Published:Updated:

`காவிமயமாகும் கல்வி நிலையங்கள்?!’ - கேரள மத்தியப் பல்கலைக்கழக உத்தரவில் சர்ச்சை

`காவிமயமாகும் கல்வி நிலையங்கள்?!’ - கேரள மத்தியப் பல்கலைக்கழக உத்தரவில் சர்ச்சை
`காவிமயமாகும் கல்வி நிலையங்கள்?!’ - கேரள மத்தியப் பல்கலைக்கழக உத்தரவில் சர்ச்சை

`தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் முன்னிறுத்தக்கூடிய தேசியம் என்பது, இந்துத்துவா தேசியம்தான். `தேசிய முக்கியத்துவம்’ என வரையறுக்காமல் குறிப்பிட்டால், அது இந்துத்துவக் கருத்துகளைத்தான் குறிப்பதாக அமையும்’

இந்திய உயர்கல்வித் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சர்ச்சைகளும் சிக்கல்களும் அதிகரித்துள்ளன. யூ.ஜி.சி கலைக்கப்பட்டது தொடங்கி, துணைவேந்தர் நியமனம், சர்ஜிக்கல் ஸ்டிரைக் சுற்றறிக்கை, ஆய்வுக்கான நிதி குறைப்பு, நிகழ்ச்சிகள் மற்றும் புத்தகங்களுக்கான தடை என நீளும் வரிசையில், அடுத்த வரவாக அமைந்துள்ளது கேரள மத்தியப் பல்கலைக்கழகத்தின் புதிய சுற்றறிக்கை!

.

பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தொடர்பான துணைவேந்தரின் உத்தரவு, ஆய்வுத் துறையின் சுதந்திரத்தில் நேரடியாகத் தலையிடுவதாக உள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்தச் சுற்றறிக்கையில், `டெல்லியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் சந்திப்புக்குப் பிறகு, கேரள மத்தியப் பல்கலைக்கழகம், கீழ்க்காணும் முடிவுகளை நடைமுறைப்படுத்த முடிவெடுத்திருக்கிறது.

 1) ஆய்வு மாணவர்கள், பொருத்தமற்ற துறைகளில் அல்லாமல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளில் மட்டுமே ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். முனைவர் ஆய்வில், மாணவர்களுக்கு விருப்பமான தலைப்புகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

 2) அனைத்து துறைப் பேராசிரியர்களும் தங்களின் துறை சார்ந்த தேசிய முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு ஆய்வுக்கான குறிப்பிட்ட தலைப்புகளைத் தயார்செய்ய வேண்டும். ஆய்வு மாணவர்கள், அந்தத் தலைப்புகளிலிருந்து தங்களுடைய ஆய்வை மேற்கொள்ளலாம்.' 

ஆய்வுத் துறைகளில் ஏற்கெனவே நிலவிவந்த கட்டுப்பாடுகள்போக, தற்போது புதிதாக இப்படியோர் அறிவிப்பு வந்திருப்பது, புதிய சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இதுபற்றி நம்மிடம் பேசினார் பெயர் குறிப்பிட விரும்பாத கேரள மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர்.

``மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது, பாதகமான முடிவு. கேரளப் பல்கலைக்கழகத்தில்தான் இதை முதல்முறையாகச் செயல்படுத்த இருக்கிறார்கள். இதில் `தேசிய முக்கியத்துவம்’ என்கிற அளவுகோலை யார் வரையறுப்பது என்பதில்தான் சிக்கல் உள்ளது. அதற்கான தெளிவான எந்த ஒரு வரையறையும் கொடுக்கப்படவில்லை. பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ளவர்களும் தங்களுடைய சுதந்திரத்தை மறந்துவிட்டு அரசின் உத்தரவைச் செயல்படுத்த முனைப்பாக உள்ளனர்.

`தேசிய முக்கியத்துவம்’ என்பது, ஒவ்வோர் அரசுக்கும் மாறுபடும். ஆட்சிக்கு ஒத்துப்போவதைப்போல ஆய்வுத் துறையின் கொள்கைகளையும் மாற்றி அமைக்க முடியுமா? இதை எவ்வாறு செயல்படுத்தப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

பல்கலைக்கழகத்தின் முக்கிய உறுப்புகளான அகாடமிக் கவுன்சில் மற்றும் எக்ஸிக்யூடிவ் கவுன்சிலில் உறுப்பினர்களில் பல்கலைக்கழகத்தைச் சாராத மற்ற கல்லூரிகள், கல்வி ஆய்வு அமைப்புகளைச் சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். இவர்களில் பலரும், ஆளும் தரப்பின் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களாகவே இருக்கின்றனர். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பிரதிநிதித்துவம் நிர்வாகத்தில் இருந்தாக வேண்டும் என்பது விதிகளில் உள்ளது. ஆனால், அது செயல்படுத்தப்படுவதில்லை. கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் பல்கலைக்கழக நிர்வாகக் குழுவில் இருந்தால் அரசிடமிருந்து வரும் உத்தரவுகளை யோசிக்காமல் செயல்படுத்துவதில்தானே குறியாக இருப்பார்கள். அரசின் கொள்கைகள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும் என்கிற கட்டாயம் பல்கலைக்கழகங்களுக்குக் கிடையாது. இதற்குள்ள சுதந்திரத்தைப் பற்றி நிர்வாகத்தில் உள்ளவர்கள் அறியவில்லை. இந்த அறிவிப்பால் உடனடியாக  புதிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துவிடாது என்றாலும், நீண்டகால நோக்கில் இது ஆய்வுத் துறையில் நிச்சயம் பாதகமான முடிவுகளையே ஏற்படுத்தும். மாணவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல்தான் இது” என்றார்.

``ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை மறைமுகமாகத் திணிக்கக்கூடிய நடவடிக்கை இது!'' எனக் கண்டித்த எழுத்தாளர் அ.மார்க்ஸ் பேசுகையில்...

``தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் முன்னிறுத்தக்கூடிய தேசியம் என்பது, இந்துத்துவா தேசியம்தான். `தேசிய முக்கியத்துவம்’ என வரையறுக்காமல் குறிப்பிட்டால், அது இந்துத்துவக் கருத்துகளைத்தான் குறிப்பதாக அமையும். ஏற்கெனவே சில மத்தியப் பல்கலைக்கழகங்களில் இந்துத்துவக் கருத்துகளைத் திணிக்க முற்பட்டு, கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து அவற்றை நிறைவேற்ற முடியாமல்போனது. தற்போது தேசியம், தேச முக்கியத்துவம் என்ற போர்வையில் தங்களுடைய ஆர்.எஸ்.எஸ் கருத்துகளைத் திணிக்கின்றனர். இந்திய உயர்கல்வியில் ஆய்வுத் துறை சந்திக்கும் அவலநிலை அனைவரும் அறிந்ததே. இந்தச் சமயத்தில் இத்தகைய குறுகலான உத்தரவுகள் எல்லாம் ஆய்வுத் துறையை மேலும் சீரழிக்கவே செய்யும்” என்றார்.

பல்கலைக்கழகத்தின் உத்தரவை ஆதரித்துப் பேசிய துணைவேந்தர் கோபகுமார், ``இதில் என்ன சர்ச்சை இருக்கிறது? நமக்குப் பருவநிலை

மாற்றம், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய ஆய்வுகளெல்லாம் தேவையில்லையா? இந்தியாவில் 30 சதவிகித மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளனர். அவர்களை முன்னேற்றுவதற்கான, பொருளாதார வளர்ச்சிக்கான ஆய்வுகள் தேவையில்லையா? தேசிய என்கிற வார்த்தையை ஏன் சர்ச்சையாகவே பார்க்கிறீர்கள்? நம்முடையது அற்புதமான நாடு. நான், இந்தியன் என்பதில் பெருமைகொள்கிறேன். உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 3 சதவிகிதத்துக்கும், ஆய்வுக்கு 1 சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் செலவுசெய்கிறோம். எதில் ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமோ அதில் கவனம் செலுத்தவேண்டும். இந்திய அரசின் முடிவும் அதுதான். நாங்கள் எதையுமே திணிக்கவில்லை, அறிவுரை மட்டுமே வழங்கியுள்ளோம்.

துறை பேராசிரியர்களே ஆய்வின் தலைப்பை முடிவுசெய்வார்கள். `தேசிய' என எது வந்தாலும், அது ஆர்.எஸ்.எஸ்-ஸின் சித்தாந்தத்தோடு தொடர்புடையது கிடையாது. அவ்வாறான சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன. இது முற்றிலுமான நேர்மறையான முடிவே” என்றார்.

பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு, உயர்கல்வியை மறைமுகமாகக் காவிமயமாக்கக்கூடிய செயல் எனக் கண்டித்து, ஆங்கில மொழித் துறைக்கான நிர்வாகக் குழுவிலிருந்து கேரள மாநிலப் பல்கலைக்கழகப் பேராசிரியை மீனா டி பிள்ளை ராஜினாமா செய்துள்ளார். கல்வி வளாகங்களைத் தாண்டி அரசியல் அரங்கிலும் இந்தச் சர்ச்சை எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி சசிதரூர், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி தன்னுடைய முகநூல் பக்கத்தில், `தற்போது அதிபுத்திசாலி பிரதம மந்திரியின் அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர், இந்த நாட்டின் அறிவுஜீவிகள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை முடிவுசெய்வார். குறைவான அறிவு ஆபத்தானது எனச்  சொல்லப்படுவது சரியாகத்தான் உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்,

பதவி விலகிய பேராசிரியை மீனா டி பிள்ளை நம்முடன் பேசுகையில், ``மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களேகூட இந்த முடிவை எதிர்க்க முடியாத சூழல்தான் நிலவுகிறது. சமீபத்தில் சிபிஎஸ்சி, என்சிஆர்டி பாடப்புத்தகத்திலிருந்து, `கேரளாவில் பெண்களின் மேல்சட்டை உரிமைக்காகப் போராடிய நங்கேளியின் பாடத்தை முக்கியமானதல்ல' என நீக்கிவிட்டனர். நங்கேளியின் வரலாறு என்பது, கேரள மறுமலர்ச்சி இயக்கங்களின் மண்ணோடு சார்ந்த வரலாறு. வரலாறு திரிக்கப்படும் இந்தக் காலகட்டத்தில், ஆய்வுக்கும் இந்த நிலைதான் ஏற்படும். மேலும், இது மாணவர்களின் அறிவுத்திறனை மட்டுப்படுத்தக்கூடிய செயலும்கூட. அனைத்துக் கல்வியாளர்களும் இந்த உத்தரவுக்கு எதிராகப் போராட வேண்டும். கல்வி நிலையங்களை காவிமயமாக்கக்கூடிய மறைமுகமான செயல் இது” என்றார்.

கண்டனங்கள் தொடர்ச்சியாகப் பதிவுசெய்யப்பட்ட நிலையில், `ஆய்வுக்கான துறைகளைத் தேர்ந்தெடுப்பதில் எந்த ஓர் அறிவிப்பும் வழங்கப்படவில்லை. ஆய்வுத் துறையை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தளங்களில் முன்னேற்ற வேண்டும் என்பது பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டது. ஆய்வுத் துறையில் சுதந்திரம் வேண்டும் என்கிற கொள்கையில் அரசு உறுதியாக இருக்கிறது' என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். தற்போது பி.எம்.ராதாமணி  என்கிற பேராசிரியையும் பல்கலைக்கழக நிர்வாகக் குழுவிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். 

அடுத்த கட்டுரைக்கு