Published:Updated:

ஜே.என்.யூவில் மட்டுமல்ல... அண்ணா பல்கலைக்கழகத்திலும் கட்டண உயர்வு... தவிக்கும் மாணவர்கள்!

விடுதிக் கட்டணமாக பத்து ரூபாய் செலுத்துவது நியாயமா என்று நிறைய பேர் கேட்கலாம்.. ஆனால்!

உயர்கல்வி
உயர்கல்வி

குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி அரசு பல்கலைக்கழகங்களில் கிடைப்பதால்தான் மாணவர்கள் அரசின் கல்வி நிறுவனங்களை நாடுகின்றனர். ஆனால், இந்த வருடத்தில் நாடு முழுவதும் கல்விக் கட்டண உயர்வை பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் தொடர்ந்து அறிவித்துவருகின்றன. 20 வருடங்களுக்குப் பிறகு கடந்த மே மாதத்தில் அண்ணா பல்கலைக்கழகம் கட்டண உயர்வை அறிவித்தது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் (2019-20) சேர்ந்த மாணவர்கள் சென்ற வருடம் சேர்ந்தவர்களைவிட இரு மடங்கு கட்டணம் செலுத்துகின்றனர். ஒரு செமஸ்டரின் கட்டணம் `ரெகுலர்' வகை இன்ஜினீயரிங் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு சுமார் எட்டாயிரம் ரூபாயிலிருந்து தற்போது பதினைந்தாயிரம் ரூபாயாக, கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்ந்துள்ளது.

இதற்குப் பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 50 ரூபாயிலிருந்து 1,200 ரூபாயாகவும், பொது பிரிவினருக்கு 750 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ தெரிவித்தது. மேலும், `மைக்ரேஷன்' கட்டணத்தை 200 ரூபாய் உயர்த்தியது. மேலும், செப்டம்பர் மாதத்தில் ஐ.ஐ.டி-களில் முதுகலைப் பட்டப்படிப்பு படிப்போருக்கான கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட உள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன. அதன்படி, வருடத்துக்கு 50,000 என இருக்கும் கட்டணம், 2 லட்சமாக உயரும் என்று சொல்லப்பட்டது.

உயர்கல்வி
உயர்கல்வி

இதைத்தொடர்ந்து ஐ.ஐ.டி-களில் சேர முனையும் மாணவர்கள் போராட்டம் நடத்த, தற்போது இருக்கும் மாணவர்களுக்கு கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகு சேரும் மாணவர்களுக்குதான் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்; அதுவும் மூன்று வருடங்களில் படிப்படியாக உயர்த்தப்படும் என்று மனிதவள மேம்பாடு ஆணையம் அறிவித்தது. இப்படி மாதந்தோறும் ஒவ்வொரு அறிவிப்பாக வர, நவம்பர் மாதம் டெல்லியில் இயங்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் கட்டண உயர்வுக்கான சுற்றறிக்கையை வெளியிட்டது பல்கலைக்கழக நிர்வாகம்.

அதாவது, ஒரு நாளுக்கு 10 ரூபாயாக இருந்த விடுதிக் கட்டணம் சுமார் 300 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிப்பு வந்தன. இதை எதிர்த்து மாணவர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதனால் கட்டண உயர்வின் அளவைக் குறைப்பதாக நிர்வாகம் செய்தி வெளியிட்டது. இப்படி இந்த வருடத்தில் மட்டுமே பல அரசு பல்கலைக்கழகங்களில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண உயர்வுக்குக் காரணம் கூறும் கல்விக் கழகங்களின் நிர்வாகங்கள், `செலவுகளையும் பேராசிரியர்களுக்கான சம்பளத்தையும் ஈடுகட்டவே இத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது' என்கிறார்கள்.

உயர்கல்வி
உயர்கல்வி

ஆனால், இந்தக் கட்டண உயர்வு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விமர்சிக்கிறார் கல்விச் செயற்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு. அவர் கூறுகையில், ``கல்வி என்பது ஒவ்வொரு நாட்டின், சமூகத்தின் தேவைகளைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப் பெற்றபோது, பிரிவு 45 இன் கீழ் அரசுக்கு உரிதாக்கும் விதிமுறைகளில் பத்து வருடங்களுக்குள்ளே கட்டணமில்லாக் கட்டாய கல்வியைக் (தொடக்க கல்வி) கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். இப்போது அந்தச் சட்டம் மாற்றப்பட்டுள்ளது. அப்படி சொன்னதற்கான காரணம் என்னவென்றால், பள்ளிக் கல்வியைக் கட்டணமில்லாமல் கொடுத்தால்தான் அடுத்து பத்து வருடங்களுக்குள் உயர்கல்வியையும் கட்டணமில்லாமல் கொடுக்க முடியும் என்பதே.

பல்வேறு சமூக ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பாகுபாடான சமூக அமைப்பு கொண்ட இந்த நாட்டில் கல்வி சமமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அது அரசு கொடுத்தால் மட்டுமே நடக்கும்; சமமான கற்றல் வாய்ப்பையும் கொடுக்கும். அரசு நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களில் கட்டணத்தை உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் மலைகள், குக்கிராமங்கள் போன்ற இடங்களில் இருந்து பல்வேறு கனவுகளோடு படிக்க வருகிறார்கள். விடுதிக் கட்டணமாக பத்து ரூபாய் செலுத்துவது நியாயமா என்று நிறைய பேர் கேட்கலாம்.

Prince Gajendra Babu
Prince Gajendra Babu

ஆனால், அவர்களுக்கு பத்து ரூபாய் என்பதே பெரிய தொகை என்று அவர்தம் குடும்ப சூழ்நிலையைப் பார்க்கும்போதுதான் தெரியும். கல்விக் கட்டணத்தை உயர்த்துவது முதல் தலைமுறையாக பல்கலைக்கழகத்தில் கால் எடுத்துவைப்பவர்களுக்கு இனிமேல் கல்வி கற்க முடியாத சூழலை உருவாக்கும். இது நிச்சயமாக சமூக மேம்பாட்டுக்கும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் உதவாது. ஒரு நல்ல அரசு கட்டணமில்லா கல்வியைக் கொடுக்க முன்வர வேண்டும். 1920-களில் பம்பாய் சட்டப்பேரவையில் வரவுசெலவு கணக்கை அரசு வைத்தபோது அம்பேத்கர் `நடுநிலைக்கல்வி, உயர்கல்வி, கல்லூரி என்று செலவுசெய்யும் பணத்தில் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக வாங்குகிறார்கள். சராசரியாக 30 சதவிகிதம் வருகிறது. அந்த 30 சதவிகிதம் வணிகமயம் இல்லையா? எல்லாரும் கல்வி கற்க வேண்டுமென்றால் கல்வியை எந்த அளவுக்கு குறைவான கட்டணத்தில் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுக்க வேண்டும்' என்று பேசினார். அந்நியர் ஆட்சி நடந்த காலகட்டத்திலேயே அரசுதான் கல்வியைக் கொடுக்க வேண்டும் அதுவும் கட்டணமில்லாமல் கொடுக்க வேண்டும் என்று அம்பேத்கர் போராடினார்.

கற்றனைத் தூறும் அறிவு: கல்விக் கொள்கை வரைவு... மத்திய அரசின் நகை முரண்!

அப்படியென்றால் நாடு விடுதலை பெற்று, குடியரசாகி 70 ஆண்டுகளாக சட்டத்தின் ஆட்சியைக் கொண்டாடிவருகின்றோம். அப்போது அரசியலமைப்பு சட்டத்தின் விழுமியங்களையும் அதை இயற்றியவர்களின் நோக்கத்தையும் நிறைவேற்றக் கூடியவகையில், அரசு கட்டணமில்லாக் கல்வியைக் கொடுப்பதுதானே நியாயம். இருக்கின்ற கட்டணத்தையும் உயர்த்துவது அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானது.

ஜெர்மனியில் பல்கலைக்கழக கல்வியில் இலவசமாகக் கல்வி கொடுக்கப்படுகிறது. அதேபோல க்யூபா நாட்டிலும் எத்தனை பேர் மருத்துவருக்கு படிக்க எண்ணினாலும் படிக்க இயலும். எல்லா கல்வியையும் கட்டணமில்லாமல் க்யூபா நாட்டு அரசால் கொடுக்க முடிகிறது. எந்தச் சமூகத்தில் கட்டணமில்லா கல்வி கொடுக்கப்படுகின்றதோ அந்தச் சமூகத்தில்தான் தரமிக்க சமூக மேம்பாட்டையும் மனித வளர்ச்சியையும் பார்க்க முடியும்" என்றார்.

புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு செய்யப்பட்டிருக்கும் சூழலில், மத்திய அரசு ஆரோக்கியமானக் கல்விச் சூழலை பாதிக்கும் எதையும் மறுபரிசீலனை செய்யவேண்டியது அவசியம்!