Published:Updated:

அண்ணா பல்கலைக்கழகம் மறுதேர்வு வழிமுறைகள்... மாணவர்கள் என்ன செய்யவேண்டும்?

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், மாணவர்கள் மறுதேர்வு எழுதும் புது வழிமுறையை உறுப்பு கல்லூரி முதல்வர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

கடந்த வருடம் நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடைபெற இருந்த பி.இ மற்றும் பி.டெக் தேர்வுகள் கொரோனா தொற்று காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைன் முறையில் நடத்தி முடித்தது அண்ணா பல்கலைக்கழகம். அந்தத் தேர்வு முடிவில் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றிருந்தனர். பெருவாரியான மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதோடு, பலரும் தேர்ச்சி அடையவில்லை. பல 'ஆல் க்ளியர்' மாணவர்களுடைய 'டிஸ்டிங்ஷன்' பெரும் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டன அம்முடிவுகள்.

அந்த முடிவினால் மாணவர்களுக்கு படிப்பு மீது வெறுப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்தத் தேர்வுகளை ரத்து செய்வதாகவும், மீண்டும் தேர்வுகளை நடத்தும்படியும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தது தமிழக அரசு.

தேர்வு எழுதும் மாணவர்கள்
தேர்வு எழுதும் மாணவர்கள்
Representational Image

"பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற அந்தத் தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. பழைய வினாத்தாள் வடிவத்தில் 3 மணி நேரத்திற்கு தேர்வு நடைபெறும். கடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம். இரு மதிப்பெண்களில் எது அதிகமோ... அந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்தட் தேர்விற்காக மீண்டும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதேசமயம், தற்போது நடைபெற உள்ள தேர்வு, அரியர் தேர்வு போல பதிவு செய்யப்படாது" எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்வுகளை விரைவாக நடத்துவதற்கு முனைப்பு காட்டி வரும் அண்ணா பல்கலைக்கழகம், கடந்த 17ம் தேதி மதியம், 'மாணவர்கள் மறுதேர்வு எழுதும் வழிமுறைகள்' குறித்து உறுப்பு கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளது.

மாணவர்கள் தேர்வின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

அந்த வழிமுறைகள், "தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே, வினாத்தாளை உரிய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கல்லூரி நிர்வாகம் அந்த வினாத்தாளை வாட்ஸ் அப், இ-மெயில் போன்ற வழிகளில் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தெரிவிக்கும். 30 ஏ4 தாள்களில் இருபக்கங்களிலும் கருப்பு அல்லது நீல நிற பேனாவை பயன்படுத்தி மாணவர்கள் தேர்வு எழுதலாம். 'டைப்' செய்து அனுப்பி வைக்கும் முறை கூடாது. ஒவ்வொரு தாளின் மேல் பகுதியில் மாணவர்களின் தேர்வு எண்ணும், மாணவர்களின் பெயரும், சரியான சப்ஜெக்ட் கோடும் (subject code) எழுதப்படவேண்டும். அதேபோல தாளின் கீழ்ப்பகுதியில் பக்க எண் மற்றும் மாணவரின் கையொப்பம் இடம் பெற்றிருக்க வேண்டும். எழுதி முடிக்கப்பட்ட விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பி.டி.எஃப் ஃபைல் (PDF file) வடிவில் மாற்ற வேண்டும். பி.டி.எஃப் ஃபைலுடைய பெயராக, தேர்வு எண்ணும், சற்று இடைவெளிவிட்டு சப்ஜெக்ட் கோடும் பதிவிட்டு சேமிக்க வேண்டும். பின்னர் கல்லூரி நிர்வாகம் கூறும் வழி முறையில் அனுப்ப வேண்டும்.

குறிப்பாக மாணவர்கள் விடைத்தாளை ஸ்கேன் செய்து பி.டி.எஃப் ஃபைலாக மாற்றும் முறையை நன்கு அறிந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
தேர்வு முடிவுகள்
தேர்வு முடிவுகள்

தேர்வு எழுதி முடித்த விடைத்தாள்களை உறையிலிட்டு அன்றைய தினமே தங்களுடைய கல்லூரிகளுக்கு விரைவு அல்லது பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி விடவேண்டும். மாணவர்கள் கல்லூரிக்கு நேரில் சென்று கொடுக்கக்கூடாது. மதியம் தேர்வு நடைபெறும் பட்சத்தில் மறுநாள் காலையில் கட்டாயம் விடைத்தாளை தபாலில் அனுப்பி விடவேண்டும். இல்லையெனில் அந்த மாணவர் 'ஆப்சென்ட்' எனக் கருதப்படுவார். அதேசமயம் விடைத்தாளில் மாணவர்களின் கையெழுத்தும் சரிபார்க்கப்படும்.

இந்த வழிமுறைகள் அனைத்தும் இந்தத் தேர்வின் போது பின்பற்றப்பட உள்ளதாக உறுப்பு கல்லூரி முதல்வர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். இம்முறை, மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த வழிமுறையை பின்பற்ற உள்ள அண்ணா பல்கலைக்கழகம், எதிர்வரும் தேர்வுகளிலும் இவ்வழிமுறையை பின்பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு