Published:Updated:

`இனி வேதம் படிச்சாலும் இன்ஜினீயரிங்கில் சேரலாம்!’ - மத்திய அரசின் புதிய பிளான்

`இனி வேதம் படிச்சாலும் இன்ஜினீயரிங்கில் சேரலாம்!’ - மத்திய அரசின் புதிய பிளான்
`இனி வேதம் படிச்சாலும் இன்ஜினீயரிங்கில் சேரலாம்!’ - மத்திய அரசின் புதிய பிளான்

நாட்டிலேயே முதன்முறையாக வேதம் மற்றும் அது தொடர்பான கல்விக்கென வாரியம் (Bharatiya Shiksha Board) அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய மனித வளத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அண்மையில் மஹரிஷி சந்திபனி தேசிய வேத ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சந்திப்பு ஒன்றில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதை அறிவித்தார். இன்னும் ஒருவாரத்துக்குள் அந்த வாரியத்துக்கான சட்ட திட்டங்களை, ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர் குழு உருவாக்கித் தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. 

வேதமுறைக் கல்வி வாரியம் உருவானது எப்படி? 

2015-ம் வருட இறுதி மாதங்களில் பதஞ்சலி நிறுவனத்தின் பாபா ராம்தேவ், `வேத வழிக் கல்விக்கான தனி வாரியமும் அரசு பல்கலைக்கழகமும் நிறுவப்பட வேண்டும்' என்கிற கோரிக்கையை அரசுக்கு முன்வைத்தார். அது, அப்போது நிராகரிக்கப்பட்டாலும், அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, 23 மே 2016-ம் வருடம் வேதமுறைக் கல்வி வாரியம் அமைப்பதற்கான திட்டங்களை முன்மொழிந்தார். 2014-ல் அமைக்கப்பட்ட இரண்டாவது சம்ஸ்கிருத கமிஷன் மற்றும் வேத பாடசாலைகள், குருகுலங்களின் ஒருங்கிணைந்த பரிந்துரையின் அடிப்படையில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டது. பல கட்ட திட்ட ஆலோசனைகள் மற்றும் செயல்பாடுகளுக்குப் பிறகு, கடந்த 11 ஜனவரி 2019-ல் தற்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் இதை அதிகாரபூர்வமாகவே அறிவித்திருக்கிறார். 

எப்படிச் செயல்படும் இந்த வாரியம்?

வேதமுறைக் கல்வி வாரியத்தின் புரிதல்படி, வேதங்கள் அனைத்தும் தெளிவாகவே விளக்கப்பட்டும் பெரும்பாலான மக்களின் புரிதலுக்கும் சென்றடைந்துவிட்டது. ஆனால், வாரியமாக அமைக்கப்பட்டு கல்வி கற்கப்படும் சூழலில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். இந்த வாரியத்தின் திட்டங்களின்படி, பள்ளிக்கல்வியில் அறிவியலும் சமூகக் கல்வியும் வேதத்துடனும் சம்ஸ்கிருதத்துடனும் இணைந்தே கற்பிக்கப்படும். மாணவர்களின் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் அவர்கள் அறிவியல் மற்றும் சமூகக் கல்வி அல்லது வேதம் மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை முக்கியப் பாடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இப்படி அமைக்கப்படும் பள்ளிகள் அல்லாமல் இது மாதிரியான பாடத்திட்டங்களை ஏற்கெனவே அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியிருக்கும் பள்ளிகளும் மற்றும் நிதியுதவி பெறும் வேத பாடசாலைகளும் இனி இந்த வாரியத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வரும். மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கல்விச் செயல்பாடுகளுக்கு நிகரான கல்வியை வேதமுறைக் கல்வி வாரியத்தின் வழியாக வழங்க ஆவன செய்யப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் தெரிவித்துள்ளது. 

பன்னிரண்டாம் வகுப்பும் வேத விபூஷனும் ஒன்றா?

இடைநிலைக் கல்வி வாரியத்தின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிகள்போல வேதமுறைக் கல்வி வாரியத்தின் கீழ் வேத பூஷன் மற்றும் வேத விபூஷன் போன்ற தேர்ச்சிப் படிநிலைகள் இருக்கின்றன. ஆனால், இடைநிலைக் கல்வி வாரியத்துடன் வேதமுறைக் கல்வி வாரியத்தை ஒரே தராசில் வைத்து ஒப்பிடுவது சரியா? இதுபற்றி பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகையில், ``இடைநிலைக் கல்வி வாரியத்துக்குச் சரிசமமான இடத்தில் குறிப்பிட்ட ஒரு சமயம் சார்ந்த கல்வி வாரியத்தை எப்படிப் பொருத்திப் பார்க்க முடியும்? இடைநிலைக் கல்வி வழியாக, பன்னிரண்டாம் வகுப்புக் கல்வி முடிப்பவரும் வேத வழிக் கல்விமுறை வழியாகக் கல்வி முடிப்பவரும் ஒரே வகையிலான மேற்கல்விக்கு எப்படித் தகுதியானவர்களாக இருப்பார்கள்? அனைத்து ஏழைகளுக்குமாகக் கல்வி சென்றடைய வேண்டும் என்றும் தொடக்கக் கல்வியை மேம்படுத்த வேண்டுமென்றும் ஒருபக்கம் அனைவரும் வலியுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில், சமயம் சார்ந்த கல்வி வாரியத்தின் அவசியம் என்ன என்கிற கேள்வி எழுகிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட சமயத்துக்கான கல்வி வாரியம் என்று அரசே முன்னெடுப்பது அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமத்துவத்துக்கும் எதிரானது. ஒரு தனிநபர் சமயம் சார்ந்த கல்வியைப் பயில்வதை யாரும் எதிர்க்கவில்லை. அதற்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால், மத்திய மற்றும் மாநிலக் கல்வி வாரியத் தேர்ச்சிகளுடன் சமய சார்பு கல்வி வாரியத் தேர்ச்சியை ஒப்பிட முடியுமா?”  என்று கேள்வி எழுப்புகிறார்.

அடுத்த கட்டுரைக்கு