`50 நாள்களைக் கடந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்! - என்ன சொல்கிறது அரசு?

``அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேட்டால் ஏற்பட்ட நஷ்டங்களைச் சரிசெய்வதற்காக பல்கலைக்கழகத்தின் செலவுகளையும், தேவைக்கு அதிகமாக பணியமர்த்தப்பட்டிருக்கும் ஊழியர்களுக்கான சம்பளத்தையும் எங்களிடம் வசூலிக்கிறார்கள்” -போராட்ட மாணவர்கள்.
`தமிழகத்தின் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே எங்களிடமும் வசூலிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் 50 நாள்களுக்கு மேலாக அறவழிப் போராட்டத்தை நடத்திவருகிறார்கள்.
சுதந்திரத்துக்கு முன்பே `அனைவருக்கும் கல்வி’ என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டு லட்சக்கணக்கான கல்வியாளர்களை உருவாக்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தற்போது பணத்தை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் சிலரால் நிலைகுலைந்து தடுமாறுகிறது என்கிறார்கள்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், மறைந்த ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் 1928-ம் ஆண்டு, ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது அண்ணாமலைப் பல்கலைக்கழகம். உரிய கல்வித் தகுதியின்றியும், தேவைக்கு அதிகமாகவும் பணியமர்த்தப்பட்ட பேராசிரியர்கள், முறையற்ற நிர்வாகம், எண்ணற்ற முறைகேடுகள் உள்ளிட்ட காரணங்களால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை கடந்த 2013-ம் ஆண்டு கையகப்படுத்தியது தமிழக அரசு. ஆனால், கல்விக் கட்டணம் மட்டும் குறைக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்துகிறார்கள் அங்கு படிக்கும் மாணவர்கள்.

`பிற அரசு மருத்துவக் கல்லூரிகளைப்போல எங்களுக்கும் குறைவான கட்டணம் வசூலிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் கடந்த 2020, டிசம்பர் 9-ம் தேதி அங்கு படிக்கும் மருத்துவ மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தொடர் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். 43-வது நாளான 2021, ஜனவரி 21 அன்று, `அசாதாரணச் சூழல் நிலவுவதால் கல்லூரி காலவரையின்றி மூடப்படுகிறது. விடுதிகளிலுள்ள மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும்’ என்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது கல்லூரி நிர்வாகம். அத்துடன் அன்றைய இரவே விடுதிகளில் தண்ணீர், மின்சார இணைப்புகளையும் துண்டித்தது.
மாணவர்களின் புகாரின் அடிப்படையில் மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டால் 24 மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீர், மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டன. போராட்டக் களத்திலிருக்கும் மாணவர்களைச் சந்தித்தோம். ``1928-ம் ஆண்டிலிருந்தே இது அரசு பல்கலைக்கழகம்தான். நிர்வாகம் மட்டுமே நிறுவனர்களிடம் இருந்தது. 2013-ம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தையும் ஏற்ற தமிழக அரசு, அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் 2013-ன்படி பல்கலைக்கழகத்தை நிர்வகித்துவருகிறது. தமிழகத்தின் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான கட்டணம் ரூ.13,600. முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான கட்டணம் ரூ.30,000 மட்டுமே. ஆனால், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்களிடம் ரூ.5.6 லட்சமும், முதுநிலை மருத்துவ மாணவர்களிடம் ரூ.9.6 லட்சமும் கட்டணமாக வசூலிக்கிறார்கள்.
`எங்களிடம் மட்டும் ஏன் 30 மடங்கு கட்டணத்தை வசூலிக்கிறீர்கள்?’ என்று நாங்கள் கேட்டதற்கு, `இது அரசு சுயநிதி மருத்துவக் கல்லூரி’ என்று பதிலளிக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அரசு சுயநிதிக் கல்லூரி என்ற ஒன்று கிடையவே கிடையாது. அதேபோல அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் 2013-லும் `அரசு சுயநிதிக் கல்லூரி’ என்ற வார்த்தை எங்கேயும் கிடையாது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் ராமசுப்பிரமணியன் அளித்த தீர்ப்பில், `இது சுயநிதிக் கல்லூரி அல்ல. அரசு மருத்துவக் கல்லூரி’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய மருத்துவக்கழகம் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய கடிதத்திலும், `மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளைப்போல இதுவும் ஓர் அரசுக் கல்லூரிதான்’ என்றுதான் குறிப்பிடுகிறது.
தமிழக உயர்கல்வித்துறையும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு எழுதும் கடிதத்தில் அரசுக் கல்லூரி என்றுதான் குறிப்பிடுகிறது. இப்படி அனைத்து இடங்களிலும் அரசுக் கல்லூரி என்று கூறிவிட்டு, எங்களிடம் மட்டும் சுயநிதிக் கல்லூரி என்று கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்’’ என்று ஆதங்கத்துடன் சொன்னவர்கள், இன்னும் சில விஷயங்களையும் பட்டியலிட்டனர். ``தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில்கூட மாணவர்களின் கல்விக்கு ஏற்படும் செலவினங்களை மட்டும்தான் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது அரசின் கல்விக் கட்டணக்குழு. ஆனால், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேட்டால் ஏற்பட்ட நஷ்டங்களைச் சரிசெய்வதற்காக, பல்கலைக்கழகத்தின் செலவுகளையும் தேவைக்கு அதிகமாக பணியமர்த்தப்பட்டிருக்கும் ஊழியர்களுக்கான சம்பளத்தையும் எங்களிடம் வசூலிக்கிறார்கள். மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் ஆண்டொன்றுக்கு ரூ.20 கோடி செலவானால், இந்தக் கல்லூரிக்கு மட்டும் ரூ.200 கோடி செலவாகிறது.

தமிழக அரசு 2013-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை இந்தக் கல்லூரிக்கு மட்டும் ரூ.2,075 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. இது, உயர்கல்வித்துறையின் கீழ் இருக்கும் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒதுக்கப்படும் தொகையைவிட இரு மடங்கு அதிகமானது. ஆண்டொன்றுக்கு உயர்கல்வித்துறைக்கு மொத்தமாகவே ரூ.500 கோடிதான் ஒதுக்குவார்கள். அதில் ரூ.250 கோடியை இந்தக் கல்லூரிக்கே கொடுத்துவிடுகிறார்கள். மக்களின் வரிப்பணத்தில்தான் இவ்வளவும் செய்கிறார்கள். ஆனால், அந்த மக்களுக்குக்கூட இலவச மருத்துவம் கொடுப்பதில்லை. 2019-2020-ம் ஆண்டு பட்ஜெட்டில் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ரூ.320 கோடிதான். அதில் ரூ.152 கோடியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு மட்டும் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் இதுதான் நிலை. இந்த நிதியில் ஒரு பகுதியை பல்கலைக்கழகம் மருத்துவக் கல்லூரிக்கு மானியமாக கொடுக்க வேண்டும். ஆனால், அந்தத் தொகையைக் கடனாகக் கொடுத்து, எங்களிடம் கட்டணத்தை வசூலித்து வட்டியுடன் திரும்பப் பெற்றுக்கொள்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். இப்படி எங்கேயாவது நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா?’’ என்றார்கள் வேதனையுடன்.
இது குறித்துப் பேச தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனைத் தொடர்புகொண்டோம். ``தேவைக்கு அதிகமான ஊழியர்கள் நியமனத்தால் நொடிந்துபோன நிலையில்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தை அரசு கையகப்படுத்தியது; காப்பாற்றியது. அப்போதிருந்த கட்டணம்தான் அப்படியே வசூலிக்கப்படுகிறது. உயர் நீதிமன்றத்திலும் அரசுக்கு சார்பாக தீர்ப்பு வந்திருக்கிறது. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இன்னும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ்தான் இருக்கிறது. அதை சுகாதாரத்துறையின்கீழ் கொண்டுவருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் பிறகு பிற அரசு மருத்துவக் கல்லூரிகளைப்போல கட்டணம் வசூலிக்கப்படும்’’ என்றார்.
அமைச்சரிடம் நாம் பேசிய பிறகு, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவருவதற்கான அரசாணையை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. அது குறித்து நம்மிடம் பேசிய மாணவர்கள், ``தேர்தல் நேரத்தில் இதை ஒரு கண்துடைப்பு நாடகமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். அந்த அரசாணையில், மாணவர்களின் கல்விக் கட்டணம் குறைப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. கல்விக் கட்டணம் குறித்து அரசு வாய் திறக்காதவரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்கள்.
மாணவர்களின் கல்வி, சிகிச்சைக்குக் காத்திருக்கும் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு போராட்டத்தை சுமுகமாக முடிக்க அரசு முன்வர வேண்டும். செய்வார்களா ?