முடியாது என்பதால் வாடகை காரை ஏற்பாடு செய்து,செலவுக்கும் 2,000 ரூபாய் பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளோம். பிற மாநிலங்களில் இருந்தும் தொடர்ந்து அழைப்பு வருகிறது. `மாணவர்கள் அங்கு சென்றால் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள், எங்களுடைய நம்பரை மட்டும் கொடுத்து அனுப்பிவையுங்கள்' என்று வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். பிரச்னை கவலைதரும் வகையில் இருப்பதால் தேர்வு முடியும்வரை எந்த நேரத்திலும் எந்த உதவியும் செய்யும் நிலையில் நாங்கள் தகுந்த ஏற்பாட்டுடன் இருக்கிறோம்" என்றார்.  

அதேபோன்று ராஜஸ்தான் தமிழ்ச் சங்கத்தில் இருந்து முருகனாந்தம் என்பவர் பேசுகையில், "இங்கு தேர்வு எழுதவரும் மாணவர்களுக்கு உணவு தங்கும் வசதி,போக்குவரத்துச் செலவு போன்றவற்றைச் செய்து வருகிறோம். இதுவரை வந்த 25-க்கும் மேற்பட்ட அழைப்புகளில் 5 பேருக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், எங்ளை அழைத்து உதவிகள் கேட்டால், எந்த உதவியையும் செய்யத் தயாராக இருக்கிறோம்" என்றார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் சக்தி முருகன் பேசுகையில், ``நான் நகர்ப்புறத்து மாணவன். இந்தச் சிக்கலை என்னாலேயே எதிர்கொள்ள முடியவில்லை. கிராமப்புறத்தில் இருந்துவரும் மாணவர்களை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். மேலும், அனைவரும் பள்ளிக்கூடப் பருவத்தில் இருந்து வெளியுலகுக்கு வரக்கூடியவர்கள். மொழி,இடம், மனிதர்கள் என எதுவுமே அறிமுகம் இல்லை. இந்நிலையில், மிக முக்கியமான தேர்வை எழுதுவது எவ்வளவு சிரமமாக இருக்கும் என்று இந்த அரசாங்கம் நினைத்திருந்தால் இவ்வாறு எங்களை வஞ்சித்திருக்குமா? இந்தத் தேர்வுக்காக திருச்சி, மதுரை, கோவை போன்ற இடங்களைக் கேட்டு விண்ணப்பித்திருந்தேன். ஆனால், எனக்கு வந்திருக்கும் தேர்வு மையம் எர்ணாக்குளம். இந்த அரசாங்கத்தின் சிறந்த நிர்வாகத்துக்கு இதுதான் சாட்சி. மேலும், `தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டால் தொடர்புகொள்ளுங்கள்' என ஹெல்ப் லைன் எண் ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதற்கு அழைத்தால், `பிஸி' என்றே வருகிறது. இப்படியான நிலையில் மிகவும் விரக்தியாகி இந்தத் தேர்வை எழுதாமல் கைவிட்டுவிடலாம் என எண்ணினேன். இந்நிலையில், பலரும் உதவி செய்வதாகச் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தனர். அப்படியான ஒரு பதிவில், மோகன் என்பவரைத் தொடர்புகொண்டு உதவி கேட்டேன். அவரும் உடனடியாக கார் ஒன்றை ஏற்பாடு செய்து என்னை எர்ணாக்குளம் அனுப்பி வைத்துள்ளார்'' என்றார், நம்பிக்கையுடன்.

ஆட்சியாளர்கள் செய்யாததை அற உள்ளங்கள் செய்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு