Published:Updated:

மகளே அனிதா... உனக்காக என்ன செய்தோம் நாங்கள்?! #RememberingAnitha

மகளே அனிதா... உனக்காக என்ன செய்தோம் நாங்கள்?! #RememberingAnitha
மகளே அனிதா... உனக்காக என்ன செய்தோம் நாங்கள்?! #RememberingAnitha

`அனிதா ஒரு போராளி' என்று இன்றைய தினம் வீரவணக்கம் செலுத்தப்படும். அனிதா இறந்த அன்று அஞ்சலி செலுத்தியவர்கள் இன்றும் அஞ்சலி செலுத்துவார்கள். அந்த 17 வயதுச் சிறுமியின் ஒவ்வொரு நினைவுநாளுக்கும் இது தொடர்ச்சியாக நடைபெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அனிதா இதற்காகவா இறந்தாள்?

ர் ஆண்பிள்ளைக்கு அளிக்கப்படும் கல்வி அவனுக்கானது மட்டும். அதுவே ஒரு பெண்ணுக்கு அளிக்கப்படும் கல்வி ஒரு தலைமுறைக்கானது. தலைமுறைக்கான கல்வியை இழந்துவிட்டிருக்கிறோம். அனிதா மரணித்து ஓராண்டு கடந்து விட்டது, அதற்கடுத்ததாய் பல பலிகளைக் கொடுத்துவிட்ட பிறகும், `நீட் தேவையா? இல்லையா?' என்று இன்னும் நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். மாணவர்கள் நீட் எழுதவைக்கப்படுகிறார்கள். ஒருவேளை அனிதா இன்று உயிரோடு இருந்திருந்தால்... இரண்டாவது முறையாக நீட் தேர்வை எழுதியிருப்பாளா, அப்படி இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதிய விழுப்புரம் பிரதீபாவுக்கு மட்டும் மருத்துவ சீட் கிடைத்து விட்டதா, மரணம்தானே கிடைத்தது. 

அனிதா மரணித்த அந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. `அவள் நிச்சயம் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டாள்' என்று சக நண்பர்களிடம் உறுதியாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். கண்களில் நீர். ஆம், அவள் நிச்சயம் தற்கொலை செய்துகொள்ளவில்லை, `மருத்துவம் கிடைக்கவில்லை என்றால் வேறு ஏதாவது படிப்பேன் அக்கா!’ என்று சொல்லியவள், தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை. `கல்வியில் திணிக்கப்பட்ட சமூக அநீதியின் பெயரால் அந்த உயிரைக் கொன்றுவிட்டோம்' என்பதை நாம்தான் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். 

நீட் தேர்வினை உங்களால் எழுத முடிகிறது. அதன் பலனை உங்களால் எல்லாவிதத்திலும் பெறமுடிகிறது. மகிழ்ச்சி. ஆனால், `அனிதாவின் அப்பா ஒரு கூலித் தொழிலாளி. அவரின் குடும்பம் ஏழ்மையில் உழன்றது என்பதையே இன்றும் காரணம் காட்டாதீர்கள்' என்கிறீர்கள். எனக்கு உங்களிடம் ஒரு கேள்வி இருக்கிறது.

நீட் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் ரூ.1500/-க்கு விற்கப்படும் சூழலில், இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட நீட் தேர்வு விண்ணப்பங்களின் விற்பனை மூலம் மட்டுமே அரசுக்கு ரூ.300 கோடி வருமானம் கிடைத்திருக்கும் நிலையில், அனிதாவுக்கு அடுத்து இரண்டு உயிர்களைப் பறிகொடுத்துவிட்ட நிலையில்... சமமான கல்வியை முக்கியத்துவப்படுத்தாமல் கல்விச் சுரண்டலையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் முக்கியத்துவப்படுத்தும் இந்தப் போட்டித் தேர்வு முறையை ஏன் இன்னும் நீங்கள் ஆதரித்துக் கொண்டிருக்கிறீர்கள். நம் பிள்ளைகளின் பிஞ்சு விரல்களைப் பதம் பார்க்கும் குண்டூசிகளைத் தூக்கியெறிய சற்றும் தயங்காத நாம் ஏன் அவர்களின் உயிர்களை இழந்த பின்னும் சட்டத்தின் பெயரால் இந்தத் தேர்வு முறையை அனுமதித்துக்கொண்டிருக்கிறோம்? 

நீட் விண்ணப்பப் படிவத்தின் மூலமான வருமான விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளரிடம் விளக்கம் கேட்க முற்பட்டபோது, `அது தொடர்பான விவகாரங்கள் எதுவும் தற்போது தமிழக அரசின் செயல்பாடுகளுக்குக் கீழ் வரவில்லை’ என்று பதில் கூற மறுத்தார். ஆனால், மத்திய அரசின் நீட் தேர்வு முறையைத் தமிழகத்தில் அனுமதிப்பதற்கு முன்பிருந்தே கல்வி, மாநில உரிமைப் பட்டியலில்தான் இருந்தது என்பதை இங்கே ஒருமுறை நினைவுபடுத்த வேண்டியதாக இருக்கிறது.

`அனிதா ஒரு போராளி' என்று இன்றைய தினம் வீரவணக்கம் செலுத்தப்படும். அனிதா இறந்த அன்று அஞ்சலி செலுத்தியவர்கள், இன்றும் அஞ்சலி செலுத்துவார்கள். அந்த 17 வயதுச் சிறுமியின் ஒவ்வொரு நினைவு நாளுக்கும் இது தொடர்ச்சியாக நடைபெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அனிதா இதற்காகவா இறந்தாள். அனிதா கல்வி உரிமை மறுக்கப்பட்ட சிறுமி.

`நீ பல ஆயிரம் ரூபாய் பணம் கட்டிப் பயிற்சி பெற்றால்தான், இந்தத் தேர்வில் வெற்றி அடையலாம். உனக்கு ஆங்கில அறிவு இருந்தால், இந்தத் தேர்வினை எளிதில் புரிந்துகொள்ளலாம். நீ மத்திய பாடத்திட்டத்தில் படித்திருந்தால் உனக்கு இந்தத் தேர்வு எளிதாக இருக்கும். எப்படியோ, நீ கட்டாயம் நீட் தேர்வினை எழுதித்தான் ஆக வேண்டும்’ என்கிற நமது கல்விமுறை அவளை அச்சப்படுத்தியது. அழுத்தம் கொடுத்தது. `எப்படியும் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைச்சிரும்க்கா’ என்று நம்பிக்கையுடன் பேசியவளுக்கு அரசு இழைத்த துரோகம் மட்டுமே அவளை அவ்வாறு செய்யத் தூண்டியது. இல்லை, அவளது தற்கொலைக்கு எவ்விதத்திலும் இங்கே ஆதரவளிக்கவில்லை. ஆனால், `கல்விக்காக ஓர் உயிரைப் பலி கொடுத்திருக்கிறோமே' என்கிற வருத்தம்... வலி. காலங்காலமாக நாம் பேசிக் கொண்டிருக்கும், விவாதித்துக் கொண்டிருக்கும் அடிப்படைக் கல்வி மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் அனிதாக்களையும், பிரதீபாக்களையும் இழக்காமல் இருப்பதற்கான வழி. 

`அடிப்படைக் கல்வியில் மாற்றம் வேண்டும்' என்று சொல்கிறோமே ஒழிய, அது எப்படியானதாக இருக்கவேண்டும் என்கிற அடுத்தகட்டத்தை நாம் இன்னும் எட்டவில்லை. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான பாபா சாகேப் அம்பேத்கர், வணிகமயமாக்கப்படும் கல்வி பற்றி இப்படியாகச் சொல்கிறார், ``நமது மாகாணத்தில் கல்விக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசும்போது, கல்விக் கட்டணங்கள் பற்றிக் குறிப்பிட வேண்டியதாக இருக்கிறது. கல்லூரிகளுக்காகச் செலவிடப்படும் நிதியங்களில் 36 சதவிகிதம் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணங்களிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேல்நிலைப் பள்ளிக் கல்விக்கான கட்டணங்களிலிருந்து 31 சதவிகிதம் நிதியமாகச் செலவிடப்படுகிறது. 

நடுநிலைப் பள்ளிகளுக்கான கட்டணங்களிலிருந்து 26 சதவிகிதம் கல்வி உபயோகங்களுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கல்வியை வணிகமாக்குவது என்பது இதுதான். ஆனால் உணவு, உடை, இருப்பிடம் போலக் கல்வி எல்லோருக்கும் சென்று அடையவேண்டிய அத்தியாவசியம் இல்லையா. பொருளாதார ரீதியாகவும், சமூகரீதியாகவும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் தற்போதுதான் மேல்நிலைக் கல்வி, உயர்கல்வி என அடுத்தடுத்த படிகளை எட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் கல்வியானது, அவர்கள் அடையக்கூடிய உயரத்தில் வைக்கப்பட வேண்டும்’ என்கிறார். 

மேலும், சட்டக்கல்வி சீர்திருத்தம் பற்றி அரசுக் கல்லூரி இதழுக்காகக் கட்டுரை ஒன்றை எழுதிய அவர் இப்படியாகக் குறிப்பிடுகிறார், ``ஒரு பிரச்னை இருக்கிறது என்றால் அது சம்பந்தமான குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு சில பாகுபாடுகள் செய்வது அவசியம். சட்டத் தொழிலில் அளவுக்கு அதிகமானவர்கள் இருக்கிறார்கள் என்கிற பிரச்னையை சட்டக் கல்வி பிரச்னைகளிலிருந்து தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். கல்விக் கண்ணோட்டத்தில் இருந்தும் சமூக நீதிக் கண்ணோட்டத்தில் இருந்தும், சட்டத் தொழிலை ஒரு சிலரின் ஏகபோகமாக்கும் அடிப்படையில் சட்டக் கல்வி முறையை வகுப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஒரு திறமையான வழக்கறிஞரைத் தோற்றுவிப்பதற்கு எத்தகைய சட்டக் கல்வி வழங்கப்படவேண்டும் என்பது முற்றிலும் ஒரு கல்விப் பிரச்னையே ஆகும். அதற்குக் கல்வியாளராலேயே தீர்வு காணப்பட வேண்டும். அதே பொழுதில் ஒரு தொழிலாக சட்டத்துறையை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்து, அளவுக்கு மீறிப்போனால் அதனால் பாதிக்கப்படக் கூடாது” என்கிறார். 1932 ல் சட்டத் துறைக்காக அவர் எழுதியது 2018 ல் மருத்துவத் துறைக்கும் அழகாகப் பொருந்திப் போகிறது.     

நீட் தேர்வு வேண்டும் என்றவர்களும், நீட் தேர்வு எழுத விண்ணப்பப் படிவம் ஒன்றுக்கு ரூ.1500/- என்று நிர்ணயித்தவர்களும், நீட் தேர்வைப் போல மற்ற துறைகளுக்கும் புதியதாகத் தேர்வுமுறையைக் கொண்டுவருவதில் தீவிர முனைப்புடன் செயல்படுபவர்களும் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்!

தலைமுறையின் கனவுகள் அவர்களுக்குப் புரியட்டும்.

அடுத்த கட்டுரைக்கு