Published:Updated:

`ஆண்டுக்கு இருமுறை நீட்; கோச்சிங் சென்டர் கொள்ளைகளுக்கே உதவும்!' - என்ன சொல்கிறார்கள் ஆர்வலர்கள்?

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் ( Photo: Vikatan / T. Vijay )

மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்த தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது மாணவர்களுக்கு பயனளிக்குமா?

மருத்துவப் படிப்புகளுக்கு `நீட்' நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற குரல்கள் தமிழகத்தில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ``ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும்" என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய மனிதவளத்துறை இணை அமைச்சர் உபேந்திரா குஷ்வாஹா கூறியது, கல்வியாளர்களிடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிலர் வரவேற்றாலும், பலர் இதை எதிர்க்கவே செய்கிறார்கள்.

மேலும், மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தப்பட்டு, அதில் அதிகபட்ச மதிப்பெண்களை எடுத்துக்கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவது குறித்து, தேசிய தேர்வு முகமை மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

மூத்த பத்திரிகையாளரும் கல்வியாளருமான பொன்.தனசேகரனிடம் இதுகுறித்துக் கேட்டோம். ``என்னைப் பொறுத்தவரை நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற, சிறு நகரப்பகுதிகளிலுள்ள ஏழை மாணவர்களுக்கு எதிரானதுதான். கிராமப்புற மாணவர்களில், குறிப்பாக அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அடியோடு மருத்துவப் படிப்பு பக்கம் எட்டிப்பார்க்க முடியாதபடி நீட் செய்துவிட்டது. நீட் தேர்வே தமிழகத்தில் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு 2 வாய்ப்பு கொடுப்பது என்பது ஒரு வகையில் நல்லதுதான் என்றாலும், அதனுடைய பாதக அம்சங்களைப் பார்க்க வேண்டும்.

பொன்.தனசேகரன்
பொன்.தனசேகரன்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த நீட் தேர்வு மிகவும் கடினமானதாகவே இருக்கும். நகர்ப்புற, வசதி படைத்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் முதல் வாய்ப்பை மாதிரித் தேர்வைப் போன்று எழுதிப் பார்த்துவிட்டு, இரண்டாம் முறையில் அதிக மதிப்பெண்கள் பெற்று இடத்தைப் பெற்றுவிடுவார்கள். இதனால் கிராமப்புற மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள். அவர்களுக்கு மருத்துவப்படிப்பு என்பது எட்டாக்கனியாகிவிடும். இப்பவே அப்படித்தான் இருக்கிறது. மருத்துவ படிப்புக்கான இடங்களில் 7.5% இடங்கள், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்குத்தான் எனத் தமிழக அரசு ஆணை பிறப்பித்ததன் மூலம் கொஞ்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் தப்பியிருக்கிறார்கள்.

தமிழகத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு ப்ளஸ் டூ தேர்வில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் பொறியியல் படிப்பில் சேர்த்தார்கள். ப்ளஸ் டூ மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் சிஸ்டம் என்ற ஒன்றையும் வைத்திருந்தார்கள். அதாவது, ப்ளஸ் டூவின் முதன்மைப் பாடங்களில் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தால், அந்த முதன்மைப் பாடங்களை மட்டும் மீண்டும் படித்து தேர்வு எழுதி மதிப்பெண்களை உயர்த்திக் கொண்டார்கள். இதனால், பொறியியல் படிப்புக்கான அரசுக் கல்லூரிகளில் அதிகமாக இப்ரூவ்மென்ட் எழுதிய மாணவர்களே இடம்பிடித்தார்கள். இதற்கு கல்வியாளர்களிடமிருந்து எதிர்ப்பு வரவே, அரசு இம்ப்ரூவ்மென்ட் முறையை நீக்கியது. இதே போன்றதொரு நிலையைத்தான் இப்போது நீட் தேர்வும் கொண்டு வர இருக்கிறது.

Medical Studies
Medical Studies
Photo from Pixabay

ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படித்து முடித்ததும், பட்டப்படிப்பை முடித்து வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். பணமிருப்பவர்கள் வீட்டில், முதல் முறை, இரண்டாம் முறை, மூன்றாம் முறை எனத் தொடர்ச்சியாகத் தரவரிசையில் இடம்பெறவில்லை என்றாலும், கோச்சிங் சென்டரில் படித்து நான்காவது முறை இடம்பிடித்து விடுவார்கள். இது யாருக்கு சாதகமாக இருக்கிறது என்று இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

இன்னொரு பக்கம், இரண்டு முறை நீட் தேர்வு எழுத வைப்பதன் மூலம், புற்றீசல்போல கோச்சிங் சென்டர்கள் பெருகும். ஒரு லட்சம் ரூபாய், ஒன்றரை லட்சம் ரூபாய் எனப் பணமிருப்பவர்கள் சேர்ந்து படிப்பார்கள். மருத்துவப்படிப்பில் சேர்வார்கள். இது ஏழை மாணவர்களால் இயலாத காரியம். பொருளாதார அடிப்படையில் மட்டுமன்றி கல்விநிலையிலும் இது ஓர் ஏற்றத்தாழ்வைத்தான் உருவாக்குகிறது” என்றார்.

நீட் தேர்வு முறையால் நிறைய தனியார் கோச்சிங் சென்டர்கள் உருவாகி இருக்கின்றன. நாமக்கல்லில் பிராய்லர் கோழி பள்ளிகள் இருப்பதைபோல, நீட் தேர்வு கோச்சிங்குகளும் முளைத்துள்ளன. பல்வேறு தனியார் பள்ளிகள் இதைக் காரணம் காட்டி, இன்டெகிரேட்டட் கோர்ஸ் என்ற முறையில் கல்விக் கட்டணத்தை இரட்டிப்பாக வசூல் செய்து கொள்ளை லாபம் அடிக்கின்றன.

உதாரணத்துக்கு, பதினொன்றாம் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்கும்போதே, `சாதாரணமாக ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிப்பதற்கு ஆண்டுக்கு லட்சம் ரூபாய் கட்டணம். இந்தப் படிப்புகளோடு நீட், ஜே.இ.இ தேர்வுக்கும் தயார் செய்யும்படி இன்டகிரேட்டட் கோர்ஸில் சேர வேண்டுமெனில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரை கட்டணம்' எனச் சொல்லி வசூலிக்கிறார்கள்.

பண வசதி படைத்த பெற்றோர்கள், இன்டகிரேட்டட் கோர்ஸ்களில் சேர்த்துவிடுகிறார்கள். தனியார் கோச்சிங் சென்டர்களும் ஆசை வார்த்தைகளை விரித்து, நீட் கோச்சிங் என்ற பெயரில் லட்சங்களில் பணத்தை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். சில கோச்சிங் சென்டர்கள் ஹாஸ்டல் வசதியுடன் ரெசிடென்ஷியல் சர்வீஸாக நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இரண்டு முறை நீட் என்பது, பெற்றோர்கள் கோச்சிங் சென்டர்களை இன்னும் அதிகமாக நாடவைக்கும்.

மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்
மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்

இருமுறை நீட் தேர்வு நடத்துவது குறித்து, சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் பேசினோம். ``மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு வழங்க வேண்டும். அதற்காக, தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும். அதே நேரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களை நீட் தேர்வின் அடிப்படையிலேயே நிரப்பிட வேண்டும்.

ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்துவது என்பது வரவேற்கக் கூடிய விஷயம்தான். ஏனென்றால், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களால், முதல் முறை தேர்ச்சி பெறாமல் போனாலோ, குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலோ, அடுத்த தேர்வுக்கு ஓராண்டு வரை காத்திருக்காமல் அடுத்த வாய்ப்பு ஆறு மாதத்துக்குள்ளாகவே கிடைக்கும்.

இந்த இரண்டு தேர்வுகளில் எதில் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ, அதை மாணவர் சேர்க்கைக்குப் பயன்படுத்த வேண்டும். அதே நேரம், நீட் தேர்வுக்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டணம் வசூலிக்கக் கூடாது” என்றார்.

தற்போதைய நிலவரப்படி, நீட் தேர்வுக்கான கட்டணம் 1,500 ரூபாய். தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு 800 ரூபாய். 2019-ல் இந்த தேர்வை எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 15,39,375 பேர். 2020-ல் இதன் எண்ணிக்கை 15,97,633 பேர். நுழைவுத் தேர்வுக்கான கட்டணத் தொகையை 1,200 ரூபாய் என்று சாராசரியாகக்கொண்டால் கூட, மத்திய அரசு மாணவர்களிடம் இருந்து வசூலிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 191,71,59,600 ரூபாய். ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தும்போது இதன் மூலமாகவே 400 கோடி ரூபாயினை மத்திய அரசு சம்பாதித்துவிடும்.

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்
Photo: Vikatan / T. Vijay
திரட்டப்பட்ட நிதி, ஓராண்டு கோச்சிங், பள்ளியின் ஆதரவு... ஜீவித்குமார் `நீட்'டில் சாதித்தது எப்படி?

கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமாக வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இவை இரண்டுக்காகவும் மத்திய அரசு இவ்வளவு பணத்தைத் தேர்வு என்ற பெயரில் வசூலிப்பது சட்டப்படியான கொள்ளை என்றுதான் சொல்ல வேண்டும்.

மருத்துவரும் சமூக செயற்பாட்டாளருமான எழிலனின் கருத்து, இதையொட்டியதாகவே இருக்கிறது. ``நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கிறோம். கிராமம், நகரம் என அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மருத்துவர் ஆகும் கனவு வரவே கூடாத சூழலை உருவாக்கிவிட்டது இந்த நீட் தேர்வு.

 எழிலன்
எழிலன்

தனியார் பள்ளிகளில் நீட் தேர்வுக்கு இப்போதெல்லாம் எட்டாம் வகுப்பிலிருந்தே தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். 8 - 12-ம் வகுப்பு வரை, `மொழிப் பாடங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம். நீட் தேர்வு எழுத 12-ம் வகுப்பில் தேர்ச்சி போதும். நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் என்பதே இலக்கு' என்ற ரீதியில்தான் மாணவர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். பலவுள் தெரிக எனும் மல்டிபிள் சாய்ஸ் கொஸ்டின் முறைக்கு இளம் வயதிலேயே மாணவர்களைப் பழக்கப்படுத்துகிறார்கள்.

இன்னொரு பக்கம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்தளவுக்கு பயிற்சி கிடைப்பதில்லை. அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ... நீட் தேர்வின் கடுமையான நடைமுறைகளால் தேர்வில் தகுதியான மதிப்பெண்கள் எடுக்காவிட்டால் மாணவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தால் சில மாணவர்கள் விபரீத முடிவு எடுத்து விடுகிறார்கள்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பாதி இடங்கள் நீட் தேர்வின் அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெறுகிறது. ஆனால், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் ஏழை, நடுத்தர குடும்பத்து மாணவர்கள் கட்டணம் காரணமாக அங்கு சேர்வதில்லை. இன்னொரு பக்கம், நீட் பாஸ் செய்ய 110 - 130 மதிப்பெண்கள் எடுத்திருந்தாலே போதும். எனவே, 300, 400 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் பொருளாதார சூழல் காரணமாகப் பல மாணவர்கள் போட்டியிலிருந்து விலகுவதால், `120 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் போதும், ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் கட்ட முடியுமா? என் கல்லூரியில் வந்து சேர்ந்துகொள்' என்ற அடிப்படையிலேதான் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் நீட் தேர்வில் சமநீதி கிடைக்கிறது என்று யாராவது சொன்னால், அக்கருத்து தகுதியற்றது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் கறுப்பு பணத்தைச் சேர்க்காமல் இருக்க இது வழிசெய்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்” என்கிறார்.

வேலுமணி
வேலுமணி

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பெற்றோரான வேலுமணியிடம் பேசினோம். ``என் மகளுக்கு மருத்துவம் படிக்க ஆசை. வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி தனியார் பள்ளியில் படிக்க வைத்தால், அவர்கள் நீட் தேர்வுக்கும் சேர்த்து தயார் செய்கிறோம் என்று சொல்லி கூடுதலாகப் பணம் கரந்தார்களே தவிர, பலன் ஏதும் இல்லை. என் மகளும் நீட் தேர்வு எழுதினார். 110 மதிப்பெண்கள் எடுத்தார். இந்த மதிப்பெண்ணுக்கு தனியார் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்றார்கள். ஆனால், லட்சக்கணக்கில் பணம் கட்ட என்னிடம் வசதி இல்லை. இன்னொரு பக்கம், நீட்டில் என் மகள் எடுத்த அதே மதிப்பெண் எடுத்த பணக்கார வீட்டு பிள்ளைகள், லட்சங்களில் கட்டணம் செலுத்த முடிவதால் அதே தனியார் கல்லூரியில் சேர்கிறார்கள். இதை `மெரிட்' என்று எப்படிச் சொல்வது?

நீட் என்ற தகுதித் தேர்வை கொண்டு வந்து, பல மாணவர்களின் கனவை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். என் போன்ற வசதியற்ற குடும்பத்துக்கு மருத்துவக் கல்வி எல்லாம் கைக்கு எட்டாமல் போய்விட்டது. தகுதித் தேர்வு என்ற பெயரில் எங்கள் வீட்டுப் பிள்ளைகளின் மருத்துவக் கல்வி கனவை மத்திய அரசு பறித்துக்கொண்டுவிட்டது. இதில் இன்னொரு முறை தேர்வெழுத வாய்ப்பு தருவதால் என்ன மாற்றம் வரப்போகிறது?” என்றார் வேதனையோடு.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நீட் தேர்வின் மூலம் வட இந்திய மாணவர்கள்தான் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகம் படிக்க சேர்ந்திருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் வேற்று மாநில மாணவர்கள், தமிழக மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்து முடித்துவிட்டு, ஹாயாக அவரவர் மாநிலத்துக்குச் சென்றுவிடுவார்கள்.

இங்கே மருத்துவர்கள் இன்றி அரசு மருத்துவமனைகளும், கிராமப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களும் தடுமாற ஆரம்பிக்கும். தனியார் கல்லூரிகளில் கோடிக்கணக்கில் செலவு செய்து படித்து முடிக்கும் மருத்துவர்கள், தனியார் க்ளினிக்குகளுக்கு நோயுடன் வரும் மக்களை நோயாலேயே அடித்து கொள்ளையடிக்கத் தொடங்குவார்கள்.

நீங்க NEET தேர்வுக்குத் தயாரா இருக்கீங்களா?
நீங்க NEET தேர்வுக்குத் தயாரா இருக்கீங்களா?
சென்னை: போலி நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் - பெங்களூருவில் மாணவி சிக்கியது எப்படி?

நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் மூலம் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளை லாபம் பார்க்கத் தொடங்கிவிட்டன. மாணவர்கள் பள்ளி முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்வதுபோல் இங்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இளைஞர் சக்தி இப்படி கோச்சிங் சென்டர்களில் தேங்குவது நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல. வசதி படைத்தவன் கோச்சிங் சென்டர் போகலாம். வாய்க்காலில் போராடும் ஏழை மகன் கம்பவுண்டராகக்கூட ஆகமுடியாதபடி செய்வது சமூக அநீதி என்ற குரல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன.

நீட்டே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு என்ற ஆலோசனையில் இருக்கிறது மத்திய அரசு. மத்திய அரசு சட்டபூர்வமாக சம்பாதிப்பதற்கும், தனியார் பள்ளிகளும், கோச்சிங் சென்டர்களும் கொள்ளை லாபம் பெறுவதற்கும், இரண்டு மடங்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவே இந்த `ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு' வழிவகுக்கும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

- மோ.கணேசன்
அடுத்த கட்டுரைக்கு