தேர்வுகள் ரத்து: `மீறினால் அங்கீகாரம் பறிக்கப்படும்!’ - அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏஐசிடிஇ கடிதமா?

அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே ஏஐசிடிஇ-யின் விதி. இந்த விதியை மீறினால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்தாகும்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடியே இருக்கின்றன. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இறுதியாண்டுத் தேர்வுகளை தவிர்த்து மற்ற தேர்வுகளை ரத்து செய்து அறிவித்தார். `அரியர் வைத்திருக்கும் மாணவர்களும் தேர்வுக்குப் பணம் கட்டியிருந்தால், அந்தத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்’ என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில், ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்ததாகத் தகவல் வெளியானது. இதை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவும் தெரிவித்திருந்தார். `இந்த நிலையில் ஏஐசிடிஇ அமைப்பிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை’ என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும், `அப்படியான கடிதம் அனுப்பப்பட்ருந்தால் அதை வெளியிட வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஏஐசிடிஇ தலைவர் எழுதிய கடிதம் வெளியானதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட அந்த கடிதத்தில், `அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது’ எனவும், `அரியர்ஸ் மாணவர்களை தேர்ச்சி பெறவைத்தால் அதை எந்தத் தொழில் நிறுவனமும், உயர்கல்வி நிறுவனமும் ஏற்காது’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, `உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைக்கழத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரியர் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே எஐசிடிஇ-யின் விதி. இந்த விதியை மீறினால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்தாகும் என்ற விதியும் உள்ளது.
இந்த நிலையில், வெளியான இந்த கடிதம் போலியானது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விளக்கம் பெற அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.