Published:Updated:

இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்காதா? - பதிலளிக்கிறார் கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா! #LetsLearn

இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்காதா? - பதிலளிக்கிறார் கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா! #LetsLearn
இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்காதா? - பதிலளிக்கிறார் கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா! #LetsLearn

நம்மைக் கடந்து செல்லும் 100 பேரில் 50 பேர் இன்ஜினீயரிங் படித்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் `இன்ஜினீயரிங் படித்து எந்தப் பிரயோஜனமும் இல்லையே!’ என்ற புலம்பலும் அதிகமாகவே இருக்கிறது. இதற்கிடையே இந்த ஆண்டு இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர பல லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர். அவர்களுக்கும் இன்ஜினீயரிங் சம்பந்தமான பல சந்தேகங்கள் இருக்கின்றன. இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா என்பதில் தொடங்கி, அதில் எந்தப் பிரிவைத் தேர்தெடுக்கலாம், என்னென்ன வேலைவாய்ப்புகள் இருக்கின்றன உள்ளிட்ட இன்ஜினீயரிங் படிப்பு தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கு, கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா பதிலளிக்கிறார்.

``இன்ஜினீயரிங் படிப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாகச் சொல்லப்படுகிறதே... என்ன காரணம்?"

``அதில் உண்மையில்லை. இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்காது என வெளியே பரப்பப்படும் செய்தியால் இந்த எண்ணிக்கை கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இரண்டரை லட்சம் பேர் இன்ஜினீயரிங் படிக்க வருகிறார்கள். இதில், ஒரு லட்சம் பேர் மட்டுமே எந்த அரியரும் இல்லாமல் படிப்பை முடித்துவிட்டு வெளியே செல்கிறார்கள். இன்ஜினீயரிங் படிப்புக்கு அடிப்படையே கணக்குதான். அப்படியிருக்கையில், 12-ம் வகுப்பு கணிதப் பாடத்தில் 60 சதவிகித மதிப்பெண் எடுத்தவர்களுக்குப் பெரிதாக  சிரமமிருக்காது. ஆனால், சமீபகாலமாக விண்ணப்பித்த அனைவருக்குமே இன்ஜினீயரிங் சீட் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால், கணக்கில் 45 சதவிகிதம் எடுத்தவர்களுக்கும் இன்ஜினீயரிங் சீட் கிடைக்கிறது. அவர்களில் பெரும்பாலோர் இன்ஜினீயரிங்கில் உள்ள கணக்குகளில் திணறி அரியர்ஸ் வைத்துவிடுகின்றனர். இந்த அரியர்ஸுக்கே போராடுவதால், மற்ற பாடங்களிலும் கோட்டைவிடுகின்றனர். எனவே, அரியர்ஸ் வைத்திருக்கும் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை கிடைக்கவில்லையே என வருத்தப்படுவதில் நியாயமில்லை. மற்றபடி, இன்ஜினீயரிங் படிப்பில் எந்தக் குறைபாடும் கிடையாது. அது எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகவே இருக்கும்." 

``இன்ஜினீயரிங் படிப்பு சேர்க்கையில் பார்க்கவேண்டியது சிறந்த பிரிவுகளையா... சிறந்த கல்லூரிகளையா?"

``நிச்சயமாகக் கல்லூரிகளைத்தான். சிறப்பான கோர்ஸ் என எதுவும் கிடையாது. ஒருகாலத்தில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்றிருந்த இன்ஜினீயரிங் பிரிவுகள், இன்றைக்கு 50-க்கும் அதிகமான அளவில் உருவாகியிருக்கின்றன. இதற்குத்தான் வேலை கிடைக்கும், இதற்கு வேலை கிடைக்காது என்று நாமே முடிவுசெய்துவிடுகிறோம். `இந்த வருஷம் ஐ.டி தான் உலகத்துல சிறந்தது, அதைப் படிங்க' என்று சொல்வார்கள். அடுத்த வருஷம் `எலெக்ட்ரானிக்கல் இன்ஜினீயரிங்தான் சிறந்தது' என்று சொல்வார்கள். இதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. எனவே, எந்தப் படிப்பு சிறந்தது என்பது முக்கியமல்ல. எந்த ஒரு நல்ல கல்லூரியும், உங்களுக்கு நிச்சயமாக வேலைவாய்ப்பை, திறமையின் மூலமாக உருவாக்கிக் கொடுத்துவிடும். நாம் நினைத்த இன்ஜினீயரிங் பிரிவு கிடைக்காவிட்டாலும், நல்ல கல்லூரியில் சீட் கிடைத்து வேறு பிரிவு கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்."

இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்காதா? - பதிலளிக்கிறார் கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா! #LetsLearn

``இன்ஜினீயரிங் படித்த பலருக்கும் வேலைவாய்ப்பு இல்லாத சூழலில், இன்ஜினீயரிங் படிப்பைத் தேர்ந்தெடுப்பது சரியானதுதானா?"

``இன்ஜினீயரிங் படித்த பாதிப்பேர் வேலையில்லாமல் இருப்பதற்கு, அவர்களின் அக்கறையின்மையே காரணம். ஒரு கல்லூரி, 20 தனியார் நிறுவனங்களை வேலைவாய்ப்புக்காக அழைத்துவருகிறதென்றால், அந்த நிறுவனங்கள்தான் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், `எனக்கு இந்த கம்பெனி செட்டாகாது’ என மாணவர்களே நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த ஆட்டிட்யூட்டை மாணவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைக்கின்ற சிறந்த நிறுவனங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல துறை சார்ந்த கூடுதல் விஷயங்களை கோர்ஸ் படிக்கும் நான்கு வருடங்களில் மாணவர்கள் வளர்த்துக்கொள்வதில்லை. 10 இன்டர்வியூக்களில் தேர்வாகாதபோதுதான் அவர்களுக்கு அதுகுறித்த ஞானம் பிறக்கிறது. இன்றைக்கு வேலை கிடைப்பது என்பது பிரச்னையே இல்லை. அது பிரச்னையாக இருந்திருந்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆங்கிலப் பத்திரிகைகளில் வேலைக்கு ஆள்கள் தேவை என எட்டுப் பக்கங்களில் விளம்பரங்கள் வரவேண்டிய அவசியம் இருக்காது."

``எந்தெந்த இன்ஜினீயரிங் துறைகளைத் தேர்ந்தெடுத்தால், அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளன?"

``சிவில், மெக்கானிக்கல், ஐ.டி, இ.சி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் & எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் என டாப்பில் இருக்கின்ற 6 பிரிவுகளில் ஒன்றரை லட்சம் பேர் சேர்கின்றனர். ஏரோநாட்டிக்கல், ஆட்டோமொபைல் போன்ற 8 பிரிவுகளில் 50,000 மாணவர்கள் சேர்கின்றனர். இந்த 14 பிரிவுகளைத் தாண்டி இன்னும் 36 பிரிவுகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய பார்வை நம் மாணவர்களிடம் குறைவாக இருக்கிறது.

உதாரணமாக, பெட்ரோலியம் அண்டு பெட்ரோ கெமிக்கல் படித்தால், ஓ.என்.ஜி.சி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற இடங்களில் வேலை கிடைக்கும். மூன்று வருட அனுபவங்களுடன் குவைத் நாட்டுக்குச் சென்றால் நல்ல சம்பளம் கிடைக்கும். மெக்கானிக்கல் உட்பிரிவான புரொடக்‌ஷன் டெக்னாலஜி, மேனுஃபேக்சரிங் இன்ஜினீயரிங், இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் போன்றவற்றை படிக்கலாம்.

அதேபோல, சென்னை கிண்டி சிப்பெட்டில் பிளாஸ்டிக் இன்ஜினீயரிங், காரைக்குடி சிக்ரி எனப்படும் சென்ட்ரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் மற்றும் சேலத்தில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி  போன்ற இடங்களில் படிப்பதற்கான நல்ல துறைகள் இருக்கின்றன." 

இன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்காதா? - பதிலளிக்கிறார் கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா! #LetsLearn

``தமிழ்வழியில் இன்ஜினீயரிங் படித்தால் வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும்?"

``இப்போதைக்கு சரியான அளவில் வேலைவாய்ப்பு இல்லை என்பதுதான் யதார்த்தம். சிவில், மெக்கானிக்கல் போன்ற குறிப்பிட்ட பிரிவுகளை மட்டும்தான் அண்ணா பல்கலைக்கழகம் தனக்குக் கீழுள்ள ஒருசில அரசுக் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வியைக் கொண்டுவந்திருக்கிறது. தமிழ்வழியில் இன்ஜினீயரிங் படித்தவர்களை மட்டுமே பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் எடுப்பேன் என, தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டு முன்னுரிமை கொடுத்தால்தான் மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். இன்றைக்கு அந்த மாதிரியான எந்தச் சூழ்நிலையும் இல்லை. மொழிப்பாசம் இருக்கலாம். ஆனால், அது ஒரு ரிஸ்க்கான விஷயம்தான்." 

``இன்ஜினீயரிங் படித்து வெளியே வரும் பல லட்சம் பேரில், 80 சதவிகிதம் பேர் வேலை செய்யத் தகுதியில்லாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?"

``தங்களை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அக்கறை இருக்க வேண்டும். தமிழகத்தில் அதிகளவில் பி.காம் பிரிவில் 2 லட்சம் மாணவர்கள் வரை சேர்கிறார்கள். ஆனால், அதில் படித்து வெளியே வரும் 10,000 மாணவர்களுக்குக்கூட டேலி என்னும் மென்பொருள் பற்றித் தெரிவதில்லை. 80 சதவிகிதம் பேருக்கு நல்ல பயோடேட்டா எழுதத் தெரிவதில்லை. இதற்கு எந்த இன்ஜினீயரிங் கல்லூரி சொல்லித் தர முடியும்? மாணவர்கள்தான் மாற வேண்டும். தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்."

மேலும் பல கேள்விகளை வீடியோ வடிவில் காண...

Vikatan