Published:Updated:

அரசு கோட்டாவில் கூடுதல் கட்டணம்; அடுக்கடுக்கான புகார்கள்! - என்ன நடக்கிறது டி.பி.ஜெயின் கல்லூரியில்?

டி.பி.ஜெயின் கல்லூரி

கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பிரிவுகளில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக, ரூ.40 ஆயிரத்துக்கும் மேல் வசூலித்ததாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன.

அரசு கோட்டாவில் கூடுதல் கட்டணம்; அடுக்கடுக்கான புகார்கள்! - என்ன நடக்கிறது டி.பி.ஜெயின் கல்லூரியில்?

கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பிரிவுகளில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக, ரூ.40 ஆயிரத்துக்கும் மேல் வசூலித்ததாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன.

Published:Updated:
டி.பி.ஜெயின் கல்லூரி

சென்னை, துரைப்பாக்கத்தில் டி.பி.ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற அரசு உதவிபெறும் கல்லூரி செயல்பட்டுவருகிறது. 1972-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டுவரும் இந்தக் கல்லூரியின் பத்துத் துறைகளில் ஆண்டுதோறும் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுக் கட்டணத்தில் பயில்கின்றனர்.

டி..பி.ஜெயின் கல்லூரி
டி..பி.ஜெயின் கல்லூரி

அந்த சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் ஒரே அரசு உதவிபெறும் கல்லூரி இதுதான் என்பதால் செம்மஞ்சேரி, கண்ணகி நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் அங்கு படித்துவருகின்றனர். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் உயர்கல்விக் கனவை நனவாக்குவதில் இந்தக் கல்லூரி பெரும் பங்கு வகிக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் அணுகுமுறைகள், நடவடிக்கைகள்மீது கடந்த சில ஆண்டுகளாக புகார்கள் எழுந்திருக்கின்றன. இந்தக் கல்லூரியில் சுயநிதிப் பிரிவுகள் செயல்படுகின்றன. அரசு உதவிபெறும் பிரிவுகளைவிட சுயநிதிப் பிரிவுகளில் பல மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. அதாவது, அரசு உதவிபெறும் பிரிவில் ஆண்டுக்கு ரூ.850 நிர்ணயிக்கப்பட்டால், சுயநிதிப் பிரிவில் ரூ.42,000 வசூலிக்கப்படுகிறது என்று மாணவர்கள் கூறுகிறார்கள்.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பிரிவுகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக, ரூ.40 ஆயிரத்துக்கும் மேல் வசூலித்ததாகவும் புகார்கள் உண்டு. 2020-ம் ஆண்டிலிருந்து அரசு உதவிபெறும் பிரிவில் மாணவர் சேர்க்கையைக் கல்லூரி நிர்வாகம் நிறுத்திவிட்டதாக மாணவர்கள் புகார் சொல்கிறார்கள்.

பெண்கள் விடுதி
பெண்கள் விடுதி

அதேபோல, 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அரசு உதவிபெறும் பிரிவில் பேராசிரியர்கள், ஊழியர்களை நியமிப்பதை கல்லூரி நிர்வாகம் நிறுத்தியிருக்கிறது. மேலும், ஆறு ஆண்டுகளாகத் தகுதியான முதல்வரை நியமிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அரசின் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளையும், அதிக கட்டணம் வசூலித்ததையும் கண்டித்ததற்காக, 11 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதைக் கண்டித்துப் பேராசிரியர்கள் போராடிவருகின்றனர்.

2016-க்குப் பிறகு அரசு உதவி பெறும் பிரிவு, ஏறத்தாழ சுயநிதிக் கல்லூரிப் பிரிவாகவே மாற்றப்பட்டிருக்கிறது. அதிக கட்டணம் செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் நிர்பந்தம் கொடுத்ததால், அரசு உதவிபெறும் பிரிவுகளில் பயின்ற ஏராளமான ஏழை மாணவர்கள் படிப்பைக் கைவிடும் நிலை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

பின்னர், அரசு உதவிபெறும் பிரிவில் மாணவர்கள் சேரவில்லை என்று கூறி அதை சுயநிதிப் பிரிவாக மாற்றி அதிக கட்டணம் வசூலிப்பதே கல்லூரி நிர்வாகத்தின் நோக்கம் என்று அந்தக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த விவகாரம் குறித்து மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கண்டன அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன. இந்திய மாணவர் சங்கம், குடியிருப்போர் நல சங்கம் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.

மாணவர் சங்கம் போராட்டம்
மாணவர் சங்கம் போராட்டம்

இந்த விவகாரம் குறித்து இந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய சம்பத்திடம் பேசினோம். ``அரசு உதவிபெறும் பிரிவுகள் அனைத்தையும் சுயநிதிப் பிரிவின் கீழ் கொண்டுவர கல்லூரி நிர்வாகம் முயன்றது. ஆனால், அப்படியெல்லாம் மாற்ற முடியாது என்று 2020-ம் ஆண்டு கல்லூரி கல்வி இயக்குநரகம் கடிதம் அனுப்பியது. அதை, கல்லூரி நிர்வாகம் பொருட்படுத்தவில்லை.

அரசு உதவிபெறும் பட்டப்படிப்புகளில் படித்துவரும் மாணவர்களிடம், சுயநிதிப் பிரிவுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை குறித்து கேள்வியெழுப்பிய பேராசிரியர்களைக் கல்லுரி நிர்வாகம் பணிநீக்கம் செய்துவிட்டது” என்றார் சம்பத்.

இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் பாரதி, ``இந்தக் கல்லூரியில் அரசு உதவிபெறும் பாடத்தில் மாணவர் சேர்க்கைக்காகக் கேட்டோம். அதற்கு, தன்னாட்சி பாடப்படிப்புக்கான விண்ணப்பத்தைக் கொடுத்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடத்தப்படாததால் 4,500 மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோயிருக்கிறது.

சம்பத்குமார்
சம்பத்குமார்

கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறாததால், அந்தப் பிரிவுகள் மாணவர்களே இல்லாமல் காலியாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தக் கல்வி ஆண்டிலேயே அரசு உதவிபெறும் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும்” என்றார்.

முதல்வர் ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன்.பெ.சண்முகம்
முதல்வர் ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன்.பெ.சண்முகம்

இந்தக் கல்லூரிப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துவந்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான இரா.நல்லகண்ணு, தமிழ்நாடு அரசின் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு இந்தப் பிரச்னைக்கு அரசு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் ஆகியோர் கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது, டி.பி.ஜெயின் கல்லூரிமீதான புகார்கள் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று முதல்வரிடம் அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து டி.பி.ஜெயின் கல்லூரி நிர்வாகத் தரப்பின் விளக்கத்தைக் கேட்பதற்காக கல்லூரிச் செயலாளர் ஹரீஸ் மேத்தாவைத் தொடர்புகொண்டோம். அவர், ``மீட்டிங்கில் இருப்பதால் பின்னர் பேசுகிறேன்" என்பதோடு முடித்துக்கொண்டார்.

கல்லூரி நிர்வாகம் விளக்கமளிக்கும் பட்சத்தில் அதை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.