கணவனால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளியின் மகள் பரமேஸ்வரி. இவர் 12-ம் வகுப்புத் தேர்வில் நாகை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும் இவரின் கனவு நனவாகுமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேலசேத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலா. இவர் வலது கை ஊனமான மாற்றுத்திறனாளி. இவருக்கும் திருவாரூர் மாவட்டம் தென்பாதியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் திருமணமானது. 15 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து 2 வயது பெண் குழந்தை பரமேஸ்வரியுடன் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.
தந்தையும் தாயும் அடுத்தடுத்து இறந்துவிட மனம் தளராத மாலா மகளை நன்றாகப் படிக்க வைக்க வைராக்கியம் கொண்டார். ஒரு கையைக் கொண்டு 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் பூப்பறிக்கும் வேலை செய்து பரமேஸ்வரியைப் படிக்க வைத்தார். தாயின் நிலை உணர்ந்த பரமேஸ்வரியும் எல்லா வகுப்பிலும் முதல் மாணவியாகத் திகழ்ந்தார். தற்போது 12-ம் வகுப்புத் தேர்வில் நாகை மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதுபற்றி பரமேஸ்வரியிடம் பேசினோம். ``5-ம் வகுப்பு வரை இங்குள்ள அரசுப் பள்ளியில் படித்தேன். மேற்கொண்டு படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. நான் நன்றாகப் படிப்பதைக் கண்ட மருதூர் பள்ளி தலைமையாசிரியர் ராமலிங்கம் சாரும், அவுங்க மனைவி அன்புசித்ரா டீச்சரும் என்னை விக்டரி மேனிலைப்பள்ளியில் சேர்த்து, பள்ளிக்கட்டணம், நோட், புக், டிரஸ் என எல்லா செலவுகளையும் ஏத்துக்கிட்டாங்க. சொந்த பொண்ணு மாதிரி வளர்த்தாங்க. அதனாலதான் நான் படிக்க முடிஞ்சுது.

தமிழில் 97, ஆங்கிலத்தில் 94, இயற்பியல் 91, வேதியியல் 95, கணிதம் 95 என 569 மார்க் எடுத்திருக்கேன். கலாம் ஐயா சொன்னமாதிரி எனக்கு எப்போதும் ஐ.ஏ.எஸ்.கனவுதான். கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்யணும்னு ஆசை. அதற்கு ஒரு டிகிரி படிக்கணும். இவ்வளவு நாள் உதவி செஞ்சவங்கள மேலும் சிரமப்படுத்தவும் மனசு கஷ்டமா இருக்கு. என் கல்லூரி படிப்புக்கு யாராவது உதவி செய்வாங்களா?" என்று பரமேஸ்வரி பரிதாபமாய் கேட்டபோது இதயம் கனத்தது.