Published:Updated:

நீட் தேர்வில் வெற்றிபெற்றும் பயனில்லை… புதுச்சேரி பிரச்னையால் தவிக்கும் ஏழை மாணவர்!

மாணவர் மணிகண்டன்
மாணவர் மணிகண்டன்

''அப்பாவும், அம்மாவும் கூலி வேலைக்குப் போய்தான் என்னை படிக்க வெச்சாங்க. நான் டாக்டராகி எல்லையில் இருக்கிற நம்ம ராணுவ வீரர்களுக்கு மருத்துவம் பார்க்கணும்கறதுதான் என் அப்பாவோட ஆசை. ஆனால் இந்த எல்லைப் பிரச்னை என் படிப்புக்கே தடையா இருக்கு."

யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் நிலப்பரப்பு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மாறுபட்ட ஒன்று. காரைக்கால், ஏனாம், மாஹே உள்ளிட்ட பிராந்தியங்கள் நீங்கலாக சுமார் 293 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களை உரசிக்கொண்டு அமைந்திருக்கிறது புதுச்சேரி. நகரிலிருந்து கிராமப்புறங்களுக்கு செல்ல வேண்டுமென்றாலும் தமிழகப்பகுதிகளை கடந்துதான் ஆகவேண்டும். குறிப்பாக கிராமப்புற சாலைகளின் ஒருபகுதி புதுச்சேரியாகவும், மறுபகுதி தமிழகமாகவும் அமைந்திருக்கிறது.

மணிகண்டன்
மணிகண்டன்

பல இடங்களில் தமிழகப் பகுதிகளில் அமைந்திருக்கும் வீடுகளுக்கு இன்றளவும் புதுச்சேரி அரசின் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புகள் இருக்கின்றன. ஒருசில கிராமங்களின் ஒரு பகுதி புதுச்சேரியிலும், மறுபகுதி தமிழகத்திலும் அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கிராமம்தான் புராணசிங்குபாளையம். அந்த கிராமத்தின் தமிழகப் பகுதியில் வசித்துவருகிறார் விவசாயக் கூலியான ரகுபதியின் மகன் மணிகண்டன்.

5-ம் வகுப்பு வரை புராணசிங்குபாளையத்தில் உள்ள புதுச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் படித்த மணிகண்டன், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அதே பகுதியிலுள்ள புதுச்சேரி அரசின் பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைலைப் பள்ளியில் படித்தார். +2 பொதுத்தேர்வில் 420/600 மதிப்பெண்கள் எடுத்த மணிகண்டன், எந்த கோச்சிங் மையத்திற்கும் செல்லாமல் வீட்டிலேயே படித்து 2019-ல் நீட் தேர்வு எழுதி 170 மதிப்பெண்களை எடுத்தார்.

மணிகண்டனின் வீடு
மணிகண்டனின் வீடு

தொடர்ந்து 2020-ல் மீண்டும் நீட் தேர்வு எழுதி 500 மதிப்பெண்களை எடுத்த அவர், அகில இந்திய அளவில் 86,541 இடத்தைப் பிடித்தார். தமிழகப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் சேர்க்கைக்காக தமிழகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் அவர் புதுச்சேரி அரசுப் பள்ளியில் கல்வி பயின்றதைக் காரணம் காட்டி அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது தமிழக அரசு.

பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழக அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் படித்தால் அவர்கள் தமிழக குடியுரிமையைப் பெற்று, பொதுப்பிரிவில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை அமலில் இருக்கிறது. அதே விதிமுறைகள் புதுச்சேரியில் இருந்தாலும், சென்டாக் (CENTAC) மூலம் விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் புதுச்சேரி அரசால் உருவாக்கப்படவில்லை. அதனால் மனிகண்டனால் புதுச்சேரியிலும் மருத்துவப் படிப்புக்காக விண்ணப்பிக்க முடியவில்லை.

நீட் தேர்வு
நீட் தேர்வு

மாணவர் மணிகண்டனுக்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துவரும் அவரது இயற்பியல் பாட ஆசிரியரான ஸ்ரீராமிடம் பேசினோம். "மணிகண்டனின் பெற்றோர்கள் இருவருமே விவசாயக் கூலிகள். அந்த விளிம்புநிலை குடும்பப் பின்னணியில் வளர்ந்த மணிகண்டன், சொந்த முயற்சியில் வீட்டிலிருந்தே படித்து நீட் தேர்வில் 500 மதிப்பெண்கள் எடுத்தும், அவரது மருத்துவப் படிப்பு கனவு கேள்விக்குறியாகியிருக்கிறது. எல்லைப் பிரச்னை காரணமாக படிப்பை தொடர முடியாமல் இருக்கும் மணிகண்டனின் நிலையை புதுச்சேரி மற்றும் தமிழகக் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறேன்.

தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சிறப்பு உள்ஓதுக்கீடு வழங்கவேண்டும் என்று எழுந்திருக்கும் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டிய தருணமிது. அதேபோல மணிகண்டன் புதுச்சேரி அரசு பள்ளியில் படித்தாலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழக அரசின் பாடத் திட்டத்தில், தமிழக அரசின் பாடப் புத்தகங்களைத்தான் படித்திருக்கிறார்.

மருத்துவப் படிப்பு
மருத்துவப் படிப்பு

மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தமிழக அரசு நடத்திய பொதுத்தேர்வுகளை எழுதி, மற்ற மாணவர்களைப்போல நீட் தேர்வு 2020-ல் 500 மதிப்பெண்களை எடுத்திருக்கிறார். அதனால் தற்போது தமிழகக் குடியுரிமையை பெற்றிருக்கும் மணிகண்டனை தமிழக அரசுப்பள்ளியில் படித்ததாகக் கருதி 7.5% உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் அவருக்கு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை” என்றார்.

மாணவர் மணிகண்டனைச் சந்திப்பதற்காக புராணசிங்குபாளையம் கிராமத்திற்குச் சென்றோம். எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தார்ப்பாய்கள் மற்றும் தென்னங்கீற்றுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட அந்த குடிசை வீட்டில் மாணவர் மணிகண்டனைச் சந்தித்தோம். “அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை கேட்டதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. நான் அரசுப் பள்ளியில் படித்து, போதுமான மதிப்பெண்ணையும் பெற்றிருந்ததால் மருத்துவம் படிக்கலாம் என்று நம்பிக்கையாகவும் இருந்தேன். அதற்காக விண்ணப்பிக்கப் போனபோது புதுச்சேரியில் படித்ததால் நீங்கள் விண்ணப்பிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.

`நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்’ - சென்னை மாணவர் மீது தேனியில் வழக்குப் பதிவு!

புதுச்சேரியில் சென்டாக்கில் சென்று விசாரித்தேன். ஆனால் சென்டாக்கில் புதுச்சேரி குடியுரிமை பெற்ற மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்னு சொல்லிட்டாங்க. அப்பாவும், அம்மாவும் கூலி வேலைக்குப் போய்தான் என்னை படிக்க வச்சாங்க. நான் டாக்டராகி எல்லையில் இருக்கிற நம்ம ராணுவ வீரர்களுக்கு மருத்துவம் பார்க்கணும்கறதுதான் என் அப்பாவோட ஆசை. ஆனால் இந்த எல்லைப் பிரச்னை என் படிப்புக்கே தடையா இருக்கு” என்றார் விரக்தியுடன்.

மருத்துப் படிப்புக்காக அரசு வரையறுத்திருக்கும் கல்வித் தகுதியையும், மதிப்பெண்களையும் பெற்றிருக்கும் ஓர் ஏழை மாணவனுக்கு மருத்துவ இடம் கிடைக்கவில்லை என்றால் அதை என்னவென்று புரிந்துகொள்வது?
அடுத்த கட்டுரைக்கு