Published:Updated:

NEP 2020: பிச்சுப்போட்ட பரோட்டாவா... கூட்டாட்சிக்கு சவாலா?! அனல் விவாதம்

NEP 2020 குறித்து பிரதமர் கூட்டிய கூட்டம்
NEP 2020 குறித்து பிரதமர் கூட்டிய கூட்டம்

`பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மத்திய அரசு முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது…’ என்று விமர்சனங்கள் எழும் நேரத்தில், தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக மாநில ஆளுநர்கள் மாநாட்டை மத்திய அரசு நடத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் ‘தேசியக் கல்விக் கொள்கை 2020’ (NEP 2020) வரைவு அறிக்கைமீது தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. `மும்மொழிக் கொள்கை’ உட்பட அதில் இடம்பெற்றிருக்கும் பல அம்சங்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. `மும்மொழித் திட்டத்தை ஏற்க முடியாது. இரு மொழிக்கொள்கையே நீடிக்கும்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

என்.இ.பி 2020 குறித்து தமிழக அரசு உட்பட பல மாநில அரசுகள் முடிவெடுப்பதற்கு முன்பாகவே, மாநில ஆளுநர்கள் மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் மாநாட்டை மத்திய அரசு நடத்தியிருக்கிறது. செப்டம்பர் 7-ம் தேதி நடைபெற்ற அந்த மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்ட மாநில ஆளுநர்களும், துணை வேந்தர்களும், மாநிலக் கல்வி அமைச்சர்களும் பங்கேற்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`என்.இ.பி 2020 குறித்து மாநில அரசுகள் எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பாகவே, மாநில ஆளுநர்களை அழைத்து பிரதமர் மாநாடு நடத்துவது நியாயமா?’ என்ற கேள்வியும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ``நாடாளுமன்றத்தில் என்.இ.பி 2020 குறித்து விவாதம் நடத்துவதற்கு முன்பாகவே, 2021-2022 கல்வியாண்டு முதல் தேசியக் கல்விக் கொள்கையைப் படிப்படியாகச் செயல்படுத்துவது என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது” என்று விமர்சித்திருக்கிறார்.

`மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் (Concurrent List) என மூன்று பட்டியல்கள் அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளன. பொதுப் பட்டியல் என்பதுகூட சரியான மொழிபெயர்ப்பு கிடையாது. Concurrent என்பதற்கு `ஒப்பிசைவு’ என்று அர்த்தம். அதாவது, மத்திய அரசும் மாநில அரசும் ஒத்திசைந்து ஒன்றைச் செய்வது என்று பொருள்.

அப்படியிருக்கும்போது, அந்தப் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒன்றை மத்திய அரசு தாமாகவே எடுத்துக்கொள்ளுமென்றால், பொதுப் பட்டியல் என்ற ஒன்று தேவையே இல்லையே...’ என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அப்படி, மாநில அரசைப் பொருட்படுத்தாமல் கல்வியில் தன் முழு அதிகாரத்தையும் மத்திய அரசு செலுத்துகிறது என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

பிரின்ஸ் கஜேந்திர பாபு
பிரின்ஸ் கஜேந்திர பாபு

இது குறித்து பள்ளிக்கல்விக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம். ``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு என்.இ.பி 2020 குறித்து இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதை ஆராய்வதற்கான குழுக்கள் மட்டும் மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்கள் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அது அமைச்சரவையில் வைக்கப்பட்டு, பிறகு சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும். அப்படியிருக்கும்போது, மாநில ஆளுநர்களை அழைத்து, `உங்கள் மாநிலத்தில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள்’ என்று சொல்வது எந்த வகையில் மக்களாட்சி மாண்புக்கு உட்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார் அவர்.

மேலும் அவர் தொடர்கையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரப் பகிர்வு என்பது மிகத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. 1949, நவம்பர் 25 அரசியல் சாசன நிர்ணய சபையில் விவாதங்களைத் தொகுத்துப் பேசிய அந்தக் குழுவின் தலைவரான டாக்டர் அம்பேத்கர், `மாநிலங்களை நகராட்சி நிலைக்கு நாங்கள் குறைத்துவிட்டோம் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

மத்திய அரசும் மாநில அரசுகளும் சமமான நிலையில்தான் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு இடையில் அதிகாரப் பகிர்வு இருக்கிறது. மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தன் விருப்பம்போல எடுத்துக்கொள்ள முடியாது’ என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது?

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பல்கலைக்கழகங்களை உருவாக்குதல், கலைத்தல், ஒழுங்குபடுத்துதல் ஆகியவை மாநில அரசின்கீழ் வருகின்றன. மத்திய அரசுக்கு அந்த அதிகாரம் கிடையாது. சிறப்புச் சட்டங்கள் மூலம் மத்தியப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது வேறு விஷயம். ஆனால், அரசமைப்புச் சட்டப்படி, பல்கலைக்கழகத்தை ஒழுங்குபடுத்துவது என்பது மாநிலம் சம்பந்தப்பட்டது. அப்படியிருக்கும்போது, பல்கலைக்கழகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும் எனறால், அதை எப்படி ஏற்க முடியும்? என்.இ.பி 2020-ன்படி, அகில இந்திய அளவில் அமைக்கப்படவிருக்கும் ஆணையம்தான் உயர்கல்வியைத் தீர்மானிக்கப்போகிறது. அப்படியென்றால், கல்வியில் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கப்போகிறார்கள்.

அரசியல் சட்டத்தின் மிக முக்கியமான அடிப்படைக்கூறு என்பது கூட்டாட்சி. அந்தக் கூட்டாட்சிக்கு சவால்விடுவதாக என்.இ.பி 2020 இருக்கிறது. அரசியல் சாசனத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கர் சொன்ன விளக்கத்துக்கும், அவரது உறுதிமொழிக்கும் முரணாக என்.இ.பி 2020 இருக்கிறது. அப்படிப்பட்ட கல்விக் கொள்கையை மாநில ஆளுநர்களைவைத்து நடைமுறைப்படுத்துமாறு குடியரசுத் தலைவரோ, பிரதமரோ சொல்கிறார்களென்றால், அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அரசியல் சட்டத்தின்படி நடப்பதாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட இவர்கள், அந்த அரசியல் சட்டத்துக்கு முரணான ஒரு கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு கூறுவது நியாயமா?

என்.இ.பி 2020 குறித்த கலந்துரையாடல்
என்.இ.பி 2020 குறித்த கலந்துரையாடல்

என்.இ.பி 2020 நடைமுறைக்கு வருமானால், கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் போய்விடும். மத்திய அரசு கூறுவதைச் செயல்படுத்தும் ஏஜென்ட்டுகளாக மட்டுமே மாநில அரசுகள் இருக்கும்” என்றார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசுவிடம் பேசினோம். ``தேசியக் கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து, அதை நடைமுறைப்படுத்த உரிய பரிந்துரைகளை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அரசாணை ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது. தாய்ப்பூனை உள்ளே நுழைய ஒரு பெரிய வழியும், அதன் குட்டிப்பூனை நுழைய தனியே ஒரு சிறிய வழியுமாக அமைத்த கதையாக, ஒரே கல்விக் கொள்கையை ஆராய, தற்போது உயர் கல்வி, பள்ளிக்கல்வி என்று தனித்தனியே இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதில் வேதனை கலந்த வேடிக்கை என்னவென்றால், பள்ளிக் கல்வி அமைந்துள்ள இந்தக் குழு தன் இறுதி அறிக்கையை அளிப்பதற்கான காலவரம்பு, அந்தக் குழு அமைக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் என்பதாகும். அதாவது, 2021-ம் ஆண்டு செப்டம்பர் வரை இவர்கள் ஆய்ந்து ஆராயப்போகிறார்களாம். இடைப்பட்ட ஒரு வருடமும், நடு நடுவே, `பிச்சுப்போட்ட விருதுநகர் பரோட்டா மாதிரி’ அவ்வப்போது இடைக்கால அறிக்கைகளைத் தனித்தனியே தரப்போகிறார்களாம்” என்று பகடி செய்தார் தங்கம் தென்னரசு.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தப் பிரச்னை குறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த பேராசிரியர் சீனிவாசனிடம் பேசினோம். ``தேசிய அளவில் ஒரு கல்விக் கொள்கை சம்பந்தமான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அது குறித்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் விவாதிக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருப்பவர் மாநில ஆளுநர். மத்தியப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருப்பவர் குடியரசுத் துணைத் தலைவர். எனவே, அந்த அடிப்படையில் என்.இ.பி 2020 குறித்து இவர்களெல்லாம் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றுள்ளது. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் அதில் பங்கேற்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதை விமர்சிப்பது மிகவும் தவறானது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்... பலே திட்டங்களுடன் தமிழக எம்.பிக்கள்!

தமிழ்நாட்டிலிருந்துதான் இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. தமிழ்நாடு ஒன்றும் இலங்கையைப்போல தனி நாடு கிடையாது. எது மாநில சுயாட்சி, எது மாநில உரிமை என்று தெரியாமல் இவர்கள் பேசுகிறார்கள். பொதுப் பட்டியலில் கல்வி இருக்கிறது. அதில் மாநிலங்களுக்கு சில உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மொழிக்கொள்கையில் எந்த மொழியை வைத்துக்கொள்ளலாம் என்பதை மாநில அரசு முடிவு செய்துகொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

சித்திரம்
சித்திரம்

மத்திய அரசை விமர்சிப்பவர்கள், இந்தியா என்கிற ஒரு நாடு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா? இந்தப் பிரச்னை கல்விக் கொள்கையில் வரவில்லை. தேசம் பற்றிய அவர்களின் கொள்கையில் வருகிறது. `காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நாடு’ என்று வெளியே பேசிக்கொண்டு, உள்ளுக்குள் அதை ஏற்காதவர்கள்தான் இது போன்ற கருத்துகளைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க மாதிரி ஒரு கட்சி ஆட்சியில் இருந்து, வலிமையான பிரதமர் இருக்கிறபோது, தேசநலன் சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தையும் `மாநில நலன்களுக்கு எதிரானவை’ என்று இவர்கள் பிரசாரம் செய்துகொண்டுதான் இருப்பார்கள். அந்த அணுகுமுறை தவறானது. எனவே, அவர்களின் விமர்சனங்களை நாங்கள் நிராகரிக்கிறோம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு