மத்தியக் கல்வி அமைச்சகத்தில் இத்தனை காலிப் பணியிடங்களா? - ஆர்.டி.ஐ அதிர்ச்சி

மத்தியக் கல்வி அமைச்சகத்தில் 326 காலிப் பணயிடங்கள் இருப்பதாகத் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்திருக்கிறது.
மத்தியக் கல்வி அமைச்சகத்தில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை, வகுப்புவாரியாக ம.தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தார். இதற்கு, மத்தியக் கல்வி அமைச்சகத்தில் 754 பேர் பணியாற்றுகின்றனர். எஸ்.சி வகுப்பில் 195 பேரும், எஸ்.டி வகுப்பில் 50 பேரும், ஓ.பி.சி வகுப்பில் 111 பேரும் பணியாற்றுவதாக பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், மத்தியக் கல்வி அமைச்சகத்தில் 326 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்தியக் கல்வி அமைச்சகம் தரப்பில் பதில் அளித்துள்ளனர்.
இது குறித்து ஈஸ்வரன் கூறுகையில், ``புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி, நாட்டில் புதிய கல்விப் புரட்சியை ஏற்படுத்தப்போவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்பதை, `மத்தியக் கல்வி அமைச்சகம்’ என்று பெயர் மாற்றினார்கள். நான், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சில கேள்விகளை எழுப்பினேன்.

`மத்தியக் கல்வி அமைச்சகம்’ என்ற பெயரில்தான் பதில் வந்தது. பெயர்ப் பலகையை மாற்றினால், எல்லாமே மாறிவிடாது. இத்தனை காலி இடங்களை வைத்துககொண்டு, செயல்படாமல் இருக்கும் மத்திய அரசுக்கு உண்மையில் கல்வி மீது அக்கறை இருக்கிறதா?
மத்தியக் கல்வி அமைச்சக அலுவலகத்திலேயே இத்தனை காலி இடங்கள் என்றால், ஐஐடி., ஐஐஎம் போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் எத்தனை காலி இடங்கள் இருக்கும்... கல்விக் கொள்கையை அறிவித்துவிட்டு, வானொலியில் உரையாற்றினால் மட்டும் கல்வி வளர்ந்துவிடாது. அவர்களின் அக்கறையை செயலில் காட்ட வேண்டும். இவ்வளவு காலிப் பணியிடங்களை வைத்துக்கொண்டு, இருக்கும் நிர்வாகத்தையே இவர்களால் கண்காணிக்க முடியாது.

புதிய கல்விக் கொள்கையை நிறைவேற்றுவதை பிறகு பாருங்கள். முதலில் நாடு முழுவதுமுள்ள மத்திய அரசுக் கல்வி நிறுவனங்கலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புங்கள். மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், மத்தியக் கல்வி அமைச்சகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பணியாற்றுவது வியப்பளிக்கிறது” என்றார்.