Published:Updated:

முதல்முறையாக பொதுத் தேர்வைச் சந்திக்கும் ப்ளஸ் 2 மாணவர்கள்! - தயாராக உள்ளதா பள்ளிக்கல்வித்துறை?

பள்ளி

210 நாள்களில் நடத்தவேண்டிய பாடத்தை 168 நாள்களில் நடத்தப்பட்டுள்ளன. வருகைப் பதிவு அவசியமில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்ததால், மாணவர்களும் கொரோனா அச்சத்தால் சரியாக வகுப்புக்கு வரவில்லை.

முதல்முறையாக பொதுத் தேர்வைச் சந்திக்கும் ப்ளஸ் 2 மாணவர்கள்! - தயாராக உள்ளதா பள்ளிக்கல்வித்துறை?

210 நாள்களில் நடத்தவேண்டிய பாடத்தை 168 நாள்களில் நடத்தப்பட்டுள்ளன. வருகைப் பதிவு அவசியமில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்ததால், மாணவர்களும் கொரோனா அச்சத்தால் சரியாக வகுப்புக்கு வரவில்லை.

Published:Updated:
பள்ளி

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின்கீழ் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவலினால் கடந்தாண்டு (2020-21) பொதுத் தேர்வுகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய வகுப்புகளின் செயல்பாடுகள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் வழங்கப்பட்டது. அதன்பின் நடப்பு கல்வியாண்டில் தொற்று பரவல் குறைந்ததால் செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றன. கல்வியாண்டு தாமதத்தால் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு 35 முதல் 40 சதவீதம் வரையான பாடத்திட்டம் குறைக்கப்பட்டது.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

இருந்தபோதிலும், பண்டிகை கால தொடர் விடுமுறை, மழை பாதிப்பினால் உள்ளூர் விடுமுறை போன்ற காரணங்களால் பாடத்திட்டம் முறையாக முடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. வழக்கமான பத்தாம் வகுப்பிலேயே பொதுத்தேர்வை சந்தித்துவிட்டு, +2 வில் இரண்டாவது முறையாக பொதுத்தேர்வை எழுதுவார்கள் மாணவர்கள். ஆனால் இம்முறை மாணவர்கள் நேரடியாக +2 பொதுத்தேர்வை சந்திக்க இருக்கிறார்கள். பள்ளிக்கல்வித்துறையும், மாணவர்களும் தயாராக உள்ளார்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா தொற்று பரவலால் கிட்டதட்ட 2 ஆண்டுகள் வீட்டிலிருந்து கல்வி பயின்ற மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதால், பொதுத் தேர்வுக்கு அவர்கள் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்ற புகார் தொடர்ந்து ஒலித்து வரும் நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை (மே 5) தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த தேர்வைத் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து மொத்தம் 8.69 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிகிறது. மேலும், தற்போதைய ப்ளஸ் 2 மாணவர்கள் தங்கள் பள்ளிக்கல்வியில் எழுதவுள்ள முதல் பொதுத்தேர்வு இதுவாகும். ஏனெனில், கொரோனா பரவலால் இந்த மாணவர்கள் முந்தைய ஆண்டுகளில் 10, 11-ம் வகுப்பில் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டனர்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம்
அரசுத் தேர்வுகள் இயக்ககம்

அவர்களின் வாழ்க்கையில் முக்கிய கட்டமான இந்த தருணத்தை பள்ளிக்கல்வித்துறை சரியாக கையாண்டு உள்ளதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது, பாடத்திட்டத்தை முடிக்கக் காட்டிய ஆர்வத்தை மாணவர்களின் கல்வியில் காட்டவில்லை என்கிறார்கள் கல்வியாளர்கள். பல அரசுப் பள்ளிகளில் தேர்வு தேதி அறிவித்த பின்னர்தான், பாடத்திட்டமே முடிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பாடங்களைப் படிக்கவே நேரமே கிடைக்கவில்லை என்று மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், காலாண்டு, அரையாண்டுக்குப் பதிலாக 75 சதவீத பாடங்களுக்கு மட்டும் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. கொரோனா காரணமாகத் திருப்புதல் தேர்வுதான் மிக முக்கியமாகக் கருதப்படும் என்று புரளி கிளம்பியதால், கேள்வித் தாள்களும் வெளியாகிப் பரபரப்பானது. ஆனால், திருப்புதல் தேர்வு குறித்து பள்ளிக்கல்வி முறையான விளக்கத்தை அளிக்கவில்லை. இது ஆசிரியர்கள் மத்தியிலேயே குழப்பத்தை நீட்டிக்கச் செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுத் தேர்வுக்கு மாணவர்களை பள்ளிக்கல்வித்துறை முறையாகத் தயார் செய்ததா என்பது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் முன்னாள் இயக்குநர் கே.தேவராஜனிடம் கேட்டபோது, " பொதுத் தேர்வு குறித்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு உளவியல் பிரச்சனைகளைச் சரி செய்ய அரசு சார்பாகவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பாக பல்வேறு ஊக்கப் பிரச்சாரம் செய்யப்படும். இதன்மூலம் 90 சதவீத மாணவர்களுக்குத் தேர்வு பயம் நீங்கி விடும். ஆனால், தற்போதைய பிளஸ் 2 மாணவர்கள் முற்றிலும் வேறு. இவர்கள் இன்னும் பொதுத்தேர்வையே சந்திக்கவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் உளவியல் பிரச்னையினால்தான், வகுப்பறை, பொதுவெளி என எல்லா இடத்திலும் எல்லை மீறுகிறார்கள். இதனால், பிளஸ் 2 மாணவர்களை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தேர்வுக்குத் தயார் செய்து இருக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறையைச் செய்ய பள்ளிக்கல்வித்துறை தவறிவிட்டது என்றே கூறலாம்.

பி.கே.இளமாறன்
பி.கே.இளமாறன்

பாடத்திட்டம் முடிக்க வேண்டும் என்றே பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதே தவிர, மாணவர்களைத் தேர்வுக்குத் தயார் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தவே இல்லை. பாடங்களைப் படிக்கவும் மாணவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. தேர்வில் இவர்களால் 3 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தேர்வு எழுத முடியுமா என்றே சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை தேர்ச்சி விகிதத்தில் சரிவு ஏற்பட்டால், அதற்கு முழு பொறுப்பு பள்ளிக்கல்வித்துறையே சாரும்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

அதேபோல தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் பி.கே.இளமாறன் கூறுகையில், " செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டபோது மாணவர்களுக்கு கற்றல் முடக்கம் இருந்தது. அதனைச் சரிசெய்யவே ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இருந்தபோதிலும், மாணவர்களை பொதுத் தேர்வுக்குத் தயார் செய்வதற்காகத் திருப்புதல் தேர்வு பெரிய அளவில் நடத்தப்பட்டது. இது பிளஸ் 2 மாணவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்" என்றார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், "வழக்கமாக 210 நாட்களில் நடத்தவேண்டிய பாடத்தை 168 நாட்களில் நடத்தப்பட்டுள்ளன. வருகைப் பதிவு அவசியமில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்ததால், மாணவர்களும் சரியாக வகுப்புக்கு வரவில்லை. 3 திருப்புதலுக்குப் பதிலாக 2 மட்டுமே நடைபெற்றுள்ளது. மாலை நேரச் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டிருந்தால், படித்த பாடங்களை ரீக்கால் செய்ய வசதியாக இருந்திருக்கும். ஆனால், இவற்றை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே அவசரகதியில் தேர்வை அறிவித்து விட்டது.

பி.பேட்ரிக் ரெய்மாண்ட்
பி.பேட்ரிக் ரெய்மாண்ட்

அதேபோல, தேர்வு அட்டவணையில் கணினி அறிவியல், உயிர் வேதியியல், சமூக அறிவியல் தேர்வு முடிந்து ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் தேர்வு நடக்கவுள்ளது. இது மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும். சில பிரிவு மாணவர்களுக்குத் தேர்வுக்கு இடையே 10 நாட்களும் இடைவெளி உள்ளது. இதனைத் தேர்வுகள் இயக்ககம் முறையாக நெறி படுத்திருக்கவேண்டும். தேர்வுகளுக்கிடையே இடைவெளி குறைவாக இருப்பது கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கும். இவற்றைக் கவனத்தில் கொண்டு விடைத்திருந்தும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றார் கலக்கத்துடன்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசும்போது, ``பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு துறை சார்பாக எப்போதும் தனிக்கவனம் கொடுக்கப்படும். அதேபோல, தற்போதைய 12-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கூடுதல் கவனம் கொடுத்து, ஆசிரியர்கள் மூலமாகவே தேர்வு பயத்தைப் போக்க, கலந்துரையாடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன்பின், மாணவர்களின் மனநிலையில் மாற்றம் தெரிந்தது. ஒருசில பின் தங்கிய பள்ளிகளை தவிர கிட்டதட்ட எல்லா பள்ளிகளுக்குமே குறிப்பிட்ட காலத்துக்குள் பாடத்திட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. குறிப்பாக கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு 3 மாதங்களாகவே படிப்படியாக தேர்வு எழுதும் முறையை விளக்கி எடுத்துக் கூறினோம். அதேபோல, 2 திருப்புதல் தேர்வையும் பொதுத் தேர்வு போலவேதான் நடத்தினோம். எங்களுக்கு இருந்த காலகட்டத்தில், முழு முயற்சியைப் போட்டுள்ளோம். மேலும், கடினமான பாடங்களுக்குக் கூடுதல் விடுப்பு வழங்கிதான் தேர்வு நடக்கிறது. எனவே நல்ல முடிவு வரும் என்றே எதிர்பார்க்கிறோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நன்றாகப் பயிலும் மற்றும் பின்புலம் உள்ள மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகி இருப்பார்கள். ஆனால், சராசரி மற்றும் அதற்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கு வழக்கமான தேர்வு பயம் ஒருபக்கம், அவசர கதியில் முடிக்கப்பட்ட பாடத்திட்டம் மறுபக்கம் என மன அழுத்தம் அதிகரித்துள்ளது. இது தேர்ச்சி விகிதத்தில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றே கல்வியாளர்கள் கருத்தாக உள்ளது. மாணவர்களின் நலனையும் கருத்தில் கொள்வது அவசியம் ஆகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism