Published:Updated:

``அனிதா அக்கா இறந்தப்போ போட்ட சபதம் இது!" - பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிக்கச் செல்லும் சௌந்தர்யா

மருத்துவம் படிக்கச் செல்லும் செளந்தர்யா
மருத்துவம் படிக்கச் செல்லும் செளந்தர்யா

அனிதாவுக்கு தங்கை முறையுடைய, அரியலூரைச் சேர்ந்த செளந்தர்யாவுக்கு, பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் அனிதாவுக்கு தங்கை முறையுடைய, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. போதிய பொருளாதார வசதி இல்லை என்றாலும் அவருக்குத் தன் லட்சியத்தை அடைவதற்கான வழி பிறந்திருக்கிறது. இதன் மூலம் கனவு நிறைவேறியிருப்பதாக அந்த மாணவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, அந்தத் தேர்வால் தன் மருத்துவக் கனவு தகர்ந்ததால் மனமுடைந்து 2017-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவம் நீட் தேர்வுக்கு எதிரான கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. தற்போதுவரை நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனத் தமிழகத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் தீவிரமான போராட்டங்களுக்கு, அந்த மரணமே ஆரம்பப்புள்ளி.

அனிதாவின் நினைவாக அவரின் அண்ணன் மணிரத்னம், தன் சொந்த ஊரான குழுமூரில் நூலகம் ஒன்றை அமைத்து அதில் அனிதாவின் சிலை ஒன்றையும் நிறுவியுள்ளார். நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து நடத்தி வருகிறார். படிக்க ஆசைப்படும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டியும் வருகிறார்.

அனிதா
அனிதா

இந்நிலையில் அனிதாவின் உறவினரும், அவருக்குத் தங்கை முறை உடையவருமான அதே ஊரைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மெடிக்கல் ஸ்கூல் ஒன்று செளந்தர்யா மருத்துவம் படிப்பதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதற்கான உறுதியை அளித்துள்ளது. இதன் மூலம் அனிதாவின் கனவு நிறைவேறியிருப்பதாக மணிரத்னம் உள்ளிட்ட பலர் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து மணிரத்னத்திடம் பேசினோம். ``நீட் தேர்வால் எங்களைப் போன்ற ஏழை மாணவர்கள் டாக்டருக்குப் படிப்பது என்பது கேள்விக்குறியாகிவிட்டது. இனி ஏழைகள் கனவில் மட்டுமே டாக்டருக்குப் படிக்க முடியும். அனிதா தன்னைப் பற்றி மட்டும் நினைக்கவில்லை. படிப்பை லட்சியமாகக் கொண்ட அனைத்து ஏழை மாணவர்களின் எதிர்காலத்தையும் எண்ணியதாகவே அவருடைய கவலை இருந்தது.

அனிதாவின் இறப்பு ஏற்படுத்திய பாதிப்பு நீட்டுக்கு எதிரான போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளது. டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற கனவுடன் பல ஏழை மாணவர்கள் இருந்தாலும், நீட் தேர்வால் அவர்களுக்கான கதவு திறக்கவில்லை. இந்நிலையில், எங்கள் ஊரைச் சேர்ந்த ஏழை மாணவியான செளந்தர்யா, அனிதாவைப் போலவே டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற கனவை கொண்டிருந்தார்.

அவருடைய பெற்றோர் கூலி வேலை செய்கின்றனர். சகோதரர் சென்னையில் மூட்டை தூக்கும் கூலியாக இருக்கிறார். இந்நிலையில், இவர்களுடைய பொருளாதாரமும் நீட் தேர்வும் செளந்தர்யாவின் கனவை கலைத்தது. இதையடுத்து செளந்தர்யா குறித்து, பிலிப்பைன்ஸ் நாட்டில் செயல்படும் டாவோ மெடிக்கல் ஸ்கூல் ஃபவுண்டேஷன் மற்றும் டிரான்ஸ்வேர்ல்டு குருப் ஆஃப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சேர்மன் டாக்டர் டேவிட் கே.பிள்ளையின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன்.

டாக்டருக்கு படிக்க உள்ள செளந்தர்யாவுக்கான சான்றிதழ்
டாக்டருக்கு படிக்க உள்ள செளந்தர்யாவுக்கான சான்றிதழ்

உடனடியாக செளந்தர்யா பிலிப்பைன்ஸில் தங்கி டாக்டருக்கு படிப்பதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அனிதாவின் சிலை முன்பு இதற்கான உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. அப்போது, அனிதாவின் கனவு நிறைவேறிவிட்டதாக செளந்தர்யா கண்களில் நீர் கசிய தெரிவித்தார்.

அனிதாவின் தங்கையான செளந்தர்யாவுடன் சேர்த்து மேலும் மூன்று ஏழை மாணவர்களின் டாக்டர் படிப்புக்கான செலவையும் டாவோ மெடிக்கல் ஸ்கூல் ஃபவுண்டேஷன் ஏற்றுள்ளது. ஒவ்வொரு வருடமும் இதுபோல் பலரை படிக்க வைக்கவும் முடிவு செய்துள்ளது.

செளந்தர்யா போன்ற ஏழை மாணவர்களின் கனவுக்கான கதவு திறந்துள்ளது. அதுவும் அனிதா உயிர் துறந்த மண்ணிலேயே இது சாத்தியமாகியிருக்கிறது. இந்த நேரத்தில் அனிதா உயிருடன் இருந்திருந்தால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்'' என்றார்.

அனிதா சிலை முன்பு செளந்தர்யா
அனிதா சிலை முன்பு செளந்தர்யா

செளந்தர்யாவிடம் பேசினோம். ``நான் இப்போ பேக்கரியில வேலை பார்க்கிறேன். அனிதா அக்கா சடலமா கண்ணாடிப் பெட்டிக்குள்ள கிடத்தப்படிருந்தப்போ, அந்தப் பெட்டியைக் கட்டிக்கிட்டு கதறியபடி, நான் டாக்டருக்குப் படிக்கணும்னு சபதமெடுத்தேன். ஆனா வீட்ல தொடர் வறுமை, நீட்னு ஒரு வெளிச்சமும் தெரியல.

அரசு உதவிபெறும் பள்ளியில படிச்ச என் கனவுக்கு இப்போ உயிர் கிடைச்சிருக்கு. நான் பிலிப்பைன்ஸ்ல டாக்டருக்குப் படிக்கப்போறேன் என்பதை நினைக்கும்போதே, அனிதா அக்கா முகம்தான் கண் முன்னே வந்துபோகுது. நம்ம நாட்டுல ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான கதவு அடைக்கப்படுது. ஆனா, வெளிநாட்டுல ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. படிக்க ஆசைப்படுற ஏழை மாணவர்களோட படிப்புக்கு அரசு பொறுப்பேற்கணும் என்ற கோரிக்கையை மட்டும் சொல்லிக்கிறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு