Published:Updated:

`ஒரே ஒரு மாணவிக்கு இரண்டு ஆசிரியர்கள்!' - ஆச்சர்ய `மன்சபிகா அரசுப் பள்ளி'

மன்சபிகா அரசுப்பள்ளி
News
மன்சபிகா அரசுப்பள்ளி ( HT )

மன்சபிகா பள்ளிக்கென அம்மாநில அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் சுமார் 60,000 ரூபாய் செலவழிக்கிறது. இரண்டு ஆசிரியர்களுக்கும் சேர்த்து 58,000 ரூபாயும் சமையலாளருக்கு 1,500 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் இதற்காகக் குரல் கொடுத்து வருகின்றனர். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஒரு மாணவிக்காக இரண்டு ஆசிரியர்களும் சமையலுக்காக ஒருவரும் பணியாற்றி வரும் செய்தி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், கயா மாவட்டத்திலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மன்சபிகா என்னும் கிராமம். நான்கு வகுப்பறைகளும் ஒரு சமையலறையும் உள்ள ஒருமாடி கட்டடத்துடன் இந்தக் கிராமத்தில் மன்சபிகா அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. ஆனால், ஒரே ஒரு மாணவிதான் இந்தப் பள்ளியில் படித்து வருகிறார்.

கயா மாவட்டம்
கயா மாவட்டம்

மன்சபிகா கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களில் 10 முதல் 12 குடும்பங்கள் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள். 30 முதல் 35 குடும்பங்கள் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மன்சபிகா பள்ளியின் ஒரே மாணவியான ஜான்வி குமாரி, பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இரு ஆசிரியர்களின் சிறப்பு கவனத்தைப் பெற்று படிக்கும் ஜான்வி அந்தக் கிராமத்தில் `விலைமதிப்பற்ற மாணவியாக’ப் பார்க்கப்படுகிறார்.

மன்சபிகா பள்ளிக்கென அம்மாநில அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் சுமார் 60,000 ரூபாய் செலவழிக்கிறது. இரண்டு ஆசிரியர்களுக்கும் சேர்த்து 58,000 ரூபாயும் சமையலாளருக்கு 1,500 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரண்டு ஆசிரியர்களில் ஒருவரான பிரியங்கா குமாரி பேசுகையில், ``ஒன்பது மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பித்தனர். ஆனால், ஒரு மாணவர்தான் தினமும் வருகிறார். எங்களால் முடிந்தவரை அவளுக்கு சிறப்பாகக் கற்றுத் தருகிறோம். பள்ளியில் சில மணி நேரங்கள் வந்து படித்துவிட்டு அவளும் சென்றுவிடுவாள். சில நாள்களில் மதிய உணவை அருகிலுள்ள ஹோட்டலிலிருந்து வாங்கி அவளுக்குத் தருவோம். ஏனெனில், ஒரு மாணவரை உருவாக்குவது மிகவும் கடினமான செயல்களில் ஒன்று” என்றார். எனவேதான், கியாந்தி தேவி என்பவரை சமையல் செய்யவும் நியமித்துள்ளனர்.

representational image
representational image

பள்ளியைப் பற்றி மாவட்ட கல்வி அதிகாரி முஸ்தஃபா ஹூசைன் மன்சூரி பேசும்போது,``கிராமத்திலுள்ள மக்கள் தொகையை ஒப்பிட்டு பார்க்கும்போது பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அருகிலுள்ள வேறு பள்ளிகளை அவர்கள் விரும்புகிறார்கள். குளிர்காலம் என்பதும் மாணவர்கள் வராததற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அப்பகுதியிலுள்ள பெற்றோர்களிடம் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திப் பேச உள்ளோம். பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை இதன் மூலமாக அதிகரிக்கும் என நம்புகிறோம்” என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மன்சபிகா கிராமம் அமைந்துள்ள சிரைலி பஞ்சாயத்தின் தலைவர் தர்மராஜ், ``மன்சபிகா அரசுப் பள்ளி மிகவும் பமைமையானது. இந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் தனியார் பள்ளிகளில்தான் தரமான கல்வி கிடைக்கும் என்ற எண்ணத்துடன் பிள்ளைகளை அங்கு சேர்க்கின்றனர். பள்ளியைச் சுற்றிய பகுதியை சந்தைப் பகுதியாக மாற்றிவிட்டனர். இதனால், மன்சபிகா பள்ளியில் படிப்பதை கௌரவக் குறைச்சலாகக் கருதுகின்றனர். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சரியாகப் பாடங்களைக் கற்றுத் தருவதில்லை என்ற எண்ணமும் பெற்றோர்களை, தனியார் பள்ளியை நோக்கி நகர வைக்கிறது” என்று பள்ளி குறித்துப் பேசினார்.

பள்ளியின் தலைமையாசிரியராக இருக்கும் சத்யேந்திர பிரசாத்திடம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பேச முயற்சி செய்துள்ளது. ஆனால், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் போலியான கல்வித் தகுதி சான்றிதழ்களை அரசிடம் சமர்பித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால் பள்ளிக்கு வருவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

representational image
representational image

மன்சபிகா அரசுப் பள்ளி குறித்த செய்தியை அறிந்த அப்பகுதியின் தொகுதி மேம்பாட்டு அதிகாரி, ``இந்தச் செய்தி ஆச்சர்யமாக உள்ளது. மாணவர்களின் சேர்க்கை ஏன் குறைவாக உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

மன்சபிகா பள்ளியும் ஒரேஒரு மாணவியும் இரண்டு ஆசிரியர்களும் இந்திய அளவில் பலரது கவனத்தையும் தற்போது பெற்றுள்ளனர்.