Published:Updated:

ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு அவசியமா?

ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு அவசியமா?
ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு அவசியமா?

“நாடு முழுவதும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குத் தேர்வு நடத்துவதற்காகச் சட்டம் இயற்றப்படும்'' என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சமீபத்தில் அறிவித்துள்ளார்.

“மார்ச் மாதத் தேர்வில் தோல்வியடைபவர்களுக்கு, இரண்டு மாதங்களில் மீண்டும் ஒரு வாய்ப்பு (மே மாதம்) வழங்கப்படும். எனினும், மாநிலங்கள் விரும்பாவிட்டால் இது திணிக்கப்பட மாட்டாது. தற்போது வரை 23 மாநிலங்கள் தேர்வை விரும்புகின்றன'' எனக் கூறியுள்ளார். தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளில், பள்ளிக் கல்வியிலிருந்து வெளியேறுவது இரண்டு மடங்கு அதிகம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள அவர், அது பற்றி ஆராய்வதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்பதையும் அறிவித்துள்ளார்.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான தேர்வுமுறையை இப்போதுதான் அவர் ஆரம்பித்திருக்கிறார் என்பது உண்மை அல்ல. ஸ்மிருதி இராணி மனிதவளத் துறை அமைச்சராக இருந்தபோதே இது ஆரம்பமாகிவிட்டது. இதுகுறித்து அனைத்து மாநிலங்களிடமும் கருத்து கேட்டதாகவும், 28 மாநிலங்கள் பதில் அனுப்பியதாகவும், அவற்றில் 23 மாநிலங்கள் `பள்ளிக்கல்வியில் தோல்வி கூடாது என்பதை மாற்ற வேண்டும்' என்று பரிந்துரை செய்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால், அந்த 23 மாநிலங்கள் எவையெவை என்பதைக் குறிப்பிடவில்லை.

தேர்வை ஆதரிப்பவர்கள் சொல்வது, ‘எட்டாம் வகுப்பு வரை தேர்வு இல்லாததால், மாணவர்கள் கல்வியைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை’, ‘ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைகிறது’, ‘மாணவர்களின் தரம் குறைகிறது’, ‘மறு வாய்ப்பு அளிக்கப்படும்’ போன்ற காரணங்கள். ஆனால், நடைமுறையில் இவை அனைத்துக்குமே வேறு காரணங்கள் இருக்கின்றன. கிராமப்புறங்களில்  பல பள்ளிகள், ஓர் ஆசிரியர் பள்ளிகளாகவே இயங்குகின்றன. பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லாத நிலை, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வெவ்வேறு நிர்வாகப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவது, கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைப்பது போன்ற பல்வேறு காரணிகள் இருக்கின்றன.

இதை மறைப்பதற்காகத்தான் பிரகாஷ் ஜவடேகர் ‘அரசுப் பள்ளிகளில் குறிப்பாக பள்ளிக் கல்வியிலிருந்து மாணவர்கள் வெளியேறுவது தனியார் பள்ளிகளைவிட இரண்டு மடங்கு அதிகம்' என்பதை ஒப்புக்கொண்டு, `இது குறித்த காரணங்களை ஆராய்வதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது' என்றும் அறிவித்துள்ளார். மொத்தத்தில் தேர்வுவைத்து மோசமான தேர்ச்சி விகிதங்களைக் காரணம் காட்டி அரசுப் பள்ளிகளை அரசு-தனியார் கூட்டுத் திட்டத்தின் கீழ் தனியாருக்குத் தாரைவார்ப்பதுதான் உண்மையான நோக்கமாக இருக்குமோ எனச் சந்தேகப்படவைக்கிறது. 

கல்வித்தரம், மாணவர்களின் எதிர்காலம் குறித்து உண்மையிலேயே அக்கறைகொண்டவர்கள், பின்லாந்து முறையைத்தான் பின்பற்ற வேண்டும். உலகிலேயே சிறந்த கல்வி முறையாகச் சொல்லப்படும் பின்லாந்து கல்விமுறையைத்தான். அங்கு உள்ள மாணவர்கள், சர்வதேசப் போட்டிகளில் முன்னிலை வகிக்கிறார்கள். அங்கு பள்ளிக்கல்வியின் இறுதியில் ஒரே ஒரு தேர்வுதான் நடத்தப்படுகிறது. பின்லாந்தில் அரசுதான் அனைவருக்கும் கல்வி அளிக்கிறது. தனியார் பள்ளிகளே கிடையாது என்பதுடன், ஏழை - பணக்காரர் அனைவருக்கும் ஒரே வகையான கல்விமுறையைத்தான் பின்பற்றப்படுகிறது. கல்லூரிக் கட்டணமும் கிடையாது என்பதால், மாணவர்களிடம் கல்விக் கடன் குறித்த எந்த அழுத்தமும் இல்லை. 

தமிழக அரசு ஒன்றும் நியாயவான்களாக இல்லாவிட்டாலும் மாநிலமெங்கும் இருக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகள்தான் இன்றும் ஒரே வாய்ப்பாக இருக்கின்றன. தமிழகமும் கல்வியில் தனியாரைத் தொடர்ந்து ஊக்குவித்தாலும் ஓட்டு அரசியலுக்காகவாவது பள்ளிக்கல்வித் துறை ஏழை எளிய மாணவர்கள் பள்ளிக்கல்வியிலிருந்து வெளியேறாமல் தடுப்பதற்குப் பல்வேறு வகைகளில் மானியங்கள், சிறப்புத் திட்டங்கள் மூலமாக ஊக்குவித்துவருகிறது. சத்துணவு, இலவச பஸ் பாஸ், சீருடை, புத்தகப் பை, மிதிவண்டி, லேப் டாப் எனப் பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக அமல்படுத்தி நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது. ஒருவகையில் சில பிரிவினருக்கு  மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கே இதுபோன்ற சலுகைகள்தான் பெரும் ஊக்குவிப்பாக அமைகின்றன.   

மற்ற மாநிலங்கள், சமூக நீதி, ஏழை எளிய மக்கள் குறித்து கவலைப்படாமல் இருந்தாலும், சமூக நீதியில் முன்னோடி மாநிலமாக தமிழகம் இருப்பதால், கட்டாயம் இந்தத் திட்டத்தை எதிர்க்க வேண்டும். மாநிலங்கள் விரும்பாவிட்டால் தேர்வு கட்டாயம் இல்லை என தற்போது அறிவிக்கப்பட்டிருந்தாலும், கல்விப் பொதுப்பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு இயற்றும் சட்டம் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. நாளையே ஏதாவது ஒரு என்.ஜி.ஓ அமைப்பு, ‘பள்ளிக் கல்வியிலும் தரம் வேண்டும் என்ற அடிப்படையில், நாடு முழுவதும் தேர்வுகளை நடத்த வேண்டும்' என வழக்கு போட்டால், அதையும் தகுதி, தரம் என ஆதரிக்க நமது நீதிமன்றங்கள் தயாராகத்தான் இருக்கும். எனவே, தமிழ்நாடு அரசு விழிப்பாக இருப்பது அவசியம்.