அண்ணா பல்கலைக்கழகம் கடந்த பிப்ரவரி மாதம் பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்தி முடித்தது. இந்நிலையில், அந்தத் தேர்வுகளை ரத்து செய்வதாகவும் மீண்டும் தேர்வுகளை நடத்துமாறும் தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மறுதேர்வுகள் மே 25-ம் தேதியன்று நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மறுதேர்வுகளுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பி.இ மற்றும் பி.டெக் மாணவர்களில் பெரும் பகுதியினர் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் பேரிடருக்கு முந்தைய வினாத்தாள் வடிவமே இப்போதும் பின்பற்றப்படும். தேர்வு 3 மணிநேரத்துக்கு நடைபெறும். இவற்றில் எந்த மாற்றமும் இல்லை. பிப்ரவரி மாதம் 70 சதவிகித மாணவர்கள் ஃபெயில் ஆகியுள்ளனர். அவர்கள், இந்தத் தேர்வுகளில் அரியர் தேர்வு எழுதுவதைப்போல் பதிவு செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தேர்வில் மாணவர்கள் தங்களுக்கு அதிக முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதனால் தங்களுக்கு அதிகச் சிரமங்கள் ஏற்பட்டதாகவும் முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதில் மாணவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுடைய வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தைக் கருதியும் இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு முன்பு பின்பற்றிய பழைய வினாத்தாள் முறையே கடைப்பிடிக்கப்படும் என்றும் தமிழகத்திலுள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் நடத்தியதைப்போலவே இந்தத் தேர்வுகள் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇதில், ஏற்கெனவே பிப்ரவரி மாதத் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களும்கூட விரும்பினால் தேர்வு எழுதலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சில குழப்பங்கள் நிலவுகின்றன.
முன்னரே தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டுமொரு முறை எழுத வேண்டிய அவசியம் என்ன, ஒருவேளை அவர்கள் இதில் எழுதினால், முந்தைய தேர்வில் அவர்கள் வாங்கிய மதிப்பெண்கள் என்னவாகும், இரண்டு மதிப்பெண்களில் எது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்?

அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் ஊடக அறிவியல் துறை பேராசிரியருமான முனைவர் அருள் அறம் இந்தக் குழப்பங்கள் குறித்துப் பேசியபோது, ``பிப்ரவரி மாதம் நடந்த தேர்வுகளில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே எழுதலாம். அதில் குறைவான மதிப்பெண்களை வாங்கித் தேர்ச்சியடைந்தவர்கள் இந்தத் தேர்வை மீண்டும் எழுதும்போது அதிக மதிப்பெண் பெற்றால் அதுவே எடுத்துக்கொள்ளப்படும். அதாவது, தேர்ச்சியடைந்த மாணவர்கள் இரண்டாவது முறையும் எழுதினால், இரண்டில் எதில் அவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்களோ, அதுவே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்" என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதில் ஏற்படும் சிக்கல்கள், மாணவர்களுடைய தேர்வுமுறைகள் குறித்து மேற்கொண்டு பேசியவர், ``இணையவழிக் கல்வியில், மாணவர்கள் அனைவரும் முறையாகக் கவனிக்கின்றார்களா என்பதுகூடத் தெரிவதில்லை. இந்நிலையில், தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்கள் சரியாகப் பாடம் நடத்துகிறார்களா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. பல கல்லூரிகளில், ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் குறைக்கப்பட்டுவிட்டது.
பல கல்லூரிகளில் நிறைய ஆசிரியர்கள் வேலையிழந்துள்ளனர். இணையவழிக் கல்விதானே என்று குறைவான ஆசிரியர்களை வைத்தே பாடம் நடத்துகின்றனர். இதனால், மாணவர்களுக்குப் பாடங்கள் முறையாக நடத்தப்படுகின்றனவா என்ற கேள்வியே எழுகிறது. ஆகவே, அதிக மாணவர்கள் தேர்வுகளில் தோல்வியைத் தழுவியதற்கு இதுவும் முக்கிய காரணமாக இருக்கலாம். பல்வேறு கல்லூரிகள், ஆசிரியர்களுக்கு சம்பளக் குறைப்பு செய்துள்ளன. இதை அரசாங்கத்தாலோ, பல்கலைக்கழக அதிகாரிகளாலோ சரிசெய்ய முடியவில்லை.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியிலுள்ளவர்களுக்கு சம்பளப் பிடிப்பு செய்யப்படவில்லை. இதேபோல், தனியார் கல்லூரிகளிலும் நடக்கிறதா என்றால் இல்லை. இந்தச் சூழலில், வகுப்புகள் ஒழுங்காக நடக்கின்றனவா என்பதிலேயே பல சந்தேகங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலைமை நீடிக்கும்போது, எத்தனை தேர்வுகள் வைத்தாலும், மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடைவது சிரமம்.
இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக, தொற்றுப் பேரிடர் காலத்தில் ஒரு மாணவர் தேர்வுகளில் தேர்ச்சியடைகிறார்களா என்பதைக் கவனிப்பது ஆரோக்கியமானதுதான். இருந்தாலும் வெறுமனே தேர்வுகளை நடத்தாமல், மாணவர்களுக்குப் பாடம் ஒழுங்காகக் கற்றுக் கொடுக்கப்படுகிறதா என்பதையும் கண்காணித்தாக வேண்டும். கல்விக் கட்டமைப்பும் சரி பெற்றோர்களும் சரி அனைவருமே இதில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான், உரிய படிப்பை முடித்துவிட்டு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பைத் தேடும்போது, அந்த மாணவர் தான் தேடும் வேலைக்குரிய தகுதிகளோடு இருக்க முடியும். அதற்குரிய திறன்களையும் அப்போதுதான் அவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும்.
அதோடு மாணவர்களும் இந்த இணையவழிக் கல்வியில் முறையாக வகுப்புகளில் இடம் பெறுகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். ஒரு பாடத்துக்கு 45 வகுப்புகள் இருந்தால், அதில் 40 மணிநேரமாவது அட்டெண்ட் செய்திருக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். மாணவர்கள் முறையாகத் தேர்வுகளை எழுதுகிறார்களா இல்லையா, அவற்றில் தேர்ச்சியடைகிறார்களா இல்லையா என்பதை எப்படிக் கண்காணிக்கிறோமோ, அதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறோமோ, அதேபோல், அவர்களுக்கு முறையாகப் பாடம் நடத்தப்படுகின்றதா, தனியார் கல்லூரிகளில் அதற்குரிய அளவில் ஆசிரியர்கள் இருக்கிறார்களா, அவர்கள் முறையாகச் செயல்படுகிறார்களா என்பனவற்றை கண்காணிக்க வேண்டும்" என்று கூறினார்.

மாணவர்களின் தேர்ச்சி எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களுடைய எதிர்கால வேலைவாய்ப்புக்கு அடிப்படைத் தேவையான திறன்களில் அவர்கள் முன்னேற்றம் காண்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியம். தனியார் கல்லூரிகள் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் ஆசிரியர்களின் வருமானத்தைக் குறைப்பது, ஆசிரியர்கள் எண்ணிக்கையைக் குறைப்பது போன்றவை, மாணவர்களுக்குக் கிடைக்கக்கூடிய கல்வியின் தரத்தில்தான் எதிரொலிக்கும் என்றும் ஆசிரியர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.
இதுகுறித்துப் பேசிய கல்வி செயற்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ``அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வு குறித்து மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, நடந்து முடிந்த தேர்வுகள் அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை அளிக்கவில்லை என்பது வெளிப்பட்டது. அதன் தொடர்ச்சியாக எழுந்த பல்வேறு கோரிக்கைகளையும் பல்கலைக்கழக மாணவர்கள் தேர்ச்சி குறித்து ஏற்கெனவே நீதிமன்றம் தெரிவித்திருந்த கருத்துக்களையும் கவனத்துடன் பரிசீலித்து, தமிழ்நாடு அரசு மீண்டும் தேர்வு நடத்தலாம் என்ற நியாயமான முடிவை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. தேர்ச்சி பெறாமல் போன அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு தருவதும் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் தேர்வு முறையில் திருப்தி இல்லாமல் மீண்டும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களும் தேர்வு எழுதலாம் என்கிற அறிவிப்பும், மாணவர்களுக்கு சமவாய்ப்பை கூடிய வரை உருவாக்கித் தரும் முயற்சியாகும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து, மாணவர்களுக்கு பழக்கப்பட்ட தேர்வுத் தாள் அமைப்பில் மன அழுத்தம் இல்லாமல் அனைவரும் தேர்வு எழுதிட வழி செய்யப்பட்டுள்ளது பாராட்டிற்குரியது" என்று கூறினார்.