Published:Updated:

`குழந்தைத் தொழிலாளர்கள், பிஞ்சு வயதில் திருமணம்!’ - பழங்குடிக் குழந்தைகள் திசைமாறும் சோகம்

`குழந்தைத் தொழிலாளர்கள், பிஞ்சு வயதில் திருமணம்!’ - பழங்குடிக் குழந்தைகள் திசைமாறும் சோகம்
`குழந்தைத் தொழிலாளர்கள், பிஞ்சு வயதில் திருமணம்!’ - பழங்குடிக் குழந்தைகள் திசைமாறும் சோகம்

`குழந்தைத் தொழிலாளர்கள், பிஞ்சு வயதில் திருமணம்!’ - பழங்குடிக் குழந்தைகள் திசைமாறும் சோகம்

பழங்குடியினச் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு திட்டங்களைக் கொடுத்து, அவர்களின் வாழ்வு மேம்படுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மார் தட்டிக்கொள்கிறது தமிழக அரசு. ஆனால், பழங்குடியினரின் முன்னேற்றத்துக்கான முதல்படியான கல்வியே, அவர்களுக்குச் சரியாகச் சென்று சேரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படும் பல பள்ளிகளில், போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், ஆர்வத்துடன் கல்வி கற்க ஆரம்பித்த பழங்குடியினக் குழந்தைகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

கடந்த சில வருடங்களாகவே 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், ஈரோடு மாவட்டம் முதல் மூன்றில் ஏதாவது ஓரிடத்தைத் தக்கவைத்துக் கொள்வது வழக்கம். கல்வியில் சிறந்த மாவட்டமாக ஈரோடு இருக்கிறது என்ற பிம்பத்தைப் பார்த்து, தமிழகத்தின் பல இடங்களிலிருந்து ஈரோட்டுக்கு மாணவர்கள் படிக்க வருகின்றனர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் என்ற நிலையில், அப்படிப்பட்ட இந்த மாவட்டத்திலேயே ஒரு பகுதியில் சரியான கல்வி கிடைக்காமல் ஏங்கும் குழந்தைகள் இருக்கத்தான் செய்கின்றனர் என்பது மிகவும் கொடுமையான விஷயம். அதுவும் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள பழங்குடிக் குழந்தைகள் என்பது பெரும் சோகம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா பர்கூர் மலைப் பகுதியில் போக்குவரத்து வசதியற்ற ஒரு கடைக்கோடி கிராமம் கொங்காடை என்ற மலைக்கிராமம். இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல குக்கிராம மாணவர்களும் படிக்க, பழங்குடியினர் நலத்துறை மூலம் கொங்கடையில் 1993-ல் தொடக்கப் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. 1998-ல் இந்தப் பள்ளி நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியைச் சுற்றி பள்ளிக்கல்வித் துறை மூலம் 4 தொடக்கப் பள்ளிகளும், 3 குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. அருகாமையில் உயர்நிலைப் பள்ளி ஏதுமில்லாததாலும், கிட்டத்தட்ட 50 கி.மீ க்கு மேல் பயணம் செய்து படிக்க வேண்டும் என்ற காரணத்தாலும் பல மாணவர்கள் 8 ம் வகுப்புடன் தங்களது படிப்பை நிறுத்திக்கொள்ளும் நிலை உள்ளது. இவ்வாறு படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள், குழந்தைத் தொழிலாளர்களாகவும், மாணவிகள் குழந்தைத் திருமணத்துக்கும் ஆளாகின்றனர். 

இதற்கு முடிவுகட்ட இந்தப் பள்ளியை உடனடியாக உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டுமென பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் கடுமையாகப் போராடின. பத்தாண்டு கால தொடர் முயற்சியின் விளைவாக, 2017-ம் ஆண்டு ஆகஸ்டில் இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 9 ம் வகுப்புக்கான பள்ளிச் சேர்க்கை நடைபெற்றதில் 50 மாணவர்கள் 9-ம் வகுப்பில் ஆர்வத்தோடு பள்ளியில் சேர்ந்தனர். ஆனால், தற்போது காலாண்டுத் தேர்வு முடிந்து இரண்டாம் பருவம் தொடங்கியுள்ள நிலையில், உயர்நிலைப் பள்ளிக்கான அரசாணையை வழங்கி, 9-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்த ஆசிரியர்கள் நியமிக்காமல், அரசு அலட்சியமாக இருக்கிறது. ஏற்கெனவே இருந்த நடுநிலைப் பள்ளியிலேயே 7 ஆசிரியர்களுக்கு 4 ஆசிரியர்கள்தாம் இருக்கின்றனர். அந்த 4 ஆசிரியர்கள்தாம் தற்போது 9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் சேர்த்து பாடம் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, பர்கூர் மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் கிட்டத்தட்ட 50 சதவிகித மாணவர்கள் தேர்ச்சிபெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பழங்குடியினர் கல்வி மேம்பாட்டு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நடராஜ் கூறுகையில், ``தமிழகத்திலுள்ள 100 நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தி, கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்கள். அதில் 95 பள்ளிகள் பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ளவை. மீதமுள்ள 5 பள்ளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படும் பள்ளிகள். பள்ளிக்கல்வித் துறையில் தரம் உயர்த்தப்பட்ட 95 பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு

விட்டனர். ஆனால், தரம் உயர்த்தப்பட்ட 5 பழங்குடி மாணவர்களுக்கான பள்ளிகளில் ஒன்றான, கொங்கடை பள்ளிக்கு இன்னும் ஒரு ஆசிரியர்கூட நியமிக்கப்படவில்லை. பழங்குடியினப் பெற்றோர்களும், மாணவர்களும் நம்மைக் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற அதிகாரிகளுடைய அலட்சியப்போக்கும், அக்கறையின்மையும்தான் இதற்குக் காரணம். இந்தக் கல்வி ஒன்றே நம்முடைய பழங்குடியின சமுதாயத்தினை முன்னேற்றும் என நினைத்து, இந்தத் தலைமுறை குழந்தைகள், தாங்களாகவே படிக்க முன்வந்துள்ளனர். ஆனால், அரசின் அலட்சியத்தால் சரியான கல்வி கிடைக்காமல் பள்ளிப் படிப்பைப் பாதியில் விடும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. இவர்கள் மீண்டும் குழந்தைத் தொழிலாளர்களாகவும், பெண் குழந்தைகளை சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுவார்கள். இதனால், அவர்களின் வாழ்க்கை சீரழியும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். எனவே, இனியாவது அரசு பழங்குடியின குழந்தைகளுக்கான கல்வியில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் இளங்கோவிடம் பேசினோம். ``சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சமீபத்தில்தான் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டேன். இருக்கின்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்குச் சிறப்பான கல்வியைக் கொடுத்து வருகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறை சம்பந்தமாக அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்றார்.

சமூகத்தில் எந்தவிதமான ஏற்றத்தையும் காணாத பழங்குடியின மக்களின் வாழ்வில், அடிப்படையான மாறுதலை ஏற்படுத்தக்கூடிய கல்வியின் தரத்தை உயர்த்துவதுடன், ஆசிரியர்களை நியமிக்காமல் அவர்களுக்கான கல்வி உரிமையை அரசு புறக்கணிப்பது நியாயமா என்ற கேள்வி எழுகிறது...!

அடுத்த கட்டுரைக்கு