Published:Updated:

`தேசியக் கல்விக் கொள்கையை எல்லா மாநிலங்களும் எதிர்க்க வேண்டும்!' - நடிகை ரோகிணி

கே.குணசீலன்
ம.அரவிந்த்

தேசியக் கல்விக் கொள்கையை எல்லா மாநிலங்களும் எதிர்க்க வேண்டும் என்று நடிகை ரோகிணி தெரிவித்தார்.

 நடிகை ரோகிணி
நடிகை ரோகிணி

`நடிகர் சூர்யா 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து வருகிறார். குழந்தைகள் எந்தச் சூழ்நிலையில் எப்படிப்பட்ட இடங்களில் இருந்து வருகிறார்கள் என்பது எல்லோரையும்விட அவருக்கு நன்றாகத் தெரியும்' எனத் தஞ்சாவூரில் நடிகை ரோகிணி தெரிவித்தார்

கையெழுத்து இயக்கம் நடத்தும் ரோகிணி
கையெழுத்து இயக்கம் நடத்தும் ரோகிணி

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவிகளிடையே கெயெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும் நடிகையுமான ரோகிணி தொடங்கி வைத்து கல்லூரி மாணவிகளிடையே கையெழுத்து வாங்கினார். இதில் ஏராளமானவர்கள் கையெழுத்திட்டனர்.

பின்னர் நடிகை ரோகிணி செய்தியாளர்களிடம் பேசியதாவது, `மத்திய அரசு கொண்டு வர உள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை நான் கண்டிக்கிறேன். இதை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும். இது ஏழை, எளிய மக்களுக்கு எதிரானது. எந்தக் காலத்திலும் எல்லா இடத்திலேயும் நுழைவுத் தேர்வு என்பது எதிரானது.

நடிகை ரோகிணி
நடிகை ரோகிணி

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் இது எதிரானது. இந்தத் தேசிய கல்விக் கொள்கையை எல்லா மாநிலங்களும் எதிர்க்க வேண்டும். சம கல்வி, சம பயிற்சி இல்லாத நிலையில் குழந்தைகள் எப்படி நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற முடியும், பட்டப் படிப்பில் சேர முடியும். நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தை நான் ஆதரிக்கிறேன்.

அவர் 10 ஆண்டுகளாகக் குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து வருகிறார். எனவே, குழந்தைகள் எந்தச் சூழ்நிலையில் எப்படிப்பட்ட இடங்களில் இருந்து வருகிறார்கள் என்பது எங்களை விட அவருக்கு நன்றாகத் தெரியும். அதிகமான டாக்டர்களை உருவாக்கியிருக்கிறார். எனவே, அவர் கூறிய கருத்து உண்மைதான். அவருக்கு எதிராகப் பேசுபவர்கள் அதைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் நான் சொல்வேன். நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை, மூன்றாம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு என எல்லாமே குழந்தைகளுக்கு அழுத்தம் தருவதாக உள்ளது.

நடிகை ரோகிணி
நடிகை ரோகிணி

அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக எதுவும் இல்லை. மத்திய அரசு எல்லாவற்றையும் ஒரே விதமாகக் கையாளப் பார்க்கிறார்கள். சம்ஸ்கிருதம், இந்தி கற்றுக் கொடுக்க முயல்கிறார்கள். இந்துத்துவா கொள்கையை மாணவர்களிடம் புகுத்த வேண்டும் என்று பார்க்கிறார்கள். இந்துத்துவாவின் கொள்கைகளையும் கல்வியில் பின்வாசல் வழியாகப் புகுத்துவதற்குப் பார்க்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறேன்'' எனத் தெரிவித்தார்.