Published:Updated:

விழுப்புரம்: பழைய தாலுக்கா அலுவலகத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம்! பின்னணி என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்
டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்

திரு.வி.க சாலையில் அமைந்துள்ள பழைய தாலுக்கா அலுவலகத்தை புனரமைத்து, வண்ணம் தீட்டி 'டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 16.10.2002 ஆண்டு துவங்கப்பட்டது. விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உட்பட மொத்தம் 123 கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிக்கை அளித்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தில் புதியதாக பல்கலைக்கழகம் அமைக்கப்படும். அந்தப் பல்கலைக்கழகம் இந்த கல்வியாண்டு முதலே செயல்படத் துவங்கும்" என்று அறிவித்திருந்தார்.

ஆட்சியர் அண்ணாதுரை
ஆட்சியர் அண்ணாதுரை

இதனிடையே, அன்றே தன் தொகுதிக்கு உட்பட்ட பல்கலைக்கழகம் பிரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தற்போதைய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,

"கருணாநிதி கொண்டுவந்த பல்கலைக்கழகம் என்பதால் அரசு அதைப் பிரிக்க முற்படுகிறதா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி, "இதில் எந்தவிதமான காழ்ப்புணர்சியும் இல்லை. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக உள்ளன. அங்குள்ள மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்வி பயில வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன்தானே தவிர, வேறு எந்த காழ்ப்புணர்ச்சியும் இதில் இல்லை..." என்றார்.

அதனைத் தொடர்ந்து, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது பற்றிய மசோதா ஒன்று கடந்த 5-ம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தப் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இணைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், விழுப்புரம் காந்தி சிலை அருகே திரு.வி.க சாலையில் அமைந்துள்ள பழைய தாலுக்கா அலுவலகத்தை புனரமைத்து, வண்ணம் தீட்டி, 'டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வண்ணம் தீட்டப்படும்  கட்டடம்
வண்ணம் தீட்டப்படும் கட்டடம்

இந்த கட்டடம் முன்னதாக வட்டாட்சியர் அலுவலகமாகவும் (தாலுக்கா ஆபிஸ்), பின் சட்டக் கல்லூரியாகவும் செயல்பட்டு வந்துள்ளது. சட்டக் கல்லூரி வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து இந்தப் பழைய கட்டடம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் காணொளி காட்சி மூலம் பல்கலைக்கழகம் தொடங்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையால் குத்துவிளக்கு ஏற்றி இதன் செயல்பாடுகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு