அலசல்
Published:Updated:

கவர்னர் டிக் அடித்தால் துணைவேந்தர்?

கவர்னர் டிக் அடித்தால் துணைவேந்தர்?
பிரீமியம் ஸ்டோரி
News
கவர்னர் டிக் அடித்தால் துணைவேந்தர்?

சர்ச்சை நியமனங்கள்

மிழக உயர்கல்வித்துறையில் இதற்குமுன் இவ்வளவு மோசமான அவலம் நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான்! பல்கலைக்கழகங்களில் ஊழல், முறைகேடு எனச் சர்ச்சைகளாக வந்துகொண்டிருக்கும் நிலையில், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே புதிய துணைவேந்தர்களாக நியமிப்பது பிரச்னை ஆகியுள்ளது. கவர்னர் பதவியில் இருப்பதால், மாநில அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு வேந்த ராகவும் உள்ள பன்வாரிலால் புரோஹித், பதவிக்கு வந்து ஆறு மாதங்களுக்குள் நடந்த மூன்று துணைவேந்தர்கள் நியமனங்கள் சர்ச்சைக் குள்ளாகியுள்ளன. கவர்னர் மாளிகையிலிருந்து நீண்ட விளக்கம் வந்தும், சர்ச்சைகள் ஓயவில்லை.

இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கேரளாவைச் சேர்ந்த பிரமிளா குருமூர்த்தி என்பவர் நியமிக்கப்பட்டார். பிரபல தமிழ் இசைக்கலைஞர் புஷ்பவனம் குப்புசாமியைப் புறக்கணித்துவிட்டு, இவர் நியமிக்கப்பட்டதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்பட பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பிரமிளாவைத் தேர்ந்தெடுத்த பின்னர், அமெரிக்காவின் கிளீவ்லாந்து கலைநிறுவனத்துடன் பல்கலைக் கழகத்தின் சார்பில் ரூ.5 கோடி ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்ளப்பட்டது. பிரமிளாவைப் பரிந்துரை செய்த தேடுதல்குழுவில் இருந்த ஒருவருக்கும் இந்த நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது குற்றச்சாட்டின் மையம்.

கவர்னர் டிக் அடித்தால் துணைவேந்தர்?

2018 பிப்ரவரியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு ஆந்திராவைச் சேர்ந்த தம்ம சூரிய நாராயண சாஸ்திரியும் கடந்த வாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவும் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டனர்.

மற்றவர்களின் எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், சட்டப் பல்கலைக்கழக இணைவேந்தரான சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பகிரங் கமாக அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பது முக்கியமானது. நீதிபதி ஜெகதீசன் தலைமையிலான தேடுதல் குழு, வின்சென்ட் காமராஜ், டேவிட் அம்புரோஸ், பாலு ஆகிய மூன்று பேரை இறுதி செய்தது. கவர்னர் அதை ஏற்காமல், மகாராஷ்டிர மாநிலம் புனே பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தம்ம சூரியநாராயண சாஸ்திரியைத் தன்னிச்சை யாகத் தேர்ந்தெடுத்தார். சட்டப் பல்கலைக் கழகத்துக்குச் சட்ட அமைச்சர்தான் இணைவேந்தர். தேர்வுசெய்யப்பட்டவரின் பெயர் இணைவேந்தர் மூலமாக அனுப்பப்பட்டு, நியமனத்தை கவர்னர் அறிவிப்பதுதான் முறை. அதாவது, ‘‘அறிவிப்பு மட்டும்தான் கவர்னரின் அதிகாரம். தேர்வுசெய்வது அரசுதான்’’ என்கிறார்கள் அரசியமைப்புச் சட்ட வல்லுநர்கள்.

அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டுள்ள தற்கு தி.மு.க உள்பட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ‘‘சூரப்பா நியனத்தில் உடன்பாடு இல்லை’’ என அமைச்சர் பாண்டியராஜன் வெளிப்படையாகவே சொன்னார். காவிரிப் பிரச்னையில் கர்நாடக அரசு அடாவடி செய்துவரும் நிலையில், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவரை தமிழகம் முழுவதற்குமான ஒரு பல்கலைக் கழகத்துக்குத் துணை வேந்தராக நியமித்திருப்பது அரசியல் கொதி நிலையை மேலும் அதிகரித்துள்ளது.

அண்மையில் நியமிக்கப்பட்ட மூன்று துணைவேந்தர்களுமே ‘ஆர்.எஸ்.எஸ். சார்புடை யவர்கள்’ என்பதும், அவர்களின் கடந்த கால ‘தகுதிக்குறைவு’கள் கண்டுகொள்ளப்படவில்லை என்பதும் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் வாதம்!

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக் குழு உறுப்பினராக இருந்தவரும், மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரி யருமான கிருஷ்ணசாமியிடம் பேசினோம். ‘‘இப்போது பல்கலைக்கழகங்களில் ஊழலும் முறைகேடும் நடப்பதால், புதிய துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னர் கறார் காட்டுகிறார் எனக் கூறுகிறார்கள். அப்படியா நியமனங்கள் நடந்துள்ளன? சூரப்பா ரோப்பர் ஐ.ஐ.டி-யின் நிறுவனர்-இயக்குநராக 2010-ல் நியமிக்கப்பட்டவர். இரண்டாவது முறை அவருக்குப் பதவி நீட்டிப்பு தரப்படவில்லை. ‘அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்றுவிடுவார்; நிர்வாகத் திறமை இல்லை’ எனக் காரணங்கள் சொன்னார்கள். அப்படிப்பட்டவரைத்தான் இங்கே கொண்டுவந்திருக்கிறார்கள். முன்னர் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் குறிப்பிட்ட வட்டாரத்தில் பலமாக இருக்கும் சாதியினரையும் அரசியல் சார்புள்ளவர்களையும் நியமித்த கதைதான் இப்போது வேறு வடிவம் எடுத்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள், ஆர்.எஸ்.எஸ் சார்புடையவர்களாக உள்ளனர். 20 ஆண்டுகளாக உயர்கல்விக் கூடங்களில் எது பிரச்னையாக இருக்கிறதோ, அதுவே தொடர்கிறது என்றால், இது என்ன முன்னேற்றம்? புதிதாக அமைக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில்கூட அந்தப் பகுதியில் உள்ளவர்களைத்தான் துணைவேந்தராக நியமித்துள்ளனர்’’ என்கிறார் அவர். 

கவர்னர் டிக் அடித்தால் துணைவேந்தர்?

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினரும் ஓய்வுபெற்ற அரசுக் கல்லூரி முதல்வரு மான பேராசிரியர் சிவக்குமார், ‘‘நியமன முறையே பிரச்னை’’ என்கிறார். ‘‘பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் நாட்டின் கவர்னர் ஜெனரல் பல்கலைக்கழக விசிட்டராகவும் மாகாண கவர்னர்கள் வேந்தர் களாகவும் செயல்பட்டனர். 1923-ல் இதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. இப்போதும் அதே காலனியாதிக்கச் சட்டம் தொடர்கிறது. இந்தச் சட்டத்தைத் திருத்தியாக வேண்டும். துணைவேந்தர் தேர்வுமுறையை மாற்றவேண்டும். துணைவேந்தர் பதவிக்கான போட்டியாளர்களின் பட்டியலை வெளிப்படையாக வைக்கவேண்டும். ஆசிரியர் பிரதிநிதிகள், மாணவர் பிரதிநிதிகளும் தேர்வுக் குழுவில் இடம்பெறவேண்டும். மரபுக்கு விரோதமாக, வேற்று மாநிலங்களில் உள்ளவர் களைக் கொண்டுவந்திருப்பது தவறான செயல்பாடு. நம் கல்விச்சூழலை, இட ஒதுக்கீடு போன்ற சமூகநீதித் தன்மையைப் புரிந்துகொள்ளா தவர்களால் எப்படிச் சரியாகச் செயல்படமுடியும்? மாநில அரசே இதில் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்ததாக இருக்கவேண்டும். ’’ என அழுத்தமாகச் சொல்கிறார் சிவக்குமார். 

உயர்கல்வியில் ஏதோ ஒன்றை நிகழ்த்தப்போகிறார் என அதிரடிகள்மூலம் பெயர்பெற்றவர் கவர்னர் புரோஹித். ’பழைய மொந்தையில் புதிய கள்’ போல அவர் ஆகிவிடக் கூடாது என்பதுதான் கல்வியாளர்களின் எச்சரிக்கையான கோரிக்கை!

- இரா.தமிழ்க்கனல்