தமிழக மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிடக் குறைவாகவே கல்விக்கடன் வழங்கப்பட்டிருப்பதாக வங்கிகள் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளன. இது கவலை தரும் புள்ளிவிவரமாக இருக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் சில பிரிவுகளை முன்னுரிமைப் பிரிவுகளாக அறிவித்து, அவற்றுக்குக் குறிப்பிட்ட அளவுக்குக் கடன் தர வேண்டியது முக்கியம் என ரிசர்வ் வங்கி அறிவிக்கும். வங்கிகள் எவ்வளவு கடன் தர வேண்டும் என்று ஒரு தொகையையும் ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும். தொழிற்கல்வி உள்ளிட்ட உயர்கல்விகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை வழங்கப்படும் கல்விக்கடன் இப்படிப்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
2021-22 நிதியாண்டில் தமிழகத்தில் உள்ள வங்கிகள் இப்படி ரூ.1,666 கோடி அளவுக்குக் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், ரூ.1,047 கோடியே 33 லட்சம் மட்டுமே வங்கிகள் கல்விக்கடன் கொடுத்துள்ளன. 68,405 பேர் இப்படிக் கடன் பெறுள்ளனர். தமிழ்நாட்டுக்கான ஸ்டேட் லெவல் பேங்கர்ஸ் கமிட்டி இதை அறிவித்திருக்கிறது.

இந்தியாவிலேயே அதிக கல்விக்கடன் பெறுவது தமிழக மாணவர்கள்தான். நாட்டில் வழங்கப்படும் கல்விக்கடன்களில் மூன்றில் ஒரு பங்கைத் தமிழக மாணவர்கள் பெறுகிறார்கள். இது குறைகிறது என்றால், இந்தியா முழுக்க வழங்கப்படும் கல்விக்கடன் அளவும் குறைவதாகவே அர்த்தம்.
கொரோனா சூழல் காரணமாகவும், வேலைவாய்ப்பு மந்தநிலையாலும் கல்விக்கடன் விஷயத்தில் வங்கிகள் மிகுந்த கவனத்துடன் இருக்கின்றன.
இதனால் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் கல்விக்கடனின் அளவு குறைந்துகொண்டே போகிறது. முன்னுரிமைப் பட்டியலில் கல்விக்கடன் வாங்கியவர்கள் மத்தியில் வாராக்கடன் அளவு முந்தைய ஆண்டுகளைவிட இப்போது குறைந்திருப்பதாக வங்கிகள் கமிட்டி கூறுகிறது. என்றாலும், புதிய கடன்களை வழங்குவதைக் குறைப்பது ஆரோக்கியமானதல்ல.
'முன்னுரிமை தர வேண்டும்' என்று சொல்லி ரிசர்வ் வங்கியே இலக்கு நிர்ணயித்தும், அதை வங்கிகள் முழுமையாகத் தராமல் குறைப்பது நியாயமல்ல!
கல்வியில் செய்யப்படும் முதலீடு, எதிர்காலத்துக்கான முதலீடு. அது ஒவ்வொரு குடும்பத்தின் சமூக அந்தஸ்தையும் உயர்த்துவதற்கான முதலீடு. இந்த முதலீட்டில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும்.