Published:Updated:

ஜூன் 15-ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு... பெற்றோர் என்ன நினைக்கிறார்கள்?

மாணவர்கள்
மாணவர்கள் ( Representational Image )

திட்டமிடாமல் வெளியாகும் அறிவிப்புகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரு வித கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

மார்ச் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, ஏப்ரல் மத்தியில் நடக்கும், மே முதல் வாரத்தில் நடக்கும் என்றெல்லாம் செய்திகள் பரவின. ஆயினும், ஊரடங்கு தொடர்ந்ததால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. ``கொரோனாவின் தாக்கம் குறைந்து ஊரடங்கு தளர்வு ஏற்பட்டவுடன் தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, ``ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்புத் தேர்வு நடக்கும்" என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்வோடு ப்ளஸ் 1, ப்ளஸ் 2 தேர்வுகளை எழுதாமல் விட்ட மாணவர்களும் அந்தந்த தேர்வுகளை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசு
தமிழக அரசு

தற்போது அந்த அறிவிப்பும் மாறியுள்ளது. ஜூன் 15-ம் தேதியிலிருந்து பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இப்படி மாற்றி அறிவிப்பது மாணவர்களை மட்டுமன்றி, பள்ளிக் கல்விச்சூழலையே பதற்றத்தில் ஆழ்த்துகிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள் கல்வியாளர்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வீரபெருமாள் நம்மிடம் பேசினார். ``மிகப் பெரிய பேரிடராக கொரோனா தொற்று பரவிவரும் சூழலில் அவசர அவசரமாக இந்தத் தேர்வை நடத்துவதற்கு என்ன அவசியம்? நோய்த்தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் சாலையில் வந்தவர்களை அடித்துத் துன்புறுத்தி வீட்டுக்குள் முடக்கிவிட்டு தற்போது ஒரே நாளில் ஐநூறு பேர், ஆயிரம் பேரைப் பாதிக்கிற நேரத்தில் தேர்வை அறிவிப்பது எந்த வகையில் நியாயம்? எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக மக்கள் திரிகிறார்கள். அப்படி இருக்கின்ற நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும் ?

வீர பெருமாள். பெற்றோர் நலச் சங்கம்
வீர பெருமாள். பெற்றோர் நலச் சங்கம்

ஒருவேளை வெளியில் வந்து எங்களுடைய குழந்தைகள் தேர்வெழுதித் தொற்று ஏற்பட்டால் அவர்களை எவ்வாறு தனிமைப்படுத்துவது? அதுவும் பெண் குழந்தைகளின் நிலையை நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது.

அரசின் இந்த முடிவைப் பார்க்கும்போது தனியார் பள்ளிகளின் நிர்பந்தம்தான் அரசாங்கத்தை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளதோ என்று எண்ணத்தோன்றுகிறது. 10-ம் வகுப்புக்கான தேர்வை அறிவித்தவுடனே தனியார்ப் பள்ளிகள் கட்டணம் கேட்டு நெருக்கடி கொடுக்கப் போகின்றன. அதுதான் நடக்கப் போகிறது. அதற்காகத்தான் தமிழக அரசு அவசரப்பட்டு இந்தப் பேரிடர் சூழலில் தேர்வை அறிவித்துள்ளது" என்கிறார் வருத்தமாக.

முருகையன் பக்கிரிசாமி. முனைவர்
முருகையன் பக்கிரிசாமி. முனைவர்

இதுகுறித்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற முனைவர் முருகையன் பக்கிரிசாமி ``தொழில் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். அவர்கள் தேர்வுக்குத் தயாராக, படிக்கும் ஊருக்கு வர தமிழக அரசு என்ன ஏற்பாடுகளைச் செய்துள்ளது..? அவ்வாறு அவர்கள் வந்தால் அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்...? என்று கேள்வி எழுப்புகிறார்.

ஒரு மாணவருக்குக்கூட நோய்த் தொற்று ஏற்படாது என்ற உத்தரவாதத்தைத் தமிழக அரசால் வழங்க முடியுமா? அவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டால் அந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்களா அல்லது அடுத்தடுத்த தேர்வுகளை எழுத மையத்துக்குச் செல்வார்களா? பேரிடர் மையங்களாக பல பள்ளிகள் செயல்பட்டுவரும் நிலையில் மாணவர்கள் தேர்வை எங்கே எழுதுவார்கள்?

நாங்கள் கேட்பது மனத்தெளிவு ஏற்பட்டு வலிமையோடு அடுத்த கட்டத்துக்கு பிள்ளைகளைத் தயார்படுத்துவதற்கான கால அவகாசம்!
வீரபெருமாள், மாணவர் பெற்றோர் நலச் சங்கம்
மாணவர்கள்
மாணவர்கள்
Representational Image

சி.பி.எஸ்.இ நிர்வாகம், ஊரடங்குத் தளர்வு ஏற்பட்டு பள்ளிகள் திறந்து 10 நாள்களுக்குப் பிறகுதான் தேர்வு வைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. எதற்கெடுத்தாலும் மத்திய வாரியப் பாடத்திட்டத்தை மேற்கோள் காட்டும் தமிழக அரசு இந்த விஷயத்தில் முரண்பட்டிருப்பது ஏன்?" என்ற கேள்வியையும் எழுப்புகிறார் அவர்.

இதுகுறித்து மாணவி ஒருவரின் அம்மா நந்தினியிடம் பேசினோம். ``தேர்வு எழுத உள்ள பாடநூல்கள் இந்தாண்டுதான் அறிமுகமாகியுள்ளன. அது பிள்ளைகளுக்கு ஏற்கெனவே கடுமையான மன உளைச்சலைக் கொடுத்துள்ளது. இந்தச்சூழலில் எதிர்பாராத லாக் டெளன் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதும் அவர்களுக்கு பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போதாக்குறைக்கு அமைச்சர் தொடர்ந்து தேர்வுத்தேதியை மாற்றி மாற்றி அறிவித்து வருகிறார். அதனால் பெற்றோரும் கலக்கமடைந்திருக்கிறார்கள். இந்தச்சூழலில் தேர்வு நடத்துவது மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்" என்றார் அவர்.

மார்ட்டின் கென்னடி தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு
மார்ட்டின் கென்னடி தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு

இன்னொரு மாணவரின் அப்பா முரளி என்பவர் பேசுகையில், ``என் மகன் வகுப்பிலேயே முதல் மதிப்பெண் பெறுபவன். அவனைப் போன்ற மாணவர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், அவனுடன் பயிலும் பிற மாணவர்கள் பயத்தில் உள்ளனர். சில வகுப்புகளை நடத்தி பயத்தைப் போக்கினால் அவர்களால் தேர்வெழுத முடியும். இல்லையென்றால் பெரும்பாலான மாணவர்கள் தேர்வில் தேர்ச்சியடையாமல் போகும் நிலை ஏற்படும்... அப்படி ஒரு சூழலை கல்வித்துறை ஏற்படுத்தக் கூடாது..." என்றார்.

பொதுத் தேர்வு
பொதுத் தேர்வு

இது தொடர்பாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் மார்ட்டின் கென்னடி பேசுகையில், ``மத்திய- மாநில அரசுகள் சிறிது சிறிதாகத் தளர்வுகளை நீக்கி வருகின்றன. அந்தவகையில் வரும் ஜூன் மாத இறுதிக்குள் தேர்வுகள் மற்றும் கல்வித்துறை தொடர்பான பணிகளை முடித்துவிட்டு ஜூலை மாதத்தில் கல்வியாண்டு தொடங்கும் என்று தெரிகிறது. அந்த அடிப்படையில் தற்போது தமிழக அரசு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை அறிவித்திருக்கலாம்.

தமிழக அரசின் முடிவை வரவேற்கிறோம். இதற்கிடையில், நோய்த் தொற்று தீவிரம் காரணமாக தமிழக அரசு அறிவித்துள்ள இந்தத் தேதியும் தள்ளிப் போனாலும் அதையும் எங்களுடைய அமைப்பு வரவேற்கும்" என்றார்.

இதுபற்றிப்பேச பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை தொடர்புகொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. கல்வித்துறை அதிகாரிகளும் நமது அழைப்பைத் தவிர்த்தார்கள்.

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

கடந்த மூன்று மாதமாக, இதுவரை காணாத ஒரு பேரிடரை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இந்தச்சூழலில், மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற ஒரு தேர்வை நடத்துவது நல்லதல்ல என்பதே கல்வியாளர்களின் கருத்து!

அடுத்த கட்டுரைக்கு