Published:Updated:

சிதம்பரம்: `வகுப்பை கட் அடித்த மாணவர்கள்!’ - எட்டி உதைத்து, கொடூரமாகத் தாக்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொடூரமாக தாக்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்
கொடூரமாக தாக்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்

மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய ஆசிரியர்கள், பள்ளிகளில் அவர்களின் நடவடிக்கைகளை கவனிக்கும் பொறுப்பிலிருந்து விலகி நிற்கிறார்களா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் செயல்பட்டுவருகிறது நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. நூற்றாண்டைக் கடந்து நிற்கும் இந்தப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்புவரை இருக்கின்றன. இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளியில் நேற்று முட்டி போடவைத்திருக்கும் மாணவரை ஆசிரியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆசிரியர்
ஆசிரியர்

சரியாக 26 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் வகுப்பறையில் மாணவர்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கின்றனர். வகுப்பறையின் நுழைவு வாயிலில் முட்டிபோட்டிருக்கும் ஒரு மாணவரின் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு, முதுகில் பிரம்பைக் கொண்டு கொடூரமாகத் தாக்குகிறார் அந்த ஆசிரியர். வலி பொறுக்க முடியாமல் முட்டிபோட்டபடியே துள்ளும் அந்த மாணவனைக் கோபம் அடங்காமல் காலால் எட்டி எட்டி உதைக்கிறார் ஆசிரியர். வகுப்பின் பின்வரிசையில் இருக்கும் மாணவர் ஒருவரால் மொபைல்போனில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ப்ளஸ் டூ வகுப்பின் இயற்பியல் பாட ஆசிரியரான சுப்பிரமணியன், தன் மாணவர்களுக்கு அதிகமான வீட்டுப் பாடங்களை கொடுப்பார் என்று கூறப்படுகிறது. நேற்று வகுப்புக்கு வந்த ஆசிரியர் சுப்பிரமணியன், குறிப்பிட்ட இரண்டு மாணவர்கள் பள்ளிக்கே வருவதில்லை என்று தலைமை ஆசிரியரிடம் கூறியிருக்கிறார். அதற்கு `அந்த மாணவர்கள் தினமும் வருகிறார்களே... இன்று அவர்களை வகுப்பில் பார்த்தேனே...’ என்று கூறியிருக்கிறார் தலைமையாசிரியர்.

சிதம்பரம் நந்தனார் அரசு உயர்நிலைப் பள்ளி
சிதம்பரம் நந்தனார் அரசு உயர்நிலைப் பள்ளி

அப்போதுதான் அந்த மாணவர்கள் தனது வகுப்புக்கு மட்டும் வருவதில்லை என்ற உண்மை ஆசிரியர் சுப்பிரமணியனுக்குத் தெரிந்திருக்கிறது. ஆடூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த இரண்டு மாணவர்களும் நேற்று (13.10.2021) முதல் இரண்டு வகுப்புகளில் மட்டும் இருந்திருக்கின்றனர். அதன் பிறகு மூன்றாவது வகுப்பான இயற்பியல் வகுப்பை மட்டும் `கட்’ அடித்துவிட்டு பள்ளியின் மாடியில் சென்று அமர்ந்துகொண்டனர்.

அதன் பிறகு அந்த இரண்டு மாணவர்களையும் மடக்கிப் பிடித்து வகுப்பறையில் முட்டி போடவைத்து அரங்கேற்றப்பட்ட சம்பவம்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடலூர்  மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியத்திடம் இந்தச் சம்பவம் குறித்துக் கேட்டபோது, ``அந்த மாணவர்கள் வகுப்புக்கு வராமல் வெளியே  நின்றிருந்ததால் ஆசிரியர் அடித்ததாகத் தெரியவந்திருக்கிறது.  அந்த ஆசிர்யர் அவர்களுக்கு அட்வைஸ் செய்து அனுப்பியிருக்க வேண்டும். நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரிக்க  உத்தரவிட்டிருக்கிறேன். விசாரணையின் முடிவில் உரிய  நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாணவரை ஆசிரியர் அடித்த சம்பவம் சர்ச்சையாக வெடித்திருக்கும் அதே சூழலில், வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் எடுத்துவர அனுமதித்தது எப்படி என்பதும் விவாதப் பொருளாகியிருக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய ஆசிரியர்கள், பள்ளிகளில் அவர்களின் நடவடிக்கைகளை கவனிக்கும் பொறுப்பிலிருந்து விலகி நிற்கிறார்களா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. `கல்வி ஒன்றுதான் அனைவரையும் தலைநிமிர வைக்கும் மிகச் சிறந்த ஆயுதம்’ என்பதைக் கொள்கையாகக்கொண்ட கல்வியாளரான சுவாமி சகஜானந்தா அவர்களால் 1911-ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி பல்வேறு சிந்தனையாளர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் உருவாக்கியிருக்கிறது.

புதுச்சேரி: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு இல்லை! - கைவிடப்பட்ட மாணவர்கள்?

மகாத்மா காந்தி, காமராஜர், கக்கன் போன்றவர்கள் இந்தப் பள்ளியின் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கின்றனர். மகாத்மா காந்தி தொடங்கி ராஜாஜி, ஜி.டி.நாயுடு, காமராஜர், கருணாநிதி போன்றவர்கள் பள்ளியின் தரத்தைப் பார்வையிட்டுச் சென்றிருக்கின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பள்ளியில் தகுதியான மாணவர்களை வளர்த்தெடுப்பதுதான் சுவாமி சகஜானந்தாவுக்கு ஆசிரியர்கள் செய்யும் கைம்மாறாக இருக்க முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு