Published:Updated:

கல்லூரி மாணவர்களின் பட்டாக்கத்தி கலாசாரம்! தடுக்க என்ன தீர்வு?

கல்லூரி மாணவர்களின் பட்டாக்கத்தி கலாசாரம்! தடுக்க என்ன தீர்வு?
கல்லூரி மாணவர்களின் பட்டாக்கத்தி கலாசாரம்! தடுக்க என்ன தீர்வு?

கல்லூரி மாணவர்களின் பட்டாக்கத்தி கலாசாரம்! தடுக்க என்ன தீர்வு?

`கலை - அறிவியல் கல்லூரி' என்பதே கட்டற்ற சிந்தனைக்கான களம். இவை, `லிபரல் ஆர்ட்ஸ்' என மேற்கத்தியர்களால் உருவாக்கப்பட்டது. சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு, பொருளாதாரம் எனப் பலவும் திறனாய்வு செய்கிற இடமாக, புதியனவற்றை உருவாக்குகின்ற களமாக கலைக் கல்லூரிகள் இருந்தன. 100 ஏக்கர் முதல் ஆயிரக்கணக்கான ஏக்கர் வரை  நிலப்பரப்பை ஒதுக்கி கல்லூரிகளை அமைத்தார்கள் நமது முன்னோர்கள். அரசியல் மற்றும் சமூக அடிப்படைவாத அமைப்புகளின் தலையீடுகளின்றி சமூகத்தை மாற்றவும் அரசுப் பணிகளை மேற்கொள்ளவும் இங்கே இருந்துதான் பணியாளர்கள் உருவானார்கள். எனவே, கலை அறிவியல் கல்லூரிகளின் தாக்கம் இல்லாத துறையே இல்லை எனச் சுருங்கச் சொல்லலாம். ஆனால், இன்றைய நிலை தலைகீழாக மாறியிருக்கிறது. 

சென்னையில், இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்கள், முதல்நாள் கல்லூரிக்கு வரும்போதே `பட்டாக்கத்தியுடன் வந்தார்கள்' என்ற புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். புத்தாடை உடுத்தி குதூகலமாகச் செல்லவேண்டிய மாணவர்களிடையே ஏன் இந்த மாற்றம் ஏற்பட்டது? இதற்கு யார் பொறுப்பு? இந்த நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும்? சமூக ஆர்வலர்கள், மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சியினர், கல்லூரி பேராசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமும் பேசினோம்.

சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவரும், அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவருமான அ.மார்க்ஸ், ``சமூக -பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள்தாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் சேர்கிறார்கள். எனவே, அவர்களின் சமூக, பொருளாதாரப் பின்னணியைப் புரிந்து செயல்பட வேண்டும். மாணவர்களைக் கொலைக் குற்றவாளிகள் போன்றோ, திருடர்களைப் போன்றோ அணுகி, இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியாது. பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் என்று மூன்று தரப்பினருக்கும் பொறுப்பு இருக்கிறது. அரசுக் கல்லூரிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் பொறுப்பாசிரியர் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள்தாம், அந்தந்த வகுப்பு மாணவர்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களின் பிரச்னைகளை அறிந்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஆனால், இப்போது இந்தப் `பொறுப்பாசிரியர்' முறை செயலிழந்து கிடக்கிறது. அதுபோல அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை உடனடியாக நிரப்பி, வேலைப் பளுவைக் குறைக்கும்போதுதான், கல்லூரி நிர்வாகம் சிறப்பாக இருக்கும். விளையாட்டு, கலை, இலக்கியம் போன்றவற்றில் மாணவர்களை அதிகளவில் ஈடுபடுத்த வேண்டும். மாணவர்களுக்கு இதுபோன்ற துறைகளில் ஆர்வம் ஏற்படும்போது, அவர்களின் ஆற்றல் நல்வழியில் பயன்படுத்தப்படும். சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்குப் படிப்பின் மீது, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அரசு வேலைவாய்ப்புகள், தனியார் நிறுவன வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துச்சொல்லி அதற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் கல்லூரி நிர்வாகம் வழிகாட்ட வேண்டும். போலீஸை வைத்து மிரட்டுவது, மாணவர்களை சோதனை என்ற பெயரில் கண்காணிப்பது, போலீஸைக் கல்லூரிகளுக்குள் அனுமதிப்பது போன்ற செயல்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும். அதற்கு இடம் கொடுக்கவே கூடாது'' என்றார்.

சமூகச் செயற்பாட்டாளர் `அரிமா' வைரசேகர், ``கல்லூரி தொடங்கிய முதல் நாளன்றே பட்டாக்கத்தியுடன் கல்லூரிக்கு மாணவர்கள் வருகிறார்கள் என்றால், அவர்களின் எதிர்காலத்தை நினைத்தாலே மனது பதறுகிறது. இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரிகளில் காலடி எடுத்து வைக்கும் இளைஞர்களுக்கு நண்பர்கள் சொல்லே வேதவாக்காக இருக்கிறது. குழுவாக நண்பர்களுடன் சேரும்போது, ஹீரோயிசத்தைக் காட்டிக் கொள்வதற்காகத் தடம் மாறுகிறார்கள். அதுவே, நாளடைவில் திசைமாறி, குழு மோதலாக உருவாகி விடுகிறது. நாள் முழுவதும் கல்லூரி வளாகத்திலிருந்த காலம் மாறி இப்போது, `அரைநாள்' கல்லூரிகள் ஆகிவிட்டன. எனவே, கல்லூரிகளுக்கு வெளியே நண்பர்களுடன் அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்கள். அங்கு கூடாநட்பால், எதிர்கால வாழ்க்கையைப் பாழாக்குகிறார்கள். திரைப்படங்களில் காட்டப்படும் காட்சிகளும் தவறான பாதைகளையே காட்டுகின்றன. சென்னைப் போன்ற பெருநகரங்களில் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்தே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்கள் விற்கப்படுகின்றன. இதனால், போதைப் பழக்கங்களும் மாணவர்களை திசைமாற்றுகின்றன. பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களை நிச்சயமாகப் பெற்றோர் தங்கள் கண்காணிப்பில் வைக்க வேண்டும். பள்ளிகளுக்கு அவ்வப்போது சென்று தங்கள் பிள்ளைகளின் நிலையை அறிந்ததுபோல, கல்லூரிகளுக்கும் செல்லவேண்டும். பெற்றோர், ஆசிரியர் கூட்டு முயற்சியால் மட்டுமே மாணவர்கள் தடம் மாறாமல் தடுக்க முடியும். காக்கிச் சட்டைகள் கைகளில் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாழாய் போகும். பெற்றோர் - ஆசிரியர்- மாணவர்கள் ஆகிய மூவரும் இணைந்துதான் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்'' என்றார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆதரவு ஊடகப் பேச்சாளர் ஏ.பி.முருகானந்தம், ``இந்திய அளவில் இன்றைக்கு ஐந்தாவது இடத்தில் உள்ளது சென்னை மாநிலக் கல்லூரி. 175 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க இந்தக் கல்லூரி, தற்போது பராமரிப்பு இல்லாமல், பெருமையை இழந்து நிற்பது கவலையளிக்கிறது. அதுபோல அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள்மீதும் கல்லூரி நிர்வாகத்துக்கு அக்கறையில்லாமல் போனதுதான், இன்றைய பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம். கலை அறிவியல் கல்லூரிகள் முன்பெல்லாம் காலை 10 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணி வரை நடக்கும். ஆனால், கல்லூரிகள் நடைபெறும் நேரத்தை ஷிப்ட் முறையாக மாற்றிய பிறகு, டுட்டோரியல் கல்லூரிகளைப் போல் கலை அறிவியல் கல்லூரிகளும் மாறிவிட்டன. காலை 8 மணிக்குத் தொடங்கி மதியம் 12.30-க்கு வகுப்புகள் முடிந்து விடுகின்றன. தேநீர் இடைவேளைகூட கிடையாது. 1,500 மாணவர்கள் படித்த, சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று 4,500 பேர் படிக்கிறார்கள். 24 மாணவர்கள் இருக்க வேண்டிய வகுப்பறையில் இன்று 70 முதல் 100 மாணவர்கள் ஆட்டு மந்தைகளைப் போல அடைத்து விடுகிறார்கள். கல்லூரிகளுக்குத் தன்னாட்சி கொடுக்கப்பட்டு இஷ்டம் போல மாணவர் சேர்க்கையை நடத்துகிறார்கள். இவையெல்லாமே மாணவர்களின் இப்போதைய ஒழுங்கீனமான நிலைக்கு அடிப்படைக் காரணங்கள் என்று சொல்லலாம்.

எனவே, கல்லூரிகளின் வேலைநேரத்தை மாற்றி, காலை பத்து மணிக்குத் தொடங்கி மாலை வரை நடத்த வேண்டும். தேவைக்கு ஏற்ப புதிதாக கலை அறிவியல் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும். பிரச்னைகளைச் சொல்லி தட்டிக்கழிக்காமல், கல்லூரிகளில் கட்டுப்பாட்டுடன் மாணவர் பேரவைத் தேர்தலை கல்வி ஆண்டின் இறுதியில் நடத்த வேண்டும். இதனால், மாணவர்களின் சமூகப் பொறுப்பு வளரும். பேரவைத் தேர்தல்களில் போட்டியிடுவோருக்கு 75 சதவிகிதம் மதிப்பெண், 75 சதவிகித வருகைப் பதிவு, நன்னடத்தைச் சான்று, சமூக ஆர்வம் போன்ற பல விதிமுறைகளைக் கொண்டு வரலாம். கலை இலக்கிய ஆளுமைகள், அரசியல் ஆளுமைகள், சாதனையாளர்கள் போன்றோரை கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்து ஊக்கப்படுத்த வேண்டும்'' என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, ``சமூக அக்கறையுடன் போராட்டக் களங்களில் இருக்கும் மாணவர்கள், தங்களை யார் என்று அடையாளப்படுத்தியிருப்பதால் அவர்கள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள். படிக்கும் ஆர்வம் குறைந்த, `செல்வாக்கு' அடிப்படையில் சேரும் மாணவர்களால்தாம் பிரச்னைகள் ஏற்படுவதாகப் பொதுவான குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை முழுமையாகப் புறந்தள்ளிவிட முடியாது. எனவே, மாணவர் சேர்க்கையை வரைமுறைப்படுத்த வேண்டும். அதற்குப் பொறியியல் கல்லூரிகளைப் போல கலை-அறிவியல் கல்லூரிகளுக்கும் ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் கவுன்சலிங் முறையைக் கொண்டு வரும்போது, ஏராளமான தில்லுமுல்லுகள் தடுக்கப்படும். மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களே அவர்கள் விருப்பப்படும் கல்லூரிகளைத் தேர்வுசெய்ய முடியும். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இருக்கும் விளையாட்டுத் திடல்கள், தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டு வருகின்றன. உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், சென்னை மாநிலக் கல்லூரி விளையாட்டு மைதானத்தைத் தனியாரிடம் கொடுத்து விட்டார்கள். மாணவர்கள் விளையாட என்ன செய்வார்கள்? மாணவர்களுக்கு விளையாட்டுத்திடலே இல்லாத இத்தகைய கல்லூரிகளைச் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட அனுமதிக்கலாமா? மாணவர்கள் தங்களுடைய தனித்திறனை வளர்த்துக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களையும் அவர்களின் ஆர்வம், திறன் அறிந்து படிப்பைத் தவிர கூடுதலாக கலை, இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகள், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, செஞ்சிலுவைச் சங்கம், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றில் அதிகளவில் ஈடுபடுத்த வேண்டும்'' என்றார்.

அனைவரும் இணைந்து மாணவர்களுக்கு நல்வழி காட்டுவோம்...!

அடுத்த கட்டுரைக்கு