Published:Updated:

மகளுக்குப் பதவி... ஆன்லைன் செமஸ்டர் கோல்மால்?! - விசாரணை கமிஷனால் மிரண்ட சூரப்பா!

சூரப்பா
சூரப்பா ( Jerome )

அண்ணா பல்கலைக்கழகத்தில், கடந்த செமஸ்டர் தேர்வை பெங்களூரு நிறுவனம் ஒன்று ஆன்லைனில் நடத்தியது. இந்த முறையும் செமஸ்டர் தேர்வை நடத்த 9.25 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டிருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது தமிழக அரசு. ``சூரப்பாவின் பதவிக் காலம் முடிவதற்குள் விசாரணை கமிஷன் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பார்களா என்பது கேள்விக்குறி. அவர் கையாண்ட இரண்டு விஷயங்கள்தான், இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம்" என்கின்றனர் கல்வியாளர்கள்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்ற பிறகு, பல மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கட்சிகள் கண்டனம் தெரிவித்தும், மாநில அரசு எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கினார் ஆளுநர். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குத் தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இருந்தும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவைக் கொண்டு வந்தார் அவர். இதே பாணியில், ஏற்கெனவே தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு ஆந்திராவைச் சேர்ந்த சூரியநாராயண சாஸ்திரியையும், தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்துக்கு கேரளாவைச் சேர்ந்த பிரமிளா தேவியையும் நியமனம் செய்தார்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக பதவியேற்ற நாளிலிருந்தே, உயர்கல்வித் துறையோடு பல விஷயங்களில் முரண்பட்டார் சூரப்பா. ஆளுநரின் ஆசீர்வாதம் இருந்ததால், சூரப்பாவை எதிர்த்து மாநில அரசால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தநிலையில், அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில், மாநில அரசின் முடிவை எதிர்த்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவுக்கு கடிதம் அனுப்பினார் சூரப்பா. இதற்கு ஏ.ஐ.சி.டி.இ தரப்பிலிருந்து வந்த மெயில் குறித்தும் பேட்டியளித்தார். இதை எதிர்பாராத உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ` மெயிலில் என்ன இருக்கிறது என்பதை அறிந்த பிறகு, கருத்து தெரிவிப்போம்' என்றார். தமிழக எதிர்க்கட்சிகளின் பாணியில் மாநில அரசுக்கு எதிராக ஒரு துணைவேந்தர் செயல்படுவதை, உயர்கல்வித் துறையில் அங்கம்வகிக்கும் அதிகாரிகளும் ரசிக்கவில்லை.

கே.பி.அன்பழகன்
கே.பி.அன்பழகன்

அதேநேரம், பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து (GOI) பெறுவதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு துணைவேந்தர் சூரப்பா எழுதிய கடிதம், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் எழுதிய கடிதத்தில், `அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி நிறுவனம் என்கிற அந்தஸ்தைப் பெறுவதற்கு ஆண்டுக்கு ரூ.314 கோடி என ஐந்து ஆண்டுகளில் ரூ.1,570 கோடி தேவைப்படுகிறது. இதற்கான நிதியைப் பல்கலைக்கழகமே எளிதில் பூர்த்தி செய்துகொள்ள முடியும்' என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் இட ஒதுக்கீடு பாதிக்கும் எனக் குரல்கள் வந்தபோது, மாநில அரசின் சட்டத்தின்படி எந்தத் தடையும் இல்லை என மத்திய அரசு கூறியதாக சூரப்பா தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள்! - விசாரணை குழு அமைத்தது தமிழக அரசு #NowAtVikatan

இந்தநிலையில், துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேட்டுப் புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை அமைத்திருக்கிறது தமிழக அரசு. இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், ``அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த செமஸ்டர் தேர்வை பெங்களூரு நிறுவனம் ஒன்று ஆன்லைனில் நடத்தியது. இந்தமுறையும் செமஸ்டர் தேர்வை நடத்த 9.25 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. வழக்கம்போல பெங்களூரு கம்பெனியே வர வேண்டும் என்பதற்காக துணைவேந்தர் தரப்பினர் வேலை பார்த்துவருகின்றனர். `இந்த ஆன்லைன் தேர்வை பல்கலைக்கழகத்தால் நடத்த முடியாதா? ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் எளிதாக நடத்த முடியுமே...’ என்ற வாதத்தையையெல்லாம் சூரப்பா தரப்பினர் புறம்தள்ளிவிட்டனர். இதே ஆன்லைன் தேர்வை, பல்கலைக்கழகத்திலுள்ள வசதிகளைவைத்து 2.25 கோடி ரூபாயிலேயே நடத்த முடியும்.

`எமினன்ஸ் அந்தஸ்து; சூரப்பாவின் கடித சர்ச்சை!'- அண்ணா பல்கலையை ஏன் குறிவைக்கிறது மத்திய அரசு?

இதுதவிர, ஐ.ஐ.டி-யில் பணியாற்றிவந்த அவரின் மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் கௌரவப் பதவி வழங்கியிருக்கிறார். இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்தில் சூரப்பா குடும்பம் சொல்வதுதான் எடுபடுகிறது. இது குறித்து அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இனியும் பொறுமையாக இருக்க முடியாது என்ற எண்ணத்தில், விசாரணைக்குழுவை அமைத்திருக்கிறார்கள்" என்றார் விரிவாக.

தமிழக அரசின் முடிவு குறித்து, பேராசிரியர் சிவக்குமாரிடம் பேசினோம். `` பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக உயர் கல்வித்துறை அமைச்சர் இருக்கிறார். எனவே, பல்கலைக்கழக விதிகளின்படி, விசாரணை கமிஷனை அமைப்பதற்கு அமைச்சருக்கு அதிகாரம் உண்டு. இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. அதுவும், சூரப்பாவின் பதவிக் காலம் முடிவதற்குள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது கேள்விக்குறி. சூரப்பாவைப் பொறுத்தவரை, இரண்டு விஷயங்களில் மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் செயல்பட்டிருக்கிறார்.

பேராசிரியர் சிவக்குமார்
பேராசிரியர் சிவக்குமார்

ஒன்று, அரியர் தேர்ச்சி தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ-க்கு சூரப்பா அனுப்பிய கடிதம், இரண்டாவது எமினன்ஸ் அந்தஸ்து தொடர்பாக பணத்தைப் பல்கலைக்கழமே திரட்டுவது தொடர்பாக மத்திய மனிதவள அமைச்சகத்துக்கு அவர் அனுப்பிய கடிதம் ஆகிவை. மாநில அரசைக் கலந்தாலோசிக்காமலேயே அவர் செயல்பட்டார். மேலும், துணைவேந்தராக வந்த பிறகு சூரப்பா என்னென்ன ஊழல்கள் செய்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியில் வரவில்லை. எனவே, அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. மாநில அரசு நியமித்திருக்கும் கமிஷன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை" என்றார் உறுதியாக.

அடுத்து, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பேசினோம். `` பல்கலைக்கழகம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால், துணைவேந்தராக வருபவர்கள் அரசுக்கு அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு அளித்தால்தான் முடியும். சூரப்பாவைப் பொறுத்தவரையில், வேண்டுமென்றே அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்தார். இதுவரையில் எந்தத் துணைவேந்தரும் இப்படி நடந்துகொண்டது கிடையாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இருப்பவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. விசாரணையின் முடிவில் பல உண்மைகள் வெளியில் வரும். இந்த விசாரணை கமிஷனில் சூரப்பாவுக்கு விருப்பம் இல்லையென்றால், அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுக் கிளம்புவது நல்லது" என்றார் இயல்பாக.

பெங்களூரு புகழேந்தி
பெங்களூரு புகழேந்தி

விசாரணை கமிஷன் தொடர்பாகப் பேட்டியளித்த சூரப்பாவும், ''என் மீதான புகார்களில் உண்மை இல்லை என்று அனைவருக்கும் தெரியும். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பைசாகூட முறைகேடு செய்யப்படவில்லை. இந்தப் புகார்களால் எனது பணிகளுக்கு முட்டுக்கட்டை போட முடியாது. என் மீதான புகார்கள் எனக்கே ஆச்சர்யம் அளிக்கின்றன. எனது பதவிக்காலத்தில் நேர்மையைக் கடைபிடித்திருக்கிறேன். பணி நியமனங்களில் முறைகேடு நடந்திருந்தால் ஆதாரத்தைக் காட்டட்டும்'' என்றார் கொதிப்புடன்.

சூரப்பா மீதான புகார்களை விசாரித்து, மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என விசாரணைக் குழுவுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. உண்மையிலேயே நடவடிக்கை எடுப்பார்களா அல்லது கண்துடைப்பா என்பது போகப் போகத்தான் தெரியும்.

அடுத்த கட்டுரைக்கு