Published:Updated:

காரைக்குடியில் நடைபெற்ற மாதிரி நாடாளுமன்றம் - வெளுத்து வாங்கிய இளைஞர்கள்!

காரைக்குடியில் நடைபெற்ற மாதிரி நாடாளுமன்றம் - வெளுத்து வாங்கிய இளைஞர்கள்!
காரைக்குடியில் நடைபெற்ற மாதிரி நாடாளுமன்றம் - வெளுத்து வாங்கிய இளைஞர்கள்!

காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பங்கேற்கும் மாதிரி நாடாளுமன்றம் நடபெற்றது.

இளைஞர்களிடையே இந்திய அரசியலமைப்பு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் National Youth Parliament Festival என்ற விழாவை மத்திய இளைஞர் நல மற்றும் விளையாட்டுத்துறை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட வாரியாக நடைபெறும்  மாதிரி நாடாளுமன்றம் (Youth Parliament) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 55 மாணவர்கள் இதில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் பேசியபோது, `இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர் அல்லாதவர்களே. இங்கு அனைவருமே இளைஞர்களாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் எல்லாம் நாளைய தலைவர்களாக வளர வேண்டும்' என வாழ்த்துரைத்தார்.

நாடாளுமன்றத்தில் தனது அனுபவங்கள், நடைமுறைகள் பற்றி நீளமான பாடமே எடுத்தார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், `இளைஞர்கள்தாம் நாளைக்கு நாட்டை ஆளப்போகிறவர்கள். அவர்களுக்கு நாடாளுமன்ற நடைமுறைகள், மக்கள் பிரதிநிதிகளின் பணிகள், மக்களின் தேவைகள் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் வகையில் மாவட்ட வாரியாக மாதிரி நாடாளுமன்றம் (Youth Parliament) நடத்தப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படுகிற 5 பேர் மாநிலப் போட்டிக்கும், மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள்' என்றார். மாணவர்கள் நாடாளுமன்றம் போலவே அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் பதவிகள் கொடுக்கப்பட்டு செக்ரட்டரி ஜெனரல், செக்ரட்டரி, எம்.பி, மினிஸ்டர், சபாநாயகர் என நாடாளுமன்றம் போலவே காணப்பட்டது.

ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, யூத் பார்லிமென்ட் தொடங்கியது. கேள்வி நேரம், பதிலளிப்பு நேரம், மசோதா தாக்கல் செய்தல், குரல் வாக்கெடுப்பு என ஒருவேளை உண்மையான பார்லிமென்ட்டில் ஏதும் இருக்கிறோமா எனச் சந்தேகமே வந்துவிட்டது. பண மதிப்பிழப்பு, இணையப் பாதுகாப்பு, விளையாட்டுத்துறை, சூழலியல் மாற்றங்கள், அதற்கான முன்னேற்பாடுகள், தீவிரவாதம் என ட்ரெண்டிங் தலைப்புகளில் மாணவர்கள் வெளுத்து வாங்கினார்கள்.

மாதிரி நாடாளுமன்றத்தின் சபாநாயகராகப் பேசிய அமீரா பானு என்ற மாணவி, `வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அரசியலைப் பற்றி படிச்சதுகூட கிடையாது. இதுக்காக நிறைய பார்லிமென்ட் வீடியோ பார்த்து எப்படி நடைமுறைகள் இருக்குது, சட்டம் கொண்டு வருவதற்கு முன்பான விதிமுறைகள், எம்.பி, சபாநாயகரின் பணிகள் இப்படி நிறைய விஷயங்கள் கற்றுக்கிட்டோம்’ என்றார். சமூகத்துக்குச் சேவையாற்ற விரும்புபவர்கள், ஏற்கெனவே திகழ்கிற அரசியலமைப்பு குறித்தும் சட்டங்கள் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்று. குறிப்பாக, இளைஞர்கள் அதிகளவில் நாட்டம் செலுத்த இது மாதிரியான முயற்சிகள் வழிகாட்டுகின்றன.