Published:Updated:

தனியார் பி.எட். கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க குழு!

சென்னை, ஆக.24,2011

தனியார் சுயநிதி பி.எட். கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. ##~~##

இதுதொடர்பாக தமிழக அரசின் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.கண்ணன் வெளியிட்டுள்ள உத்தரவு:

தனியார் சுயநிதி பி.எட்., எம்.எட், பி.பி.எட்., எம்.பி.எட். கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை மாற்றி அமைப்பதை ஆராய்வது தொடர்பாக தனியே ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று தனியார் சுயநிதி தொழிற்கல்வி கல்லூரிகள் கட்டண நிர்ணயக்குழு தலைவர் அரசை கேட்டுக்கொண்டார்.

அவரது வேண்டுகோளை ஏற்று, தனியார் கல்வியியல் மற்றும் உடற்கல்வியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. இதில் உயர் கல்வித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (என்.எஸ்.எஸ்.), ஒரு கணக்கு தணிக்கையாளர், சென்னை பொருளாதார கல்லூரி பேராசிரியர் கே.ஆர்.சண்முகம், தருமபுரி வருவான் வடிவேலன் பி.எட். கல்லூரி தாளாளர் எம்.வடிவேலன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். கல்லூரி கல்வி இயக்குனர் உறுப்பினர்-செயலாளராக செயல்படுவார்.

தனியார் சுயநிதி கல்லூரிகளின் நிர்வாகிகள் தங்கள் கல்வி கட்டண விவரங்களை கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் கட்டணம் ஏற்றுக்கொள்ளக்கூடியது தானா? அல்லது அதிகமா? என்பதை குழு முடிவு செய்யும்.

கட்டணத்தை திருத்தி அமைக்க குழுவுக்கு முழு சுதந்திரம் உள்ளது. குழு நிர்ணயிக்கும் கல்வி கட்டணம் 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். 3 ஆண்டுகள் கழித்து கட்டணத்தை திருத்தி அமைக்க கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம். குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட மாணவர்களிடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு