Published:Updated:

`அரசு மழலையர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் விதியை மீறுவதா?’ - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

`அரசு மழலையர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் விதியை மீறுவதா?’ - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
`அரசு மழலையர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் விதியை மீறுவதா?’ - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

ங்கன்வாடி மையங்களில் அரசு புதிதாகத் தொடங்க உள்ள மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு, அரசுப் பள்ளிகளில் பணியாற்றிவரும் இடைநிலை ஆசிரியர்களைப் பணி அமர்த்தப்போவதாகத் தமிழகக் கல்வித்துறை அறிவித்து, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 'இந்த அரசாணை ஜனவரி 30 வரை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதால், இடைநிலை ஆசிரியர்கள் சிறிது நிம்மதி அடைந்துள்ளனர்.

``தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு சார்பில் அங்கன்வாடி மையங்களில் மழலையர் பள்ளி தொடங்கப்படும்" எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். ஆனால், இதற்காகத் தனியாக ஆசிரியர்களைத் தேர்வு செய்யாமல் ஏற்கெனவே பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் அங்கு பணிமாறுதல் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இது இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. 

அரசாணையை எதிர்த்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில நிர்வாகி வின்சென்ட் பால்ராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த வழக்கில், ``சமூக நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 89-ன்படி தொடக்க கல்வித்துறை சார்பில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, அரசு புதிதாகத் தொடங்கவுள்ள மழலையர் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் பணி அமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை எடுக்க ஆசிரியர்கள் கிண்டர் கார்டன் பயிற்சி அல்லது மாண்டிசோரி கல்வி பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

இந்தப் பயிற்சி எடுக்காத இடைநிலை ஆசிரியர்களை எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்குப் பணியமர்த்துவது சரியானது அல்ல. இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக இருந்தால், அதே துறையில்தான் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஆனால், விதிகளுக்கு மாறாக, தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் பணியாற்ற அரசாணை வெளியிட்டிருப்பது ஏற்புடையது அல்ல. தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள இடைநிலை ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி ஆசிரியர்களாக நியமிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக சமூக நலத்துறை 11.12.2018 அன்று வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியன், ``இடைநிலை ஆசிரியரின் நியமனத்துக்குத் தகுதி என்ன, கடந்த ஆண்டுகளில் எந்தத் தகுதியின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமக்கப்பட்டார்கள். இதுவரை எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். உபரியாக எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதைப் பள்ளிக்கல்வித் துறையிடம் விளக்கம் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டிருந்தார். 

இந்தநிலையில், இவ்வழக்கை இன்று விசாரித்த  நீதிபதி, ''எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு மாண்டிசோரி அல்லது கிண்டர் கார்டன் பயிற்சி பெற்றவர்களையே நியமிக்க வேண்டுமென விதி இருக்கும்போது, இடைநிலை ஆசிரியர்களை எப்படிப்  பணியமர்த்துகிறீர்கள்? பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும்போது உபரி என்று எப்படித் தெரிவிக்கிறீர்கள்'' என்று கேள்வி எழுப்பினார். அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''இந்த விவகாரத்தில் தளர்வு கோரி, தேசிய ஆசிரியர் கல்வி கழகத்தில் விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த விண்ணப்பம் நிலுவையில் இருக்கிறது. அதனால், ஜனவரி 30 வரை இந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது'' என்றார்.  

அரசு தரப்பின் பதிலைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தில் முறையாக அனுமதி வாங்காமலேயே தங்கள் இஷ்டத்துக்கு விதிகளை வளைத்து இடைநிலை ஆசிரியர்களைப் பணி மாற்றம் செய்ய நினைத்த அரசின் முடிவுக்கு உயர் நீதிமன்றம் தற்காலிகமாகத் தடை போட்டுள்ளது.