Published:Updated:

`’தனியார் காலேஜ் பீஸ் ஜாஸ்தினு ‘நீட்’ எழுதினாளே என் அம்மு!’’ - கலங்கும் பிரதீபா தந்தை

`’தனியார் காலேஜ் பீஸ் ஜாஸ்தினு ‘நீட்’ எழுதினாளே என் அம்மு!’’ - கலங்கும் பிரதீபா தந்தை
`’தனியார் காலேஜ் பீஸ் ஜாஸ்தினு ‘நீட்’ எழுதினாளே என் அம்மு!’’ - கலங்கும் பிரதீபா தந்தை

இரண்டே அறைகள் மட்டுமே இருந்த பிரதீபாவின் வீட்டில் பாத்திரங்களைவிட புத்தகங்களே அதிகமிருந்தன. தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களிலுள்ள எளிய மக்கள் கல்வியை எவ்வளவு பெரிய சக்தியாகப் பார்க்கிறார்கள் என்பதற்கு பிரதீபாவின் வீடு உதாரணம்

`எனக்கு வேற வழி தெரியலப்பா, நம்ம குடும்பம்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்க எல்லார் கூடவும் ரொம்ப நாள் சேர்ந்து இருக்கணும்னு ஆசையா இருக்கு. உங்க எல்லாரையும் விட்டுட்டுப் போகணும்னு நினைக்கும்போது ரொம்ப வலிக்குது. ஆனா, அதைவிட அதிகமான வலியை இந்தத் தோல்வி கொடுத்துடுச்சு. என்னை மன்னிச்சுடும்மா, மன்னிச்சுடுக்கா, மன்னிச்சுடுண்ணா. உங்க எல்லாரையும் ரொம்பவே மிஸ்பண்றேன்.

-  உங்கள் அம்மு.'

தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன் பிரதீபா எழுதிய கடிதத்தின் வரிகள் இவை.

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற காரணத்தால் தற்கொலை செய்துகொண்ட பிரதீபாவின் மரணம், பெருவளூர் கிராமத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் இறந்த மறுநாள் அந்த ஊர் கோயிலில் கூழ் ஊற்றும் திருவிழா. தற்கொலை செய்துகொள்வதற்காக எலி மருந்தைச் சாப்பிட்ட பிறகு, `திருவிழாவுக்கு அவசியம் வாங்க' எனத் தன் சித்தியை தொலைபேசியில் அழைத்துச் சொல்லியிருக்கிறார் பிரதீபா. தன் பாட்டியிடம் சென்று திருவிழாவுக்குத் தயாராகும்படி சொல்லிவிட்டு வந்திருக்கிறார். அக்கம் பக்கத்து வீடுகளில் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

தேர்வு முடிவால் தனக்கு ஏற்பட்ட காயத்தை வெளிக்காட்டாமல், மருந்து சாப்பிட்டதைக்கூட யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டார். மாலை தன் மகள் கறுப்பாக வாந்தி எடுப்பதைப் பார்த்த சண்முகமும் அவரது மனைவியும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். அன்று இரவே பிரதீபா நிறைவேறாத கனவுடன் இறந்துபோனார்.

இரண்டு அறைகள் மட்டுமே இருந்த பிரதீபாவின் வீட்டில் பாத்திரங்களைவிட புத்தகங்களே அதிகம். தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்ள எளிய மக்கள், கல்வியை எவ்வளவு பெரிய சக்தியாகப் பார்க்கிறார்கள் என்பதற்கு பிரதீபாவின் வீடே ஓர் உதாரணம்.

சாமி படங்கள் வைக்கப்பட்டிருந்த இடதுக்கு அருகில் ஆறு வருடத்துக்கு முந்தைய செய்தித்தாள் ஒன்றை முனை மடங்காமல் பத்திரமாக வைத்திருந்தனர். திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக பிரதீபாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தித்தாள் அது. பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண் எடுத்திருந்தார் பிரதீபா. பெருவளூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியிலே பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார் பிரதீபா. பள்ளியில் முதல் இடம் பிடித்ததற்காக அரசின் செலவில் 12-ம் வகுப்பை கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார்ப் பள்ளியில் படித்தார். 12-ம்  வகுப்பில் 1,125 மதிப்பெண் பெற்றார்.

அந்த ஊரின் மையத்தில் இருந்த அம்பேத்கர் படிப்பகத்தின் வாசலில் பிரதீபாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அவர் பத்தாம் வகுப்பு படித்த பெருவளூர் அரசுப் பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக வந்து பிரதீபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பிரதீபாவுக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் ஒருவர் பிரதீபாவின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறி அழுதார். ``கெட்டிக்காரப் பொண்ணு. நல்லா படிப்பா. படிப்பில் மட்டும் அல்ல; பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டினு எல்லாத்துலயும் கலந்துகிட்டு ஜெயிப்பா. ஒரு டீச்சருக்கு இருக்கும் நாலேட்ஜ் அந்தப் பொண்ணுக்கு இருந்தது.'' தன் மாணவியின் கனவு சிதைந்துபோனதில் தாள முடியாத துயரம் அவருக்கு.

அழுது அழுது கண்கள் சோர்வுற்று அரை மயக்க நிலையில் இருந்தார் பிரதீபாவின் சகோதரி.  ``அவளுக்கு முன்னாடியே நான் ரிசல்ட்டைப் பார்த்துட்டேன். மார்க் கம்மியா இருந்ததை அவகிட்ட சொன்னா வருதப்படுவாளேனு நான் அவகிட்ட  சொல்லலை. அவளோட ஃப்ரெண்டஸ்தான்  ரிசல்ட் பார்த்துச் சொல்லியிருக்காங்க. எக்ஸாம் எழுதிட்டு வந்தப்பவே `தமிழ்ல  சில கேள்விகள் தப்பா வந்திருக்கு'னு சொல்லிட்டு இருந்தா. அக்கா தங்கச்சியா இருந்தாலும், ரெண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்டஸ் மாதிரிதான் இருப்போம். இப்பக்கூட அவ இல்லைங்கிறதை என்னால நம்பவே முடியலை'' என அழுவதற்குத் தெம்பின்றி உடைந்துபோயிருந்தார் பிரதீபாவின் சகோதரி.

``அன்னைக்கு நான் வீட்ல இல்லைங்க. வேலைக்குப் போயிட்டேன். அவங்க அம்மா மட்டும்தான் வீட்ல இருந்தாங்க. போன வருஷமே தனியார் காலேஜ்ல மெடிக்கல் கிடைச்சதுங்க. `அங்கெல்லாம் சேர்ந்து படிச்சா பணம் நிறைய செலவாகும்ப்பா. அண்ணாவுக்கும் அக்காவுக்கும்வேற ஃபீஸ் கட்டி படிக்கவைக்கிறீங்க.  நான் அடுத்த தடவை நீட் எழுதி கவர்மென்ட் காலேஜ்லேயே படிச்சுக்கிறேன்பா'னு சொன்னா என் அம்மு. படிப்பே என் புள்ளைய கொன்னுருச்சே...''  சொல்லும்போதே விசும்பி அழ ஆரம்பித்தார் பிரதீபாவின் அப்பா சண்முகம்.

இவருக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். மூத்த பெண் எம்.சி.ஏ படிக்கிறார். இரண்டாவது மகன் மூன்றாம் ஆண்டு இன்ஜினீயரிங் படிக்கிறார். கடைசி மகளான பிரதீபாவையும் நன்றாகப் படிக்கவைக்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். கட்டட வேலை செய்யும் சண்முகம், தன் குழந்தைகளுக்கான சொத்தாக கல்வி இருக்கும் என ஆழமாக நம்பியுள்ளார்.

``புள்ளைங்களை எப்படியாவது நல்லபடியா படிக்கவெச்சுறணும்னுதாங்க ராப்பகலா கஷ்டப்பட்டேன். எங்க எல்லாருக்குமே ரொம்ப செல்லம் அம்மு. நான் சாயங்காலம் வீட்டுக்கு வந்து பார்த்தப்ப வாந்தி எடுத்து கிடந்தாங்க. `அப்பா, நான் இதைச் சாப்பிட்டுட்டேன்பா'னு அந்த மருந்தைக் காட்டவும், எப்படியாவது காப்பாத்திரணும்னு சேத்துப்பபட்டு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு ஓடினேன். அங்க `பார்க்க முடியாது'னு சொல்லி திருவண்ணாமலைக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க. அங்கே போறதுக்குள்ள இப்படி ஆகுமுனு  நினைக்கலை'' என்று தன் செல்ல மகளை இழந்து தவிக்கும் அந்தத் தகப்பனுக்கு ஆறுதல் சொல்லவே முடியாது.

பிரதீபாவின் அம்மா கசங்கிய துணிபோல சுருண்டு கிடந்தார். பிரதீபாவின் குடும்பம் மட்டுமல்ல, அந்த ஊர் மக்களும் பலரும் பிரதீபா மருத்துவராகும் நம்பிக்கையில் இருந்தனர். ஏனென்றால், அந்தக் கிராமத்திலிருந்து இதுவரை யாருமே மருத்துவப் படிப்பு படித்ததில்லை. பிரதீபாவின் கனவு, அந்தக் கிராமத்தினரின் பல தலைமுறைக் கனவு. பள்ளிகள் தொடங்கி அன்றைய தினம்தான் புதுப் புத்தகங்களைச் சுமந்துகொண்டு, பிரதீபாவின் வீட்டைக் கடந்து  தங்கள் வீடுகளுக்குச் சென்றனர் பள்ளி மாணவர்கள். 

வரும் காலத்தில் அந்த மாணவர்களில் ஒருவர் பெருவளூர் கிராமத்தின் முதல் மருத்துவர் ஆவார். பிரதீபாவின் கனவு, அவர் மூலம் நிச்சயம் நிறைவேறும்!

அடுத்த கட்டுரைக்கு