Published:Updated:

`டிசம்பர் மாதத்துக்குள் ஸ்மார்ட் கிளாஸ்!'- செங்கோட்டையன் தகவல்

``தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்துப் பள்ளிகளிலும் கரும்பலகைக்குப் பதிலாக, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளாக மாற்றப்படும்.''

செங்கோட்டையன் நிகழ்ச்சி
செங்கோட்டையன் நிகழ்ச்சி ( நா.ராஜமுருகன் )

``தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்துப் பள்ளிகளிலும் கரும்பலகைக்குப் பதிலாக, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளாக மாற்றப்படும்" என்று கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி தொடக்க விழாவில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

செங்கோட்டையன் நிகழ்ச்சி
செங்கோட்டையன் நிகழ்ச்சி
நா.ராஜமுருகன்

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 47 வது ஜவகர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல் கணித, சுற்றுப்புறக் கண்காட்சி மற்றும் அறிவியல் பெருவிழா, கரூர் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு, கண்காட்சியினைத் தொடங்கி வைத்தார்.

`பின்லாந்தில் கல்விமுறை எப்படி இருக்கிறது தெரியுமா!' - சிலாகித்த அமைச்சர் செங்கோட்டையன்

இந்த மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்துப் பள்ளிகளிலும் கரும்பலகைக்குப் பதிலாக, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளாக மாற்றப்படும். அடுத்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலணிக்கு பதிலாக, ஷூ மற்றும் சாக்ஸ் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

செங்கோட்டையன் நிகழ்ச்சி
செங்கோட்டையன் நிகழ்ச்சி
நா.ராஜமுருகன்

இன்று கரூர் மாவட்டத்தில் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில், 120 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படி தமிழக அரசு, மாணவர்களின் அறிவியல் சிந்தனையை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்து, ஆயிரம் பள்ளிகளில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், மத்திய அரசின் அட்டல் திட்டம் மூலம் மாணவர்களின் அறிவுத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக அரசு செயல்பட்டு வருகிறது" என்றார்.

அப்போது செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள், "ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்படுவதால், மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகுமே?" என்று கேள்வி எழுப்பியதற்கு, பதில் அளித்த செங்கோட்டையன், "5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு என்பது, அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில், மத்திய அரசால் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுத்தேர்வு என அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு இந்த மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதுவார்கள்.

செங்கோட்டையன் நிகழ்ச்சி
செங்கோட்டையன் நிகழ்ச்சி
நா.ராஜமுருகன்

3 ஆண்டுகளுக்கு விதி விலக்கு அளித்து, 100 சதவிகிதம் தேர்ச்சி அளிக்கப்படும். அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் தேர்வு எப்படி நடைபெற்று வருகிறது என ஆய்வு செய்து, பல்வேறு தரப்பினரின் கருத்துகளை ஆராய்ந்து, இந்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். எனவே, மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. 100 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள்" என்றார்.