Published:Updated:

``எங்க பிள்ளைகளை என்னதான் செய்யப்போறீங்க?'' - 5 & 8 பப்ளிக் எக்ஸாம் பற்றி ஓர் அப்பாவின் கடிதம்!

கடிதம்
கடிதம் ( pixabay )

``உன் பசங்க அஞ்சாவதும் எட்டாவதும்தானே? அவங்களுக்கும் இந்த வருஷத்துல இருந்து பப்ளிக் எக்ஸாம் இருக்குப்பா. ஒழுங்கா படிக்கச் சொல்லு. இல்லேன்னா ஃபெயில்தான்''

மதிப்புக்குரிய ............... அவர்களுக்கு,

வணக்கம்.

இந்தக் கடிதத்தை யாருக்கு எழுதறதுன்னே தெரியலைங்க. முதலமைச்சருக்கா... கல்வி அமைச்சருக்கா... கல்வித்துறை அதிகாரிகளுக்கா? யாருக்கு அனுப்பறதுன்னே தெரியலைங்க. அதுதான் மேலே இடம் விட்டுட்டேன்.

இந்தக் குழப்பத்துக்கு ரெண்டு காரணம் இருக்குங்க. அதுல ஒண்ணு, நான். இன்னொரு காரணம் நீங்க. ரெண்டாவது காரணத்துக்கு அப்புறம் வர்றேன். முதல் காரணமான என் விஷயத்தைக் கேளுங்க.

எனக்கு, சரியா எழுதப் படிக்கத் தெரியாது. எழுத்துக் கூட்டித்தான் படிப்பேன். இந்தக் கடிதத்தையும் என் பொண்ணுகிட்ட சொல்லித்தான் எழுதிட்டிருக்கேன். நான், அஞ்சாம் வகுப்பு வரைக்கும்தான் படிச்சேன். அதுல ஃபெயிலாகிட்டதால, ஒரு மளிகைக் கடையில பொட்டலம் மடிக்கப் போய்ட்டேன். அப்புறம், டெய்லர் கடையில கொஞ்ச நாள் காஜா எடுத்தேன். சைக்கிள் கடையில பஞ்சர் போட்டேன். எந்த வேலையிலும் ஒரு வருஷத்துக்கு மேலே இருந்ததில்லே.

கடிதம்
கடிதம்
pixabay

அதுக்குக் காரணம், அந்த விளையாட்டு வயசும் அந்தக் கடை முதலாளிகளின் திட்டும் அடியும்தான். ஒருமுறை சர்க்கரையைப் பொட்டலம் மடிக்கும்போது, பேப்பர் கிழிஞ்சு மொத்தமும் கீழே கொட்டிடுச்சு. அந்த முதலாளி, சட்டுனு தராசுத் தட்டைத் தூக்கி, அதோட அடிப்பகுதியால என் மண்டையில அடிச்சாரு. காஜா கோணலா இருக்குன்னு, என் அம்மாவை அசிங்கமா திட்டினாரு ஒருத்தர். அட... அழுக்குத் தண்ணியைக் கீழே ஊத்திட்டதுக்காக, பளார்னு அறைஞ்சுட்டாரு சைக்கிள் கடை முதலாளி.

இதெல்லாம் வீட்டுல சொன்னா, `வேலை கொடுக்கிற முதலாளி நாலு வார்த்தை பேசுவான், ரெண்டு அடி அடிக்கத்தான் செய்வான். இந்த ஒழுங்குக்கு நீ சரியா படிச்சிருக்கணும்'னு என் அப்பாவும் திட்டுவார். அவரே படிக்காதவரு. ஒரு குடிகாரரு. என் அம்மாவும் படிக்காதவங்க.

வீட்டுலேயும் பேச்சு வாங்கிட்டு, வேலை செய்ற இடத்துலேயும் திட்டு வாங்கிட்டு, என்னென்ன வேலைகளையோ செஞ்சேன். கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்புறம், அப்பாவுக்கு பயப்படறதையும், அவர் கூட்டிட்டுப்போய் விடற வேலையைச் செய்றதையும் விட்டுட்டேன். நானா வேற வேலைகளுக்குப் போவேன். சுண்ணாம்பு அடிச்சிருக்கேன், கார்பென்டர் வேலை, எலெக்ட்ரீஷியன் வேலை... என் இஷ்டத்துக்கு திரிஞ்சதால. அப்பவும் ஒரு வேலையில உருப்படியா இருக்கலை.

school
school
pixabay

பொண்டாட்டி, ரெண்டு குழந்தைகள்னு வந்ததுக்கு அப்புறம்தான் கொஞ்சம் பயம் வந்துச்சு. இப்போ, ஒரு எட்டு வருஷமா ஒரு சூப்பர் மார்க்கெட்ல இருக்கேன். காலையில 9 மணிக்கு போனாக்கா ராத்திரி 11 மணி வரைக்கும் செய்வேன். எக்ஸ்ட்ரா நேரம், லீவு எடுக்காம போறது. இதனால, சம்பளத்தோடு கொஞ்சம் கூடுதலா பணம் கிடைக்கும். என் பொண்டாட்டியும் வீட்டு வேலைக்குப் போறா. இல்லேன்னா இந்தக் காலத்துல நோயாளி அம்மா, ரெண்டு பசங்க, பொண்டாட்டியோடு வாழமுடியுமா?

எனக்கு ரெண்டு பசங்கன்னு சொன்னேனில்லியா... பொண்ணு எட்டாங் கிளாஸ் படிக்கிறா. பையன் அஞ்சாங் கிளாஸ். ஒரு நாலஞ்சு வருஷமாத்தான், நாம சரியா படிக்காமப் போய்ட்டோமேன்னு நினைச்சு நினைச்சு வருத்தப்படறேன். நம்மளை மாதிரி நிலைமை நம்ம பிள்ளைங்களுக்கு வந்துடக் கூடாதுனு, நானும் பொண்டாட்டியும் உறுதியா இருக்கோம். ரெண்டு பசங்களுமே கவர்மென்ட் ஸ்கூல்லதான் படிக்கிறாங்க. எங்க காலம் மாதிரி இல்லாம, புஸ்தகத்துல ஆரம்பிச்சு சைக்கிள், லேப்டாப் வரைக்கும் கொடுக்கிறதால சந்தோஷமா இருக்கு. ஆனா, காலேஜுக்கு செலவாகுமில்லே. அதுக்காக, இப்போ இருந்தே குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துட்டிருக்கோம்.

என் பிள்ளைங்க ரொம்பப் பிரமாதமா படிக்கிறாங்கன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். பையனைவிட பொண்ணு இன்னும் நல்லா, பொறுப்பா படிக்குதுன்னு மட்டும் புரியுது. அவங்களுக்கும் விளையாட்டு வயசுதானே. நாம என்னதான் நம்ம கஷ்டத்தைச் சொல்லி, என்னையே உதாரணமா காட்டி அறிவுரை சொன்னாலும், அவங்களுக்கு சரியா புரியாதே. ப்ளஸ் டூ வரைக்கும் எப்படியோ வந்துட்டா போதும். புரிஞ்சுக்க ஆரம்பிச்சுடுவாங்கன்னு நினைச்சுட்டு இருந்த நேரத்துலதான் உங்க கூத்து ஆரம்பிச்சிருக்கு.

toy
toy
pixabay

குழப்பத்துக்கு ரெண்டாவது காரணம் நீங்கன்னு சொன்னேனில்லியா, அது இங்கேதான் ஆரம்பிக்குது. ``மணி, உன் பசங்க அஞ்சாவதும் எட்டாவதும்தானே? அவங்களுக்கும் இந்த வருஷத்துல இருந்து பப்ளிக் எக்ஸாம் இருக்குப்பா. ஒழுங்கா படிக்கச் சொல்லு. இல்லேன்னா ஃபெயில்தான்'' - இப்படித்தான் கடையில ஒருத்தர் சொல்லி ஆரம்பிச்சது.

அப்புறமா, ``ஃபெயில் ஆக்க மாட்டாங்களாம், அமைச்சர் சொல்லிட்டாரு. மூணு வருஷம் கழிச்சுதானாம்''னு ஒரு பேச்சு. ``இல்லேப்பா இந்த வருஷமே நடக்குதாம். ஸ்கூலுக்கு எல்லாம் சொல்லிட்டாங்களாமே''னு ஒரு பகீர். ஸ்கூல்ல போய் கேட்டாலும் சரியான பதில் இல்லை. நான் தயங்கித் தயங்கி கேட்ட தோரணையில எரிஞ்சுவிழுந்தாங்க ஒரு டீச்சரு.

திடீர்னு ஒருநாள் என் பொண்ணு, ``அப்பா, நாங்க எல்லாம் வேற ஸ்கூலுல போய் பரீட்சை எழுதணுமாம். நீ கூட்டிட்டுப் போய் விடறியா?''னு கேட்டுச்சு.

என் பொண்டாட்டி, காலையில ஏழு மணிக்கே வீட்டு வேலைக்குப் போய்டும். நானும் பல நேரம் எட்டு மணிக்கே கிளம்பிடுவேன். என்னிக்கோ ஒரு சில நாள்தான் அவங்களை நான் கூட்டிட்டுப்போய் விடுவேன். பல நாள்களில் என் பொண்ணேதான் அவன் தம்பியையும் பொறுப்பா கூப்பிட்டுக்கிட்டு ஸ்கூலுக்குப் போகும்.

இப்படி வேற ஸ்கூலுக்குப் போகணும்னு சொன்னதும் குழப்பமாயிடுச்சு. வேற ஸ்கூல்னா தம்பி வேற ஸ்கூல், நீ வேற ஸ்கூலான்னு கேட்டேன். பதில் தெரியலை. இப்போ வரைக்கும் அதே ஸ்கூலா வேற ஸ்கூலான்னு குழப்பமாவே இருக்கு. கடையில வேலை செய்றவங்க, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க. விவரமா பேசற மேனஜரே, ``ஒண்ணும் புரியலை போப்பா''னு சொல்றார்.

toy
toy
pixabay

அவருக்கு என்ன... நல்லா படிச்சிருக்கார். அவர் பொண்டாட்டியும் நல்லா படிச்சிருக்காங்க. அவங்க பிள்ளைகளைத் தனியார் ஸ்கூல்ல படிக்க வைக்கிறாங்க. வீட்டுலயும் சொல்லித் தர்றாங்க. அந்தப் பிள்ளைகள் சில சமயம் கடைக்கு வருவாங்க. அப்போ, அவங்ககிட்ட பேச்சுக் கொடுப்பேன். அவங்க பேசறதுலேயே அவங்க அறிவும் தெளிவும் தெரியும். நம்ம பிள்ளைகளும் இப்படி இருந்தா எப்படி இருக்கும்னு மனசுக்குள்ளே ஆசை எட்டிப் பார்க்கும்.

நான் படிக்காதவன்தான். நீங்க எதுக்காக இதையெல்லாம் செய்றீங்கன்னு தெரியாதுதான். ஆனாலும் எனக்கு ஒண்ணு புரியலைங்க. சில கேள்விகள் தோணுது. அதுக்குப் பதில் கேட்டுத்தான் இந்தக் கடிதம்.

என் மேனஜர் பசங்களுக்கு அவர் கொடுக்கிறதை எல்லாம் என்னால கொடுக்க முடியாது. அப்படி இருக்கிறப்போ, அந்தப் பசங்களுக்கும் என் பசங்களுக்கும் ஒரே மாதிரி பரீட்சை வைக்கப் போறீங்களே, இது எப்படிங்க திறமையைக் கண்டுபிடிக்கிறதா ஆகும்?

என் கடையில இருக்கிற கேஷியர், ``அடுத்த வருஷம் என் பையனை சிபிஎஸ்ஸில சேர்த்துடப்போறேன். இவங்க தொல்லையே வேணாம். செலவு இன்னும் அதிகமாகும். என்ன பண்றது? சமாளிச்சுதான் ஆகணும்'னு சொல்றார். அது என்ன படிப்புனு சரியா புரியலை. புரிஞ்சாலும் என்னால அவரை மாதிரி சேர்க்க முடியாது. அப்போ, நான் என் பிள்ளைகளை என்னதாங்க பண்றது? பயமா இருக்குங்க.

school
school
pixabay

பிழைப்பைப் பார்க்கவே நேரமில்லாம ஓடிட்டு இருக்கும்போது, எங்களால போராட வரமுடியுமான்னு தெரியலீங்க. அப்படியே வந்தாலும் என்னத்த சொல்லிப் போராடணும்னு தெரியலீங்க. எப்படிப் பேசணும்னு தெரியலீங்க. இதுபற்றி சொல்லி புரியவைக்கவேண்டிய ஆசிரியர்கள், முக்கால்வாசி பேர் எதுவும் சொன்ன மாதிரி தெரியலை.

இந்த லட்சணத்துல நீங்களே தினம் ஒண்ணு சொல்றீங்க. `அப்படிக் கிடையாது', `இப்படிக் கிடையாது', `தப்பா உத்தரவு போயிருக்கு'னு படிச்ச நீங்களே இவ்வளவு குழப்பமா சொல்லிட்டிருக்கீங்க.

நானாவது பரவாயில்லைங்க. கூட இருக்கிற ஒண்ணு ரெண்டு பேர் சொல்றதைக் கேட்டு ஓரளவுக்குத் தெரியுது. முன்னாடி செஞ்ச தப்பை எல்லாம் நினைச்சுப்பார்த்து ஒழுங்கா இருக்கேன். பாக்குப் போடறதைக்கூட விட்டுட்டேன். ஆனா, என் அக்கம்பக்கத்துல பல அப்பாக்கள் 30 வருஷம் முன்னாடி இருந்த என் அப்பா மாதிரிதான் குடியும் கூத்துமா இருக்காங்க. அவங்களுக்கு, நாளெல்லாம் உட்காரவெச்சு சொன்னாலும், ஆறு மணியானதும் கடைக்குப் போய் பேசுவோமான்னு கேட்கறவங்க. அவங்க பிள்ளைங்க என்னங்க ஆகும்? என்னை மாதிரி மளிகைக் கடையில பிளாஸ்டிக் கவர்ல சர்க்கரையைப் போட ஆரம்பிச்சுடுவாங்களோ?

தயவுசெஞ்சு அப்படிப் பண்ணிடாதீங்க சாமிகளா... என் பசங்க கலெக்டர், டாக்டர் ஆகணும்னுகூட ஆசையில்ல எனக்கு. இதோ, என் கடையில வேலை செய்ற கேஷியர், மேனேஜர் அளவுக்கு வந்தா போதும். `நான் ஆபீஸுக்குப் போய்ட்டு வர்றேன்'னு சொல்லிட்டு போற மாதிரி வந்துட்டா போதும். ஆனா, அதுவே நடக்குமான்னு தெரியலை.

சொல்லுங்கய்யா, எங்க பிள்ளைகளை என்னதான் செய்யப் போறீங்க?

இப்படிக்கு,

ஒரு அப்பாவி அப்பா.

பின் செல்ல