Election bannerElection banner
Published:Updated:

``அரசுப் பள்ளிகளில் இனி தாய்மொழிக் கல்விக்கு தடா!" - ஜெகன்மோகன் முடிவு சரியா?

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

தாய்மொழியைக் காவுகொடுத்துதான் அப்படியான களத்தை உருவாக்க வேண்டுமா, இதற்கு வேறு எதுவும் தீர்வு கிடையாதா?

ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரையிலான ஆந்திர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த கல்வியாண்டு தொடங்கி தாய்மொழி வழிக் கல்வியைப் புறந்தள்ளிவிட்டு, ஆங்கில வழிக்கல்வி அளிக்கப்படும் என அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தாய்மொழிக் கல்வியை முற்றிலுமாக ஒதுக்குவது, கல்வியைச் சிதைத்துவிடும் என்பது உலக அளவில் நிரூபிக்கப்பட்ட நிதர்சனம். இந்த நிலையில், ஜெகன்மோகன் துணிந்து இந்த முடிவை எடுத்திருப்பதை அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் மிகக்கடுமையாக விமர்சித்து வருகிறது.

அரசுப்பள்ளி
அரசுப்பள்ளி
தே.தீட்சித்

``தெலுங்கு மொழியின்மீது அத்தனை ஆர்வமிருப்பவர்கள், தங்களது பிள்ளைகளை முதலில் தாய்மொழி வழிப்பள்ளியில் படிக்க அனுப்ப வேண்டியதுதானே. அவர்கள்தான் முதலில் ஆங்கிலவழிப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்" என்று வழக்கமான பதில்களை ஆளுங்கட்சித் தரப்பினர், எதிர்த்தரப்பினருக்கு பதிலாக அளித்து வந்தாலும் இந்தப் பிரச்னையில் சில இயல்பாக அணுகவேண்டிய கேள்விகள் எழுகின்றன.

ஒன்று, அரசுப் பள்ளிகளால் ஆங்கிலவழிக் கல்வி என்பதை எந்த அளவுக்கு வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பது. மற்றொன்று, `ஆங்கிலவழிக் கல்வி பெறுவதால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு மொழி ஒரு தடையாக இருக்காது' என்று முதலமைச்சர் அறிவித்திருந்தபோதும், தாய்மொழியைக் காவுகொடுத்துதான் அப்படியான களத்தை உருவாக்க வேண்டுமா... இதற்கு வேறு எதுவும் தீர்வு கிடையாதா என்பது.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி
download

சமீபத்தில் வெளியான வருடாந்திர கல்வித்தர அறிக்கை 2018 (ASER Report 2018) இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. மாநிலவாரியாகக் கல்விநிலை பற்றிப்பேசும் இந்த அறிக்கையில், கடந்த ஆண்டில் மட்டும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் சதவிகிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 7 முதல் 10 வயது வரையிலான மாணவர்களில் 56.5 சதவிகிதம் பேர் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர் என்றும் தனியார் பள்ளிகளில் 42.8 சதவிகிதம் பேர் படிக்கின்றனர் என்றும் அந்தத் தரவுகள் குறிப்பிடுகின்றன. இவர்களில் பெண்கள், அரசுப்பள்ளிகளில் 63.1 சதவிகிதமும் தனியார் பள்ளிகளில் 36.3 சதவிகிதமும் என்பதாக இருக்கிறது. ஒருவேளை ஆங்கில வழிக் கல்வி நடைமுறைக்கு வந்தால் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் இந்த எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

`இது வேலையல்ல; சேவை!' - ஒரேநாளில் 1.26 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய ஜெகன்மோகன் #Andhra

ஏனென்றால், அந்த கருத்துக்கணிப்புக்காக ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் இரண்டாம் வகுப்பு பாடத்தைப் படித்துக்காட்டச் சொன்னதில், வெறும் 39 சதவிகித மாணவர்கள் மட்டுமே அதைச் சரிவர படிக்கமுடிந்ததாக, கருத்துக்கணிப்பு நடத்தியவர்கள் குறிப்பிடுகின்றனர். ஒருவார்த்தைகூட படிக்கத் தெரியாதவர்கள் 1.4 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். ஒன்றாம் வகுப்பில் இந்த எண்ணிக்கை சிறிய அளவிலேயே இருந்தாலும், வகுப்புகள் செல்லச்செல்ல இந்த எண்ணிக்கை அபாயகரமானதாக இருக்கிறது. 40 சதவிகித மாணவர்களுக்கு அடிப்படை கணக்குப் பாடப் புரிதல் இல்லை என்று அந்தக் கருத்துக்கணிப்பு அடுக்குகிறது. இத்தனை சிக்கல்கள் இருந்தும், ஜெகன்மோகன் ஆங்கில வழிக் கல்வி கொண்டுவருவதற்கு முன் அரசுப் பள்ளிகளின் நிலைகுறித்த ஆய்வுகள் எதுவும் நடத்தியதாகத் தெரியவில்லை. எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன என்பதைக் கடந்து ஜெகன்மோகனின் இந்தத் திட்டத்தை இதுபோன்ற லாஜிக்குகளின் அடிப்படையில் புறக்கணிக்கவேண்டியதாக இருக்கிறது.

அரசியலமைப்பின் எட்டாவது பட்டியல், தேசத்தின் 22 மண்டலவாரி மொழிகளை, பட்டியல் மொழியாக அங்கீகரித்துள்ளது. அதில் தென்மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்டவையும் அடக்கம். இந்தி மொழியை எல்லோரும் கற்கவேண்டும் என உள்துறை அமைச்சர் வரை மக்களுக்கு நெருக்கடிகொடுத்துவரும் நிலையில், தாய்மொழி வழிக் கல்வியை மாநில அரசே தவிர்ப்பது அடிப்படைக்கல்வி தொடங்கி மாநில உரிமைவரை அனைத்தையும் பாதிக்கும் என்கிற குரலும் எழுந்துவருகிறது.

ஆனால், இந்தப் பிரச்னை தொடர்பாக முற்றிலும் வேறொரு கோணத்திலான காரணத்தை முன்வைக்கிறார், சமூக செயற்பாட்டாளரும் பேராசிரியருமான சுஜாதா சூரபள்ளி. ``ஆந்திராவில் 70 சதவிகிதத்துக்கும் மேல் தனியார் பள்ளிகளே ஆக்கிரமித்துள்ளன. அவர்கள் அங்கே போனதுக்கான காரணமாக அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் இல்லை எனச் சொன்னார்கள். அதனால் தனியார் பள்ளிகள், உயர் சாதி மற்றும் உயர் வர்க்கத்துக்கு என்றும் அரசுப் பள்ளி ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு என்றும் இயல்பாகவே பிரிந்துவிட்டது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் பிள்ளைகளுக்கும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கும் வேலைவாய்ப்பு என்று வரும்போது எழும் போட்டியே, இந்த மொழிப்பிரச்னையால்தான் ஏற்படுகிறது. தனிப்பட்ட முறையில் நான் படித்தது தெலுங்கு வழிப்பள்ளியில்தான். அதன்பிறகு, பல்கலைக்கழகத்தில் நான் படிக்கத் தொடங்கியபோது, ஆங்கிலம் தெரியாதது எனக்குப் பிரச்னையாக இருந்தது.

சுஜாதா சூரபள்ளி
சுஜாதா சூரபள்ளி
Vikatan

என்.டி.ஆர் முதல்வராக இருந்தபோது, அனைத்தும் ஆங்கிலம் அல்லாது தூய தெலுங்கு மொழியிலேயே இடம்பெறவேண்டும் என்கிற சட்டம் கொண்டுவந்தார். அதில் உள்ள தெலுங்கு, எங்கள் யாருக்கும் இன்றுவரை புரிந்ததில்லை. தனியார் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி இருக்க வேண்டும் என்று மற்ற கட்சிகள் ஏன் குரல்கொடுப்பதில்லை. தாய்மொழியை அரசுப் பள்ளிகள் மட்டுமே காக்க வேண்டும் என்றால் தாய்மொழியைக் காப்பதற்குத் தனியார் பள்ளிகள் என்ன செய்கின்றன? நான் தெலுங்கு வழிக் கல்வியை ஆதரிப்பவள்தான். ஆனால் அரசுப்பள்ளிகளில் படிப்பவர்களுக்கும் தனியார் பள்ளியில் படிப்பவர்கள் அளவுக்கான உரிமையும் வாய்ப்பும் கிடைக்கப்பெற வேண்டும் என்றால் ஜெகன்மோகன் அரசின் இந்த நடவடிக்கையை ஆதரித்துதான் ஆகவேண்டும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு