Published:Updated:

‘கல்லூரி வரையில் இலவசக் கல்விதான்...!’ - திரிபுரா வெற்றியை சிலாகித்த மாணிக் சர்க்கார்

‘கல்லூரி வரையில் இலவசக் கல்விதான்...!’ - திரிபுரா வெற்றியை சிலாகித்த மாணிக் சர்க்கார்
‘கல்லூரி வரையில் இலவசக் கல்விதான்...!’ - திரிபுரா வெற்றியை சிலாகித்த மாணிக் சர்க்கார்

ரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதேமில்லத் விருதைப் பெற்றிருக்கிறார் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார். ‘தொலைத் தொடர்பு வசதிகள் பெருமளவு வளர்ந்து கொண்டிருந்தாலும், 35 கோடி இந்தியர்கள் கைநாட்டுகளாக உள்ளனர். உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பில் ஐந்து சதவீதம்கூட கல்விக்காக நம்நாட்டில் செலவழிப்பதில்லை’ என விழா மேடையில் ஆதங்கப்பட்டார் மாணிக் சர்க்கார்.

சென்னை, மேடவாக்கத்தில் அமைந்துள்ள காயிதேமில்லத் கல்லூரி சார்பில், அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மையோடும் முன்மாதிரியாகவும் வாழ்பவர்களுக்கு காயிதே மில்லத் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு மணிப்பூரின் இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா, திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் மற்றும் தமிழக முன்னாள் எம்.எல்.ஏ முஹமது இஸ்மாயில் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்டு மனம் திறந்து பேசினார் மாணிக் சர்க்கார். "நாம் ஒரு சிக்கலான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். உலக அளவில் துன்பம் தரும் நிகழ்வுகள் நடக்கின்றன. இந்தியாவிலும் பல பகுதிகளில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்கள் நடக்கின்றன. ஒரு பகுதி மக்கள் நச்சுக் கருத்துகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை ஓர் இந்துமத அடிப்படையிலான நாடாக மாற்றுவதற்குச் சிலர் முயல்கின்றனர். சிறுபான்மை மக்களை அச்சமூட்டும் வகையில் சில நிகழ்வுகள் நடக்கின்றன. பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தின் மக்கள் தொகையைவிட அதிகமான இஸ்லாமிய மக்கள் இந்தியாவில் உள்ளனர். 

இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகமான இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் காலகாலமாக இங்கே வசிக்கின்றனர். அவர்கள் இந்தியாவை நேசிக்கின்றனர். அவர்களைப் பார்த்து, 'நீங்கள் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்... மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லுங்கள்' என்கிறார்கள். கிறிஸ்துவர்கள், சமணர்கள், புத்த மதத்தவர் என்று பலவிதமான சிறுபான்மை இன மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை முப்பது கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. இவ்வளவு பேர் அளவுக்கு மக்கள் தொகை உள்ள நாடுகளே கிடையாது. இவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். இங்கேயே காலகாலமாக வாழ்பவர்கள். அவர்கள் ஏன் வேறு இடங்களுக்கு செல்லவேண்டும்? நாட்டில் எங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. 30- க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் நாட்டின் பொதுத்துறை வங்கிகளை சூறையாடுகின்றன. வாங்கிய கடன்களை அவை கட்டுவதில்லை. ஏறத்தாழ 12 லட்சம் கோடி ரூபாய் வரை நிறுவனங்களிடம் வராக்கடன்கள் என்ற பெயரில் இருக்கின்றன. அவர்களின் நன்மைக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஆனால் விவசாயிகள் வாங்கிய சிறுகடன்களுக்காக அவர்களை வீடு தேடி வந்து மிரட்டுகிறார்கள். ஆனால், பெரிய நிறுவனங்களை யாரும் தட்டிக்கேட்பதில்லை. நாட்டின் மக்கள் தொகையில் 75 சதவீதத்தினர் கிராமங்களில் வாழ்கிறார்கள். 

பெரும்பாலான கிராமங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், மின்சாரம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், மத்திய அரசின் பட்ஜெட்டில், மனித ஆற்றல் மேம்பாட்டுக்கு ஆதாரமான இந்த அடிப்படை வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து வெட்டப்படுகிறது. கல்விக்கும் பொது சுகாதாரத்துக்கும் மொத்த பட்ஜெட்டில் 5 சதவீத நிதிதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் காண்கின்ற மக்கள் தங்களுக்கிடையேயான வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டுப் போராட முன்வருகிறார்கள். அவ்வாறு மக்கள் ஒன்றுபடுவதை ஆபத்தான வளர்ச்சிப்போக்காக மதவெறி சக்திகள் கருதுகின்றன. அவ்வாறு ஒன்றுபடுவதைச் சீர்குலைக்கவே இந்து நாடு என்ற முழக்கத்தை எழுப்புகின்றன. நான் இந்து மதத்துக்கு எதிரி அல்ல. எந்த மதமுமே பிற மத நம்பிக்கை உள்ளவர்களை வெறுப்பதற்குப் போதிக்கவில்லை. அன்பையே போதிக்கின்றன. கடவுள் மீது உண்மையான நம்பிக்கை இருக்குமானால் கோவிலுக்கோ, மசூதிக்கோ, தேவாலயத்திற்கோ போக வேண்டியதில்லை. சக மனிதர்களை நேசித்தால் போதும். புன்னகையோடு பழகினால் போதுமென்றே மத வேதங்கள் சொல்கின்றன.

வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் அதிகரித்துவிட்டது. 25 கோடி இளைஞர்களுக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பயன்படுத்தி நாட்டை வளப்படுத்த முடியும். அத்தகைய அற்புதமான இளைஞர்களின் ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கான முறையான திட்டங்கள் நமது நாட்டில் இல்லை.  இந்திய மக்களில் எழுபது சதவீதம் பேர் வரை கிராமப்புறங்களில்தான் வாழ்கின்றனர். ஒரு பக்கம் தொலைத் தொடர்பு வசதிகள் பெருமளவு வளர்ந்துகிடக்கின்றன. மறுபுறம் 35 கோடி இந்தியர்கள் கைநாட்டுகளாக உள்ளனர். ஆனால், நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பில் ஐந்து சதவீதம் கூட கல்விக்காக நம்நாட்டில் செலவழிப்பதில்லை. மக்களின் பிரச்சினைகளை திசைதிருப்ப திட்டமிட்ட முறையில் அவர்களின் ஒற்றுமையைக் குலைக்கின்றனர். இந்து மதத்தின் போதனை இது அல்ல. எனக்கு மதங்களைப் பற்றிய அறிவு குறைவுதான். ஆனால் நானும் குறிப்பிட்ட அளவு அவற்றைப் பற்றி படித்துள்ளேன். 

என்னைப் பொறுத்தவரை, மதம் மக்களை நேசிக்கவே செய்கிறது. மக்களை நீங்கள் நேசித்தால், அவர்களுக்கு நீங்கள் உதவினால், எந்த வழிபாட்டு தலங்களுக்கும் போகவேண்டியதில்லை என்பது எனது கருத்து. நமது நாட்டுக்கு ஜனநாயகம் ஓர் உயிர் மூச்சு. அதை நாம் பாதுகாக்காவிட்டால் நாடே பாதிக்கப்படும். திரிபுராவில் நூறு சதவீத எழுத்தறிவு பெற்றுவிட்டோம் என்பதை இங்கே பேசிய கல்வியாளர் வசந்திதேவி குறிப்பிட்டார். நாங்கள் கல்லூரி வரையில் இலவசக்கல்வி  அளிக்கிறோம். எங்களது முன்னேற்றத்துக்கு இதுவே காரணம். இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்க வேண்டும். ஒரு பொறியாளர் ஆக வேண்டும், டாக்டர் ஆக வேண்டும் என்று மட்டும் சொல்லி வளர்ப்பது போதாது. 'நல்ல மனிதர்களாக வாழ வேண்டும்' என்று சொல்லி வளர்க்க வேண்டும். தன் குழந்தையைப் பேணி வளர்ப்பதென்பது தாய்க்கே உரிய சிறப்பாக இருக்கிறது, அது போல் இளைய தலைமுறையினரை, மாணவர்களை சமுதாயச் சிந்தனையோடு வளர்க்க வேண்டிய பொறுப்பு பெரியவர்களுக்கு இருக்கிறது” என்றார் உறுதியான குரலில். 

-ஆ.விஜயானந்த் 

அடுத்த கட்டுரைக்கு