Published:Updated:

ஆம்புலன்ஸில் எஸ்.எஸ்.சி. தேர்வு: 79% மதிப்பெண் பெற்ற மாணவன்!

Vikatan Correspondent
ஆம்புலன்ஸில்  எஸ்.எஸ்.சி. தேர்வு:  79%  மதிப்பெண் பெற்ற மாணவன்!
ஆம்புலன்ஸில் எஸ்.எஸ்.சி. தேர்வு: 79% மதிப்பெண் பெற்ற மாணவன்!

மும்பை: மும்பையில் உடல்நலம் பாதிக்கப்பட்டபோதிலும் விடாப்பிடியாக ஆம்புலன்ஸில் அமர்ந்து 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதி,  79 சதவீத மதிப்பெண்களை பெற்ற மாணவனை சக மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

ஆம்புலன்ஸில்  எஸ்.எஸ்.சி. தேர்வு:  79%  மதிப்பெண் பெற்ற மாணவன்!

மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்த மாணவன் தயேய் அம்லானி. 16 வயதான அம்லானி நடந்து முடிந்த கல்வியாண்டில்  10 ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில், இறுதித் தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக கணையம் மற்றும் குடலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ஓரளவு உடல்நலம் தேறிய நிலையில், தேர்வுக்கு 2 தினங்கள் முன்னர்தான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். மருத்துவர்கள் தொடர்ந்து ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தி இருந்த நிலையில்,  அம்லானியோ, தேர்வை எழுதியே தீருவேன் என உறுதியாக இருந்தார். முதலில் அதற்கு சம்மதிக்காத அவனது பெற்றோர், பின்னர் அம்லானியின் மன உறுதியை பார்த்து, சிகிச்சை அளித்த மருத்துவர்களின் உதவியை நாடினர்.

இதனைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மற்றும் தேர்வு துறை அதிகாரிகளிடம் முறையிட்டதை தொடர்ந்து, அம்லானியை ஆம்புலன்ஸில் அமர்ந்து தேர்வு எழுத  அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அம்லானி காந்திவிலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்தபடியே ஒவ்வொரு தேர்வின்போதும் தேர்வு மையமான போரிவிலியில் உள்ள மேரி இம்மாகுலேட் பள்ளிக்கு ஆம்புலன்ஸில் சென்றார். அங்கு பள்ளி வளாகத்தினுள் ஆம்புலன்ஸில் அமர்ந்தபடியே அவர் ஒவ்வொரு தேர்வையும் எழுதினார். வரலாறு பாட தேர்வின்போது, அவர் திடீரென மயக்கமடைந்து விழுந்தார். ஆனாலும் சில நிமிடங்களில் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையை தொடர்ந்து, தேர்வை முழுவதுமாக எழுதி முடித்தார்.

இந்நிலையில் நேற்று மகாராஷ்ட்ராவில் நேற்று எஸ்.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் அம்லானி 79.2 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். இதனையறிந்து அம்லானி, அவனது பெற்றோர்கள், நண்பர்கள், பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்டோர் மிகவும் மகிழ்ச்சியடைந்து பாராட்டினர்.

"அம்லானியின் மன உறுதிதான் அவனுக்கு இந்த வெற்றியை தேடித்தந்துள்ளது. இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது" என்கிறார் அவனது தாயார் ரூபால்.

தற்போது முற்றிலும் குணமடைந்துவிட்ட அம்லானி, தனது ஜூனியர் காலேஜ் ( பன்னிரெண்டாம் வகுப்பு) படிப்பில் காமர்ஸ் பாடத்தை விருப்ப பாடமாக தேர்வு செய்து படிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹாட்ஸ் ஆப் அம்லானி!